Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

##~##

 சுவைக்கத் தூண்டுதே... சோயா சுய்யம்!

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு அவசியம். அதேசமயம், அதிக கொழுப்புச் சத்து சேர்ந்தால் உடல் நல பிரச்னைகள் ஏற்படும். இந்த விஷயத்தில் நமக்கு உதவிகரமாக விளங்குவது... ஊட்டச்சத்துக்கள் மிக்கதும், கொழுப்பைக்

சோயா கொண்டாட்டம்!

கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுவதுமான சோயா! இத்தகைய சிறப்புமிக்க சோயாவில் விதம்விதமான உணவுகளை, அசத்தலான சுவையில் அள்ளித் தருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா சங்க்ஸ் சுய்யம் மற்றும் சோயா கிரானுல்ஸ் ரைஸ் ஸ்நாக்ஸ்.  

சோயா சங்ஸ் சுய்யம்

தேவையானவை: சோயா சங்க்ஸ் - 20, கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - 150 கிராம் (அல்லது தேவைக்கேற்ப), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, மைதா - 50 கிராம், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, நெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: சோயா சங்க்ஸை வேக வைத்து துருவிக் கொள்ளவும். கடலைப்பருப்பை நன்கு வேகவிட்டு ஒன்றிரண்டாக மசிக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, சோயா துருவலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் மசித்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து சுருள வதக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை ஆறவிட்டு சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மைதாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருண்டைகளை மைதா கரைசலில் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

சுடச்சுட சாப்பிட... சுவையில் அள்ளும் இந்த சுய்யம்!

சோயா கிரானுல்ஸ்  - ரைஸ் ஸ்நாக்ஸ்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - அரை கப், சாதம் - 2 கப், மைதா மாவு - 6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 4, பூண்டு - 2 பல், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் (அ) ரஸ்க்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லித் தழை இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்க வும். சோயா கிரானுல்ஸை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். சாதத்தை மிக்ஸியில் போட்டு மசிக்கவும்.

மசித்த சாதத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சோயா கிரானுல்ஸ், அரைத்த பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, கரம் மசாலாத்தூள், 3 டேபிள்ஸ்பூன் மைதா, எலுமிச்சைச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி பிசையவும். மீதமுள்ள 3 டேபிள்ஸ்பூன் மைதாவை சிறிதளவு தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும். பிசைந்த கலவையை சிலிண்டர் வடிவத்தில் உருட்டி மைதா கரைசலில் தோய்த்து, ரஸ்க் (அ) பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள சோயா கிரானுல்ஸ் கலவையைப் போட்டு பொரித்தெடுத்து, சுடச்சுட சாப்பிட்டால்... தேவாமிர்தம்தான்! இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சரியான காம்பினேஷன்.

அடுத்த கட்டுரைக்கு