Published:Updated:

டாம் குரூஸ்... சிக்கன்!

ஹாலிவுட் ஹீரோவின் இந்திய டேஸ்ட்ஃபுட்ஸ்

டாம் குரூஸ்... சிக்கன்!

ஹாலிவுட் ஹீரோவின் இந்திய டேஸ்ட்ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

ந்திய உணவு வகைகளுக்கு உலகம் பூராவும் மதிப்பும் மரியாதையும் ஏறிக் கொண்டிருக்கிறது. இதை, தானும் உலகுக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார்... 75 மில்லியன் டாலர்கள் என உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் பிரபல ஹாலிவுட் ஹீரோ டாம் குரூஸ்! இவருக்கு பிடித்த இந்திய உணவு... சிக்கன் டிக்கா!

சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள லண்டன் வந்தார் டாம் குரூஸ். அப்போது அருகிலிருக்கும் செட் அல்பன்ஸ் என்ற இடத்திலுள்ள 'வீர் தரா’ (veer dhara)
 என்கிற இந்திய உணவகத்துக்கு விசிட் அடித்தார். 'தெரிந்தவர் போல் காட்டி, தொந்தரவு செய்ய வேண்டாம்’ என முன்கூட்டியே வேண்டுகோள் வைக்கப் பட்டதால்... சாதாரண டி-ஷர்ட், ஜீன்ஸில் அங்கே வந்த உலக சினிமா நாயகன், சிக்கன் டிக்காவை ஒரு கை பார்த்ததோடு... கொஞ்சம் பரிதவிப்பிலும் சிக்கினார்!

அதைப் பற்றி சிலிர்ப்புடன் பகிர்ந்து கொள்ளும் ஹோட்டல் மேனேஜர் தார்ஸ்ஹிட் ஹோரா, ''யாருக்குமே அடையாளம் தெரியாத அளவுக்கு எளிமையாக நடந்து கொண்டார். பொறுப்பான தந்தையாக, மகள் இசபெல்லா வசதியாக டேபிளில் அமர்ந்திருக்கிறாரா என்று கவனித்துவிட்டு, பின் தானும் அமர்ந்தவர், என்னை அழைத்து... 'இந்திய உணவுகளில் சிக்கன் டிக்கா மசாலா நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதை கொண்டு வாருங்கள்’ என்றார்.

டாம் குரூஸ்... சிக்கன்!
டாம் குரூஸ்... சிக்கன்!

சிக்கனை சர்வ் செய்ததும், 'இந்திய உணவுகள் ருசியில் சிறந்தவை... அதேசமயம், காரம் அதிகம்’ என்று கூறியபடி அதை விரும்பிச் சுவைத்தார் டாம் குரூஸ். சாப்பிட்டு முடிந்ததும், 220.85 பவுண்ட்ஸ் பில் தொகைக்காக தன்னுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டை தந்தார். அந்த வகை கார்டுகளை ஏற்பதில்லை என்பதை தெரிவித்தோம். அவர் முகத்தில் தவிப்பு வெளிப்பட, அங்கிருந்த அவரின் பெண் ரசிகை ஒருவர், அவரின் நிலைமையை அறிந்து பில்லுக்கான தொகையைத் தந்தார். அதன் பிறகு சிரிப்புடன் சகஜமானார் குரூஸ்'' என்று சொன்னார் மேனேஜர்.

இச்சம்பவத்தை பாடலாக்கிவிட்டார்... டாம் குரூஸின் ரசிகையான இங்கிலாந்தைச் சேர்ந்த டரியா குலேஷ். தானே இசையமைத்து பாடும் டரியா குலேஷ், ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். தன் மனம் கவர்ந்த சினிமா நாயகனுக்கு நேர்ந்த இந்த சுவாரசிய சங்கடத்தை அவர் ஒரு பாடலாக்க, அதில்... டாம் குரூஸுக்கு இணை ஹீரோவாகிவிட்டது நம்ம ஊர் சிக்கன் டிக்கன் மசாலா! மார்ச் 8 அன்று நடைபெற்ற செட் ஆல்பன்ஸ் ஃபிலிம் பெஸ்டிவலில் இப்பாடலும் கலந்துகொள்ள... வெளிநாட்டவர்கள் பலரும் இப்போது, 'இன் சர்ச் ஆஃப் இந்திய சிக்கன் டிக்கா மசாலா'!

டாம் குரூஸ்... சிக்கன்!

