Published:Updated:

சப்பாத்தி VS சாதம்...

இது ஓர் உணவுப் பஞ்சாயத்து ஃபுட்ஸ்

சப்பாத்தி VS சாதம்...

இது ஓர் உணவுப் பஞ்சாயத்து ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

ட இந்திய உணவுகள் என்றதுமே... 'என்ன அவங்க கோதுமை சப்பாத்தி சாப்பிடுவாங்க... நாம அரிசி சாதம் சாப்பிடறோம்' என்று நம்மில் பெரும்பாலானவர்கள் விவாதத்தை முடித்துக் கொள்வோம். ஆனால், கோதுமை, அரிசி மட்டுமல்ல... வடநாட்டு உணவுப் பழக்கம், தென்னாட்டு உணவுப் பழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என்பதே உண்மை!

இதைப்பற்றி, 18 வருடங்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழும் திருநெல்வேலி தமிழரான வினிலா பிரகாஷ், நம்மிடம் பேசியபோது, ''நாம் சிறப்பாக நினைக்கும் முருங்கைக்கீரையை, வடநாட்டில் கால்நடைகளுக்குத்தான் போடுகிறார்கள். அவர்கள் சமையலில் பயன்படுத்தும் எண்ணெயை, தென்னாட்டில் பார்த்திருக்கவும் மாட்டோம்!'' என்று ஆச்சர்யம் கூட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தமிழகத்தில் கிடைக்கும் அளவுக்கு கீரை வகைகள், வட இந்தியாவில் கிடைப்பதில்லை. இங்கு வருடந்தோறும் கிடைக்கும் ஒரே கீரை, பாலக். உடலுக்கு அதிக சூட்டைத் தரும் பத்துவா, நம் ஊரில் கிடைக்காத கீரை வகை. குளிர்காலத்தை சமாளிக்க, பத்துவா கீரையை இங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சேப்பங்கிழங்கு மற்றும் முள்ளங்கி ஆகியவற்றின் இலைகளையும் கீரை வகையாகவே பயன்படுத்துகிறார்கள்.

தென் இந்தியர்கள் சமையலில் முக்கிய அங்கமான தேங்காய்க்கு இங்கு இடமில்லை. கடைகளில் விற்கப்படும் தேங்காய் கீற்றை, மக்கள் தின்பண்டமாக மட்டுமே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். நாம் ஒரே அடியில் உடைக்கும் தேங்காயை, இவர்கள் ஒரு ஆணியை வைத்து சுத்தியலால் அடித்து, அதன் ஓட்டைப் பிரித்து எடுப்பதைப் பார்ப்பவர்கள்... சிரிக்காமல் இருக்க முடியாது.

சப்பாத்தி VS சாதம்...

சீமைக்கத்திரிக்காய் (சௌசௌ), வாழைத்தண்டு, வாழைப்பூ, பச்சை அவரைக் கொட்டை மற்றும் மொச்சைக் கொட்டை இங்கு கிடைப்பதில்லை. அதேசமயம் பலவகை கத்திரிக்காய்கள், பலவாறான வடிவம் மற்றும் சுவையில் இங்கு கிடைக்கின்றன.

நம் ஊரில் பெரும்பாலும் குருவிகளும், கால்நடைகளும் மட்டுமே சாப்பிடும் கோவைப் பழத்தின் இருவகைக் காய்கள், இங்கு அனைத்து சீஸன் உணவு. இங்கு அதிக விளைச்சலை தருவதாலோ, என்னவோ... உருளைக்கிழங்கும் அனைத்து சீஸன் உணவு.

காயான பலா மற்றும் பப்பாளி மிகவும் ஸ்பெஷலானது. இவற்றை பெரும்பாலும் நான்-வெஜ்ஜுடன் சேர்த்து சமைக்கிறார்கள். முருங்கைக்காய் பற்றி இங்கு பரவலாகத் தெரியவில்லை. இதற்கு ஏற்றபடி அதன் மரங்களும் இங்கு மிகமிகக் குறைவு. இருப்பவற்றையும் ஆடு, மாடுகளுக்குத்தான் கொடுக்கிறார்கள்.

சப்பாத்தி VS சாதம்...

பீட்ரூட் மற்றும் கேரட் சமைக்கத் தெரியாது. அவற்றை அழகாக நறுக்கி சாலட்டில் வைத்துச் சாப்பிடுகிறார்கள். இவர்கள் உணவில் சாலட் மற்றும் சூப் வகைகளுக்கு ஏக முக்கியத்துவம். கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட அரிசியை, மதியவேளை மட்டும் சிறிதாக எடுத்துக் கொண்டு, மற்ற நேரங்களில் எண்ணெய் இல்லாத ரொட்டியைத்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். இது, சர்க்கரை நோயின் பிடியில் படிப்படியாக வீழ்ந்து கொண்டு இருக்கும் தென்னாடு முக்கியமாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்'' என்று அழுத்தம் கொடுத்த வினிலா, தொடர்ந்தார்.

''நாம் சாப்பிடும் அளவுக்கு விதம்விதமான குழம்புகள் இங்கு வைப்பதில்லை. அதற்கு பதிலாக உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடி மசூர் மற்றும் மசூர் பருப்பு என பல்வேறு வகையான பருப்பு வகைகள்தான்... ரொட்டிக்கான முக்கிய சைட்டிஷ். இவை வாயுவை கிளப்பும் என்பதால், அனைத்து உணவுப் பொருட்களிலும் கறுப்பு உப்பை தூவி சாப்பிடுகிறார்கள். சீரகத்தையும் பவுடராக்கி தயிரில் சேர்த்து ராய்தா செய்கிறார்கள்.

நம் அளவுக்கு புளியை சமையலில் சேர்ப்பது கிடையாது. ஆம்சூர் எனும் மாங்காய் பவுடரை மட்டும் தேவையானால் சைட் டிஷ்ஷில் புளிப்புக்காகச் சேர்க்கிறார்கள். இவர்கள் சமையலில் பிரதானமானது கடுகு எண்ணெய். இது, மேனிக்கு பொன்னிறம் மற்றும் பிரகாசத்தை கொடுக்கும் என்பதால், அதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பழங்களில் முக்கியமான வாழைப்பழம் நம் ஊரில் கிடைக்கும் அளவுக்கு வகை, வகையாக கிடைப்பதில்லை. பலாப்பழத்தின் சுவையும் இவர்களுக்கு தெரியாது. அது பழுத்தால் கால்நடைகளுக்குத் தீவனமாக போடுகிறார்கள்! ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி இவைதான், வட இந்தியர்கள் அதிகமாக சாப்பிடும் பழங்கள்'' என்று சொன்னார் வினிலா. இவருடைய கணவர் பிரகாஷ், உ.பி மாநிலம், அலிகரில் போலீஸ் டி.ஐ.ஜி!

- ஆர்.ஷஃபி முன்னா, படம்: மனோஜ் அலிகடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism