Published:Updated:

30 வகை கீரை சமையல்

30 வகை கீரை சமையல்

30 வகை கீரை சமையல்
##~##
30 வகை கீரை சமையல்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரை. இந்த அவசர யுகத்தில் அப்படி செய்வது கடினம் என்றாலும், பல்வேறு சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே அடக்கிய கீரையை வாரம் ஓரிரு முறையாவது சாப்பிட வேண்டியது அவசியம். அதற்கு வழிவகுக்கும் விதத்தில் '30 வகை கீரை சமையல்’ ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா,

'கீரை மசியல், புளிக்கீரை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டால் அலுத்துவிடும் என்பதால்... கீரையில் பீட்ஸா, இனிப்புக் கொழுக்கட்டை, பச்சடி, தோசை, புலாவ் என்று வித்தியாசமாக கொடுத்துள்ளேன். இவை அனைத்தும் உங்கள் கும்பத்தினரை குஷிப்படுத்தி, உடல் நலம் காக்கும் என்று நம்புகிறேன்'' என்று அக்கறை ததும்பக் கூறுகிறார்.

சிறுகீரை குணுக்கு

தேவையானவை: பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டுப் பல் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டவும். இதனுடன் காய்ந்த மிளகாய், தோல் உரித்த பூண்டுப் பல், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும் (சிறிது கரகரப்பாக மசிந்தால் போதும்). கீரையை நீரில் அலசி வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, அரைத்த மாவுடன் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, மாவை நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை பக்கோடா மாதிரி கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அடைமாவு மிகுதியாகிவிட்டால், அதனுடன் கீரை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

கீரை  வெஜிடபிள் சமோசா

தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கோஸ் துருவல் - 4 டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு - இரண்டு, எண்ணெய் - 250 மில்லி, கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை வதக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சமோசாக்களை பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

அரிசி ரவை  கீரை கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். வதக்கிய கீரை சேர்க்கவும். ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்த உடன் ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும். வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கத்திரிக்காய் கொத்சு, வெங்காய கொத்சு இதற்கு சிறந்த காம்பினேஷன்.

முளைக்கீரை சாம்பார்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை  - கைப்பிடி அளவு, துவரம்பருப்பு - 100 கிராம் (வேக வைக்கவும்), புளி - எலுமிச்சம்பழம் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: பொடியாக நறுக்கிய முளைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். புளியை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிது நேரம் கொதித்த உடன் கீரையை சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்னர் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இதேமுறையில் வெந்தயக்கீரை, அரைக்கீரையிலும் சாம்பார் தயாரிக்கலாம்.

முளைக்கீரை புளிப்பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் - 100 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை:  நறுக்கிய கீரையை வேகவிட்டு நன்கு மசிக்கவும். மசித்த கீரையுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து... சிறிது நேரம் கொதிக்கவிட்டு பொடித்த வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்த உடன், எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: புளிப்பும் இனிப்பும் கலந்த இந்தக் கீரைப்பச்சடி, வற்றல் குழம்பு சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.

முருங்கைக்கீரை அடை

தேவையானவை:  பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி - 200 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு சிறிய கிண்ணம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து, தோல் சீவி, நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - இரண்டு, மிளகு - 10, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை:  இட்லி அரிசியை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் களைந்து கரகரப்பாக அரைக்கவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு, பருப்புகளை சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரையை மாவுடன் நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கு ஊற்றுவதைவிட சிறிது அதிகம் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வெல்லம் - வெண்ணெய், அவியல் ஆகியவை அடைக்கு நல்ல காம்பினேஷன்.

வெரைட்டி கீரை சட்னி

தேவையானவை: புதினா, பாலக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சாம்பார் வெங்காயம் - நான்கு, காய்ந்த மிளகாய்  - ஒன்று, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: புதினா, பாலக்கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது இந்த சட்னி.