சிக்கன் டிக்கா மசாலாவின் வரலாறு இன்று வரை தெளிவாக விளக்கப்படவில்லை. 'மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்திய சமையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது' என்றும், 'குந்தன் லால் குஜ்ரால் என்கிற இந்திய சமையல் கலைஞரால் கண்டுபிடிக்கப்பட்டது' என்றும் இருவகையான கதைகள் உண்டு. இதற்கிடையில், 'சிக்கன் டிக்கா மசாலா எங்களுடைய பாரம்பரிய உணவு' என்று உரிமை கொண்டாடுகிறது பங்களாதேஷ். பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற 7 உணவுகளுள்... சிக்கன் டிக்கா மசாலாவும் ஒன்று. அதனால், 'இது எங்கள் நாட்டுக்கு சொந்தமானது' என்று சொல்லும் பிரிட்டன்வாசிகளும் உண்டு.

பொதுவாக சொல்லப்படும் கருத்து, 'கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில், இந்தியாவிலிருந்து கோகினூர் வைரத்தைக் கொண்டு போனதுபோல... சிக்கன் டிக்கா மசாலாவின் ருசியையும் எடுத்துச் சென்ற பிரிட்டன்காரர்கள் உலகம் முழுவதும் அதன் பெருமையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்' என்பதுதான்.

எது எப்படியோ... இந்த உணவை திறம்பட சமைத்துப் பரிமாறிக் கொண்டிருப்பது என்னவோ இந்திய சமையல் கலைஞர்தான்.

- லண்டனிலிருந்து லாவண்யா

சிக்கன் டிக்கா

'வீர் தரா’ ஹோட்டலில் பரிமாறப்படும் சிக்கன் டிக்கா மசாலாவுக்கான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்: வெட்டிய சிக்கன் துண்டுகள் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மஞ்சள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - தேவையான அளவு, கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது 2 டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, தயிர் - அரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

டாம் குரூஸ்... சிக்கன்!

செய்முறை: பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தூள் எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து சிக்கனையும் அதனுடன் சேர்த்து புரட்டி வைக்கவும். அரை மணி நேரமாவது சிக்கன் ஊற வேண்டும். கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும்... பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். மசாலாவில் நன்றாக ஊறி இருக்கும் சிக்கனை எடுத்து தந்தூரி அடுப்பில் அல்லது நெருப்புத் தணலில் காட்டியபடி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். 'மைக்ரோவேவ் அவன்’-னில் வைத்தும்   வேக வைக்கலாம். சிக்கன் வெந்ததும் கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக கிளறவும். மசாலாவும் சிக்கனும் ஒன்றாக சேர்ந்தபின் அதன் மீது கொத்தமல்லி, புதினா தூவி அடுப்பை அணைக்கவும். சில நிமிடங்களில் சிக்கன் சூட்டில் கொத்தமல்லி, புதினா வெந்து, அதன் சாறும் சிக்கனில் இறங்கிவிடும். பிறகென்ன... சுடச்சுட பரிமாற வேண்டியதுதான்!

ரெசிபியை தந்த 'வீர் தரா' மேனேஜர், கூடவே தந்த ஆரோக்கிய டிப்ஸ்...

''சிக்கனை எண்ணெய் சேர்க்காமல் வேகவைப்பதால், எந்தக் கெடுதலும் இல்லை. காரத்துக்காக சேர்க்கப்படும் மிளகுத்தூள், உடம்பில் கொழுப்பை கரைக்க உதவுகிறது. பசி உணர்வைத் தூண்டுகிறது. மிளகாய் காரம் அதிகமானால், கண்களில் நீர் வருவதோடு உடம்பும் எரிய ஆரம்பித்துவிடும். ஆனால், மிளகு அப்படியில்லை. நாக்கிலிருந்து உணவு உள்ளே சென்றதும் கார உணவு மறைந்துவிடும். சளிக்கு சிறந்த மருந்து. சீரகம் வயிற்று மந்தத்தை போக்கி, சுத்தமாக்குகிறது.

பொதுவாக வெண்ணெய் கொழுப்பு நிறைந்தது என பலரும் தவிர்ப்பார்கள். ஆனால், கால்சியம் சத்து நிறைந்தது. வெண்ணெய். மீன், இறால் போன்ற கடல் உணவுகளுக்கு இணையான கால்சியம் கொண்டது வெண்ணெய். உணவிலுள்ள அத்தியாவசியமான தாது உப்புக்களை உடல் கிரகித்துக் கொள்ள, இந்த வெண்ணெய் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் 'ஏ’, கண்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.''