Published:Updated:

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

ஹோட்டல்: குமார் மெஸ்
லேண்ட்மார்க்: 96 ஏ, மேல பெருமாள் மேஸ்திரி தெரு,
டவுன் ஹால் ரோடு
(சுப்ரீம் ஹோட்டல் அருகில்), மதுரை-1
உணவு: அசைவ உணவு வகைகள்
செலவு: ஒரு நபருக்கு

சாப்பிட வாங்க!

250 முதல் 350 வரை

'சாப்பிட வாங்க...’ - முக்கிய நகரங்களில் உள்ள உணவகங்களை அதன் சுவை, தரம், சேவை என்பதன் அடிப்படையில் மதிப்பிட்டு, வாசகர்களுக்குப் பரிந்துரைக்கும் பகுதி!

துரையின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் 'குமார் மெஸ்’ உணவகத்தை... இம்முறை தேர்ந்தெடுத்தது 'அவள் ரெவ்யூ டீம்’! நகரில் ஐந்து கிளைகளுடன் இயங்கும் இந்த உணவகம், அசைவ உணவு வகைகளுக்கு உள்ளூர்வாசிகளிடம் பிரபலம். நாம் சென்ற டவுன் ஹால் ரோடு கிளை உணவகம், அப்பகுதியில் உள்ள செட்டிநாடு பாணியிலான வீடு ஒன்றை... பெரிய தூண்கள், காரைக்குடி பக்க கதவுகள், ஆத்தங்குடி டைல்ஸ், கை கழுவும் இடத்தில் வெங்கல குண்டா என்று அதன் பழமை மாறாமல் பொலிவாக்கி உருவாக்கப்பட்டிருந்தது! உணவகத்தின் சிறப்பும், செட்டிநாடு உணவு வகைகளே!

வார இறுதியில் கூட்டம் இருந்தாலும், இரண்டு பேர், நான்கு பேர், குழுவாக வந்திருப்பவர்கள் என்று அனைத்து தரப்புக்கும் ஏற்ற வசதிகளை செய்து வைத்துள்ளனர். முதலில் வாழை இலையைப் போட்டுவிட்டு, கையோடு உணவு வகைகளின் பெயர்கள் அடங்கிய அட்டையையும் கொடுக்கிறார்கள். வழக்கமான சிக்கன், மட்டன், மீன் குழம்பு, கிரேவி மட்டுமல்லாமல் 'ஷெல்லெஸ்’ நண்டு, நண்டு ஆம்லெட், மீன் ஆம்லெட் என்ற புது வகைகளுடன் புறா, காடை, முயல், வான்கோழி என்று நடப்பவை, பறப்பவை அனைத்தையும் தட்டில் தருகிறோம் என்கிறார்கள். புதிய உணவு வகைகளையும் தவறாமல் விளக்கிச் சொல்கிறார்கள். தேவையானவற்றைச் சொன்னதும், அதிகமாக காத்திருக்க வைக்காமல், விரைவாகவே கொண்டுவருகிறார்கள்.

சாப்பிட வாங்க!

பிரியாணி, சாப்பாடு என்று குழுவிலிருந்த ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி சொல்லி யிருந்தோம். குடும்பமாக வெளியில் சாப்பிட கிளம்பும்போது, அதில் சைவ உணவுக்காரர்கள் ஓரிருவர் இருப்பதுண்டு. அசைவ உணவு வகைகளைப் பொறுத்தவரை, எதுவுமே ஏமாற்றவில்லை. உணவு வகைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் அளவான காரத்தை சிறியவர்கள், வயதானவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். 'சுள்’ என்று சுவை தேடும் நாவுக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்தான். 'பரிமாறப்பட்ட நெய் மீன் துண்டு சரியாக வேகவில்லை' என்பதைச் சுட்டிக்காட்டியதும், பதறியபடியே மறுபேச்சின்றி திரும்ப எடுத்துக் கொண்டனர். சொன்னதை மட்டும் பரிமாறிவிட்டு ஒதுங்காமல், எதை ருசித்துச் சாப்பிடுகிறோம் என்பதை கவனித்து, 'அதே இறாலை இன்னொரு தடவை தரட்டுமா?' என்று அன்போடு கேட்டுப் கேட்டுப் பரிமாறுகிறார்கள்.