அரைக்கீரை போண்டா

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2 (சிறியது), எண்ணெய் - 250 மில்லி. உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாயை நன்றாக வதக்கிக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, வதக்கிய கீரை கலவையுடன் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடலை மாவுடன் சிறிதளவு உப்பு, அரிசி மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கரைத்து வைத்த மாவில் உருண்டைகளை தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

கீரை  வெஜிடபிள் பீட்ஸா

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய சிவப்பு அல்லது மஞ்சள் குடமிளகாய் - தலா ஒரு கப், சீஸ் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி,  உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கோஸ் துருவல், கேரட் துருவல் இரண்டையும் வதக்கி, நறுக்கிய குடமிளகாய், கீரை, உப்பு சேர்த்து மேலும் வதக்கி எடுத்து, அரைத்த மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை பீட்ஸா வடிவத்தில் கெட்டியாக ஊற்றி, மிதமான தீயில் அடுப்பை எரியவிட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.  இதை பிளேட்டில் எடுத்து வைத்து, அழகாக கட் செய்து, சீஸ் வைத்து அலங்கரித்து, மேலே கொத்தமல்லி தூவி சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு: சத்து மிகுந்த இந்த வித்தியாசமான பீட்ஸாவின் புது ருசி, குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும்.

கலவைக்கீரை கூட்டு

தேவையானவை: பருப்புக்கீரை, முருங்கைக்கீரை, முளைக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு,  பாசிப்பருப்பு, தேங்காய் துருவல்  - தலா ஒரு கப்,  சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: கீரை வகைளை, நறுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். பாசிப்பருப்பை குழைவாக வேகவிடவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன், வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து, கீரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொதிக்கும் கீரையில் சேர்த்து இறக்கவும்.

முடக்கத்தான் கீரை தோசை

தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தக்காளி - ஒன்று, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி நறுக்கவும். அரிசி, பருப்பை களைந்து... தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, கீரை ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, மிதமான தீயில் அடுப்பை எரியவிட்டு, கரைத்து வைத்திருக்கும் மாவை தோசைக்கல்லில் மெல்லியதாக, பரவலாக ஊற்றி, இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சாம்பார், இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு ஏற்ற சைட் டிஷ். முடக்கத்தான் கீரை மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கக் கூடியது.

சிறுகீரை உருண்டை குழம்பு

தேவையானவை: பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். புளியைக் கரைத்து அதனுடன் சாம்பார் பொடி சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பு விழுதை சேர்த்துக் கிளறி, பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கரைத்து வைத்த புளித் தண்ணீர் - சாம்பார் கலவையை கொதிக்கவிட்டு, வதக்கிய கீரை, வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும். பிறகு சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

வெரைட்டி கீரை போளி

தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய முளைக் கீரை , முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை  - தலா ஒரு கப், வெல்லம் - 200 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப்,  கடலைப்பருப்பு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

30 வகை கீரை சமையல்

செய்முறை: மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து, கேசரி பவுடரையும் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேகவிட்டு தண்ணீர் வடித்து, தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.  கீரைகளை சிறிதளவு நெய் விட்டு வதக்கவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீர் விட்டு கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிக்கட்டி, மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். கெட்டியானதும், கீரை சேர்த்து, அரைத்த பருப்பு விழுதை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கி, சிறு உருண்டைகளாக உருட்டவும்.

பிசைந்து வைத்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி... நெய் தடவிய வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து அப்பள வடில் இட்டு, உள்ளே கீரை பூரண உருண்டையை வைத்து மூடி, போளிகளாக தட்டவும். தவாவை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, போளிகளை போட்டு, சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: வல்லாரைக் கீரை ஞாபகசக்தியை வளர்க்கக் கூடியது.

கீரை இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு (ஊற வைத்து, நிழலில் உலத்தி, அரைத்து, சலித்த மாவு) - இரண்டு கப், கடலைப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, பொடித்த வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து ஊற வைத்து, வேகவிட்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொதிக்க விட்டு, அரைத்த கடலைப்பருப்பு விழுதை சேர்த்து கெட்டி யாகக் கிளறவும். கீரையை வதக்கி இதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி உருட்டிக் கொள்ளவும். இதுதான் பூரணம்.

