சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

கலகல கார்ன்... விறுவிறு வரகு!

வாசகிகள் கைமணம், படங்கள்: பொன்.காசிராஜன் ரீடர்ஸ்

##~##

வெஜிடபிள் வரகு கஞ்சி

தேவையானவை: வரகு அரிசி - ஒரு கப், முட்டைகோஸ் - கால் கிலோ, முள்ளங்கி, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, அரிசி மாவு  - ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல் - சிறிதளவு, கொத்தமல்லி - அரை கட்டு, புதினா - கால் கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு பல் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு கப் வரகு அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய  பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும். முட்டைகோஸ், முள்ளங்கியை துருவி, இதனுடன் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். மிகவும் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும். வெந்த வரகு அரிசியுடன், இதனை சேர்த்து நன்கு கலக்கினால்... வெயிலுக்கு இதமான, மிகவும் ருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி தயார். இதற்கு தொட்டுக் கொள்ள, கொள்ளுத் துவையல் சிறந்தது.

- பழனீஸ்வரி தினகரன், நெமிலிசேரி

கலகல கார்ன்... விறுவிறு வரகு!

கார்ன் வித் கோன்

தேவையானவை: பேபி கார்ன் - 5, கோதுமை மாவு - ஒரு கப், கொத்தமல்லி தழை - ஒரு கப், புதினா - அரை கப், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி, சுத்தம் செய்த பேபி கார்னை அதில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். கோதுமை மாவை, தேவையான உப்பு, தண்ணீர் விட்டு சப்பாத்தியாக இட்டு, நீள நீளமாக ரிப்பன் போல 'கட்’ செய்யவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாயை சட்னியாக அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து, பேபி கார்ன் மீது பரப்பவும். 'கட்’ செய்த சப்பாத்தி துண்டுகளை பேபி கார்னில் ஒவ்வொன்றாக சுற்றி அழுத்திவிடவும் (கோன் வடிவில்). பிறகு, எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. கார்ன் வித் கோன் தயார்.

- எம்.சங்கரி, மடிப்பாக்கம்

கலகல கார்ன்... விறுவிறு வரகு!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

கார்ன் வித் கோன்: சிறிதளவு கரம் மசலாத் தூள், கார்ன்ஃப்ளார் சேர்த்து செய்தால்... கூடுதல் ருசியுடனும், மேலும் மொறுமொறுப் பாகவும் இருக்கும்.

வெஜிடபிள் வரகு கஞ்சி: சோள ரவையிலும் இதே போல கஞ்சி தயாரிக்கலாம்.