சாப்பிட வாங்க!

இந்த உணவகத்தில் வீட்டுத் தேவை மற்றும் விசேஷ தேவை போன்றவற்றுக்கு வீடு தேடி வந்து உணவைக் கொடுக்கும் வசதியும் இருக்கிறது. மதிய உணவு தவிர, இரண்டு மணிக்கு மேல் தந்தூரி உணவு வகைகள், இரவு இட்லி, தோசை, பரோட்டா, இடியாப்பம் மற்றும் நூடுல்ஸ் போன்ற சைனீஸ் உணவுகள், வட இந்திய உணவான தந்தூரி குல்சா வகைகள் என்று எல்லாம் கிடைக்கின்றன.

வார நாட்களில் டேபிளிலேயே ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் பரிமாறுவார்களாம். வார இறுதியில் கூட்டம் நெரிவதால், வெளியே வண்டிகளை நிறுத்தும் இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் தனியே அமைத்துள்ளனர்.  

மொத்தத்தில், வகை வகையாக, வயிறு நிறைய திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து, விலை விவரங்களைப் பார்த்தபோது... சாப்பிட்ட சுகம், இன்னும் கொஞ்சம் கூடியது!

- சுவைப்போம்...

படங்கள்: பா.காளிமுத்து

சாப்பிட வாங்க!

ரெவ்யூ டீமில் இம்முறை இடம் பெற்றவர்கள், மதுரையைச் சேர்ந்த நம் வாசகிகள் ஜெயசித்ரா, அன்பரசி மற்றும் ராஜேஸ்வரி கிட்டு. அவர்கள் சொல்கிறார்கள்...  

ஜெயசித்ரா ஜெயக்குமார், இல்லத்தரசி: ''நாட்டுக்கோழி கிரேவி, இறால் கிரேவி, மட்டன் சுக்கானு எல்லா அயிட்டங்களும் செட்டிநாடு டேட்ஸ்டில் இருந்தது. பிரியாணி, அதற்கான சரியான பதம், சுவையில் இருந்தது. மீன் வகைகளை துளியும் வாடை வராம சுத்தம் பண்ணியிருந் தாங்க. அயிரை மீன் குழம்பில் புளிப்பும் காரமும் இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.''

அன்பரசி, இல்லத்தரசி: ''நண்டு ஆம்லெட் புதுவிதமா இருந்தது. பொதுவா வெளியிடங்களில் நண்டை கடிச்சு சாப்பிட கூச்சமா இருக்கும். அதுக்கு வசதியா இங்க ஓடு நீக்கி கொடுக்கிற 'ஷெல்லெஸ்’ நண்டு, நல்ல சாய்ஸ். கோலா உருண்டை வெளியே மொறுமொறுனும், உள்ளே சாஃப்ட்டாவும் இருந்தது சூப்பர்! மூளை மசாலாவில், இன்னும் கொஞ்சம் மசாலா தூக்கலா போட்டிருக்கலாம்.''

ராஜேஸ்வரி கிட்டு, ஓய்வுபெற்ற பேராசிரியை: ''அசைவ உணவகமாக இருந்தாலும், சைவ வகை உணவுகளின் சுவையும் அருமை. சாப்பிட்டு முடிச்சவொடனே குடிக்க மோர் கொடுக்கறாங்க. இஞ்சியும், எலுமிச்சையும், கொத்தமல்லியுமா ஆஹா... அருமை! குழந்தைகள் விளையாடறதுக்கும் கொஞ்சம் இடத்தை ஒதுக்கியிருந்தா, இன்னும் சிறப்பா இருக்குமே!''

சாப்பிட வாங்க!