அரிசி மாவின் அளவில் ஒரு பங்குக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். இதில் அரிசி மாவைத் தூவிக் கிளறி, பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சொப்பு செய்து, உருட்டி வைத்த பூரணத்தை உள்ளே வைத்து மூடவும். இட்லித் தட்டில் சிறிதளவு நெய் தடவி பூரணம் நிரப்பிய சொப்புகளை வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப், வெண்ணெய் -  2 டீஸ்பூன், வெள்ளை எள், ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், உப்பு சேர்க்கவும். பொன்னாங்கண்ணிக்கீரையை பொடியாக நறுக்கி, சிறிதளவு எண்ணெயில் வதக்கி, மாவுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் அடுப்பை வைத்து, சப்பாத்திகளை சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்துப் பிசைந்தும் தயாரிக்கலாம். இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதற்கு சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

தூதுவளைக்கீரை துவையல்

தேவையானவை: தூதுவளைக்கீரை - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, பூண்டுப் பல் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை மிதமான தீயில் வறுக்கவும். கீரையை கவனமாக 'கட்’ செய்து சேர்த்து வதக்கவும் (சிறிய முள் இருக்கும்). புளி, உப்பு, வதக்கிய பூண்டு, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வதக்கிய கீரை எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு: இருமல், சளித் தொந்தரவு இருந்தால், தூதுவளைக்கீரை துவையலை சூடான சாதத்துடன் சாப்பிட... நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பாலக்கீரை தால்

தேவையானவை: பாலக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - 100 கிராம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: பாலக்கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கி அரைக்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் கீரை - பருப்பு கலவை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: இது சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

அரைக்கீரை கட்லெட்

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, ரஸ்க்தூள், கேரட் துருவல் - தேவையான அளவு, இஞ்சி விழுது -  ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,  எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.  

30 வகை கீரை சமையல்

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். அரைக்கீரை, வெங்காயத்தை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி விழுது சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கிய கீரை கலவையுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து, கட்லெட் வடிவத்தில் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டவும். தவாவில் பரவலாக கட்லெட்களை வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்பு: இதை புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

மிக்ஸ்டு கீரை புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கரம் மசாலாத்தூள்,  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கவும்), உலர்திராட்சை,  முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, நெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: பாசுமதி அரிசியுடன் ஒரு பங்கு அரிசிக்கு இருமடங்கு என்ற அளவில் தண்ணீர் அளந்து விட்டு, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு புதினா, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். திராட்சை, முந்திரி, பிஸ்தாவை நெய்யில் தனித்தனியாக வறுக்கவும். சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு வதக்கிய கீரை கலவை, திராட்சை, முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்கு கலக்கினால்... மிக்ஸ்டு கீரை புலாவ் ரெடி!

புதினா  பொன்னாங்கண்ணிக்கீரை சீடை

தேவையானவை: அரிசி - 200 கிராம், பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா  - தலா ஒரு கைப்பிடி அளவு,  மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக அரைத்து சலித்து லேசாக வறுக்கவும். இந்த மாவுடன் மிளகுத்தூள், சீரகம், உப்பு, கறிவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து... புதினா, பொன்னாங்கண்ணிக்கீரையை நறுக்கி சேர்க்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து, சீடைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சீடைகளைப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

மல்டி கீரை ஊத்தப்பம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை, அரைக்கீரை  பொன்னாங்கண்ணிக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்) எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தவாவை சூடாக்கி, மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

அகத்திக்கீரை பருப்பு உசிலி

தேவையானவை:  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 2,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி வேகவிடவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பருப்பு உதிரி உதிரியாக வரும்வரை கிளறவும். வேக வைத்த அகத்திக்கீரையில் இருந்து தண்ணீரைப் பிழிந்து விட்டு, கீரையை பருப்புடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

முளைக்கீரை வடை

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 200 கிராம், மிளகு - 10, பச்சை மிளகாய் - இரண்டு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து அரைக்கவும். சிறிது மசிந்தவுடன் மிளகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கீரையை  வதக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும். பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை  மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்.

