Published:Updated:

மொச்சக்கா சாறு!

ஃபுட்ஸ்படங்கள்: எம்.உசேன்

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

##~##

பச்சைப் பட்டாணி கத்லி

 தேவையானவை: பச்சைப் பட்டாணி - 2 கப், சர்க்கரை - இரண்டரை கப், முந்திரிப் பருப்பு - 20, பால் - அரை கப், சர்க்கரை போடாத கோவா - அரை கப், ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சைப் பட்டாணியை வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் கூழாக அரைக்கவும். முந்திரிப் பருப்பை பாலில் ஊற வைத்து நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் 2 டீஸ்பூன் பால் விட்டு கொதிக்கவிடவும். சர்க்கரையின் அழுக்கு திரண்டு வரும். அதை நீக்கி விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு வந்ததும் பச்சைப் பட்டாணி விழுது  - முந்திரி விழுது சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டியானதும் சர்க்கரை போடாத கோவா சேர்த்து, ஜாதிக்காய் பொடி தூவி சுருள கிளறவும். பிறகு, நெய்  விட்டு கிளறி, பாத் திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

மொச்சக்கா சாறு!

பச்சை நிறத்தில் பார்க்க அழகாக இருப்பதுடன், சாப்பிட மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த கத்லி.

- கீதா, மயிலாப்பூர்

மொச்சக்கா சாறு

தேவையானவை: பச்சை மொச்சை - 2 கப், பூண்டு - 4 பல், விரளி மஞ்சள் - ஒன்று, சின்ன வெங்காயம் - 4, புளி - சிறிய எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, அரிசி - தலா ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மொச்சையை, கிள்ளு பதமாக வேக வைத்து, நீரை வடிக்கவும். புளியை ஊற வைத்து, கெட்டியாக அரை கப் அளவு கரைத்து வைக்கவும். கடுகு, அரிசியை மிளகாய் வற்றலுடன் சேர்த்து ஊற வைத்து மையாக அரைக்கவும். பூண்டை சிறிய குச்சியில் குத்தி, நேரடி தணலில் சுட்டு எடுக்கவும். ஆறியதும் தோலை உரிக்கவும். விரளி மஞ்சளையும் நேரடி தணலில் சுடவும். அரை கப் மொச்சையை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

மொச்சக்கா சாறு!

கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். புளித் தண்ணீர், வேக வைத்த மொச்சை, பூண்டு, அரைத்த மொச்சை, அரைத்த கடுகு விழுது, உப்பு சேர்த்து, கொதிக்கவிடவும். சுட்ட மஞ்சளை ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்கவும். மொச்சை வேக வைத்த தண்ணீரையும் சேர்க்கவும். தளதளவென கொதித்து வரும் போது அடுப்பை அணைத்து, கறிவேப்பிலை சேர்த்து மூடி வைக்கவும்.

இது, கர்நாடகா மாநில உணவு வகை. சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ஏற்றது. விருப்பப்பட்டால், சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

- ர.கிருஷ்ணவேணி, நொளம்பூர்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

பச்சைப் பட்டாணி கத்லி: பட்டாணியை நெய்யில் வதக்கி வேகவைத்து அரைத்தால், பச்சை வாசனை மிகவும் குறைந்துவிடும். குங்குமப்பூ சிறிதளவு சேர்த்தால் சுவை கூடும்.

மொச்சக்கா சாறு: பச்சை மொச்சை கிடைக்காவிட்டால், காய்ந்த மொச்சையை 8 மணி நேரம் ஊற வைத்து இதை செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு