Published:Updated:

கலக்குது... கஸ்டர்ட் கிரீம்!

வாசகிகள் கைமணம், படங்கள்: பொன்.காசிராஜன்

கலக்குது... கஸ்டர்ட் கிரீம்!

வாசகிகள் கைமணம், படங்கள்: பொன்.காசிராஜன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கலக்குது... கஸ்டர்ட் கிரீம்!

125

 ஜவ்வரிசி இட்லி

தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், ஜவ்வரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், தயிர் - 2 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வெறும் கடாயில் ஜவ்வரிசியை கைபொறுக்கும் அளவுக்கு  சூடு செய்யவும். அதை அரிசி ரவையுடன் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு...  கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து, ஜவ்வரிசி - அரிசி ரவை கலவையுடன் சேர்க்கவும். தயிரை கொஞ்சம் தண்ணீர் விட்டு கடைந்து அதில் ஊற்றி, உப்பு போட்டு கலந்து வைக்கவும். இதை 7 மணி நேரம் ஊறவிடவும். தயிரை முழுவதுமாக இழுத்துக் கொண்டால், மேலும் கொஞ்சம் தயிரோ, தண்ணீரோ கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். இதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் ஊற்றி, பதினைந்தில் இருந்து இருபது  நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இந்த இட்லி, ஆறினாலும் நன்றாக இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன்..

- ஏ.ராதிகா, சென்னை-14

கலக்குது... கஸ்டர்ட் கிரீம்!

வெஜிடபிள் கஸ்டர்ட் கிரீம்

தேவையானவை: நல்ல சிவப்பான கேரட் - 100 கிராம், இனிப்பு பீட்ரூட் - 50 கிராம், பெங்களூர் தக்காளி - 100 கிராம், திக்கான பால் - அரை லிட்டர், கஸ்டர்ட் பவுடர் - 25 கிராம், சர்க்கரை - 100 கிராம், கார்ன்ஃப்ளேக்ஸ் - 4 டேபிள்ஸ்பூன் (பிடித்த ஃப்ளேவர்), ரோஸ் எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 100 கிராம்

செய்முறை: கேரட், பீட்ரூட் இரண்டையும் நன்கு கழுவி, மிக மெல்லியதாகவும், பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். தக்காளி சாறில், நறுக்கிய காய்களைச் சேர்த்து குக்கரில் வேகவைத்து, மசித்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால், கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை சேர்த்து, அடி பிடிக்காமல் கலக்கிக் கொண்டே இருக்கவும். கெட்டியான குழம்பு பதம் போல் வந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து பதமாகும் சமயம் வெண்ணெயை சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும். பிறகு, கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்து ஆறவிடவும். கொஞ்சம் சூடு ஆறியதும் ரோஸ் எஸன்ஸ் கலந்து, சிறிய சிறிய கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் குளிரவிட்டு, பிறகு எடுத்து பரிமாறவும்.

- ஸ்வர்ணா பரத்வாஜ், நாக்பூர்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஜவ்வரிசி இட்லி: மாவு தயாரிக்கும்போது, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சிறிதளவு சேர்த்தால், மேலும் ருசியாக இருக்கும்.

வெஜிடபிள் கஸ்டர்ட் கிரீம்: மில்க்மெய்ட் சிறிதளவு சேர்த்து செய்யலாம். அட்டகாசமான சுவை கிடைக்கும்.