##~## |
ஒவ்வொன்றுக்கும் பரிசு: 125
வெல்ல தோப்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேவையானவை: புழுங்கலரிசி, பச்சரிசி - தலா அரை கிலோ, கடலைப்பருப்பு, மைதா மாவு - தலா 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் - ஒன்று, ஏலக்காய் - 5, வெல்லம் - 500 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, ரீஃபைண்ட் ஆயில், தூள் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் கிரைண்டரில் அரைக்கவும். மாவு ஓரளவுக்கு மசிந்த பின்னர்... துருவிய தேங்காய், ஏலக்காய், பொடித்த வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து

அரைக்கவும். 5 நிமிடத்துக்குப் பிறகு, மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். அதில் சமையல் சோடா, மைதா மாவு மற்றும் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர், அடுப்பில் கடாயை வைத்து, பாதி அளவுக்கு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி சூடாக்கி, ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றினால் வெந்து நன்றாக ஊதி, உப்பி மெதுவாக மேலே எழுந்து வரும். அதனை திருப்பி விடவும். இவ்வாறு ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும்.
திருநெல்வேலி, காரைக்குடி ஸ்பெஷலான இந்த இனிப்பை 4 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
- சங்கீதா கணேசன், திருச்சி

முப்பழ அமுதம்
தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள், தர்பூசணித் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா 10, பூரா சர்க்கரை - கால் கப், இளநீர் - ஒரு டம்ளர், நுங்குத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு மசித்து, பிறகு இளநீரை விட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். பூரா சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். கடைசியாக, பொடியாக வெட்டிய நுங்குத் துண்டுகளைச் சேர்த்து கிளாஸ் அல்லது கப்புகளில் ஊற்றிக் கொடுக்கவும். இதை ஐஸ் கட்டிகளை சேர்த்தோ, ஃப்ரிட்ஜில் குளிரவைத்தோ கூட பருகலாம்.
- தாரா மணிவண்ணன், கோயம்புத்தூர்
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
வெல்ல தோப்பம்: மிகச் சிறியதாக நறுக்கப்பட்ட தேங்காய் துண்டுகள் கொஞ்சம் எடுத்து, மாவுடன் கலந்து தயாரித்தால், மேலும் பிரமாதமான ருசியுடன் இருக்கும்.
முப்பழ அமுதம்: ஆப்பிள் துண்டுகள் சிறிதளவு சேர்த்தால் சுவையும், சத்தும் அதிகரிக்கும்.