மல்டி கீரை சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - சிறிதளவு, சோள மாவு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை:  முளைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து... மிளகுத்தூள், உப்பு, வதக்கிய கீரை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வேறு காய்கறிகளைக் கொண்டும் இதே முறையில் சூப் தயாரிக்கலாம்.

மல்டி கீரைப் பொடி

தேவையானவை: பொன்னாங்கண்ணிக் கீரை, புதினா, அரைக்கீரை, கறிவேப்பிலை  - தலா ஒரு கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: வெறும் வாணலியில் பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா, கறிவேப்பிலை, அரைக்கீரையை தனித்தனியாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு ஆகியவற்றையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து,  தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: இந்தப் பொடி மழைக்காலங்களிலும், காய்கறிகள் தீர்ந்துவிட்ட சமயங்களிலும் கைகொடுத்து உதவும்.

கீரைப் பொங்கல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி  - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசியையும், பாசிப்பருப்பையும் லேசாக சூடுவரும் வரை வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடித்துக் கொள்ளவும். இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வறுத்த அரிசி - பருப்புடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

வாணலியில் நெய் விட்டு நறுக்கிய கீரை, மிளகு - சீரகப்பொடி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் தேவையான உப்பு சேர்த்து மசித்து... வதக்கிய கீரை கலவை, வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறினால்... கீரைப் பொங்கல் தயார்.

குறிப்பு: புளிப்புத்தன்மை இல்லாத எந்த கீரையிலும் பொங்கல் தயாரிக்கலாம்.

கலவைக்கீரை பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், பூண்டு விழுது, இஞ்சி விழுது - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா, அரைக்கீரை, முருங்கைக்கீரை எல்லாம் சேர்த்து - 2 கைப்பிடி அளவு,  பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, பூண்டு விழுது,  இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா, அரைக்கீரை, முருங்கைக்கீரை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து... சூடாகப் பரிமாறவும்.

மணத்தக்காளிக்கீரை பொரியல்

தேவையானவை:  மணத்தக்காளிக்கீரை - ஒரு கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: மணத்தக்காளிக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கீரையை தண்ணீரில் அலசி இதனுடன் சேர்த்து வதக்கி... தக்காளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

முளைக்கீரை தயிர்க்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, புளிக்காத தயிர் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். முளைக்கீரையை வேகவிடவும். கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதேமுறையில் வாழைத்தண்டு, கோஸ் ஆகியவற்றிலும் தயிர்க்கூட்டு தயாரிக்கலாம்.

சிறுகீரை தட்டை

தேவையானவை: அரிசி மாவு - 100 கிராம், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்து சலித்த உளுத்தமாவு  - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: அரிசி மாவுடன் வெண்ணெய், உப்பு, உளுத்தமாவு, பொடியாக நறுக்கிய கீரை, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை அதில் வைத்து, சிறிய தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டைகளை சேர்த்து பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

தொகுப்பு: பத்மினி,
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

30 வகை கீரை சமையல்

ஆச்சி கிச்சன் ராணி

முட்டை பணியார குழம்பு

தேவையானவை: பணியாரம் செய்வதற்கு: முட்டை - 3, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, இட்லி மாவு - கால் கப், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

குழம்பு செய்வதற்கு: சின்ன வெங்காயம் - 10, பழுத்த தக்காளி - 100 கிராம், தேங்காய் - சோம்பு அரைத்த விழுது - சிறிதளவு, ஆச்சி முட்டை குழம்பு மசாலா - 20 கிராம், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

30 வகை கீரை சமையல்

செய்முறை: முட்டையை ஒரு பாத்திரத்தில் அடித்து வைக்கவும். பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் அடித்த முட்டை, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இட்லி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை குழிப்பணியார சட்டியில் சிறு பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிய பின் ஆச்சி முட்டை குழம்பு மசாலா, அரைத்த தேங்காய் - சோம்பு விழுது சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து மணம் வந்ததும், முட்டை பணியாரங்களை சேர்த்து இறக்கி வைக்கவும்.

- இ.கிருபா, ஆண்டிபட்டி
படம்: ஆ.முத்துக்குமார்

30 வகை கீரை சமையல்
அடுத்த கட்டுரைக்கு