Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

சோயா கொண்டாட்டம்!

ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

 ஜோர்... ஜோர்... சோயா அல்வா!

உணவு சுவையாகவும் இருக்க வேண்டும்... உடலுக்கு நன்மை தரும் பொருட்களை கொண்டதாகவும் விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, இந்தப் பகுதியில், பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய சோயா சங்க்ஸ், சோயா கிரானுல்ஸைக் கொண்டு வெரைட்டியான, சுவைமிக்க உணவு வகைகளை வழங்கி வருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா சங்ஸ் பட்டாணி மசாலா பஜ்ஜி, சோயா கிரானுல்ஸ் அல்வா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோயா கிரானுல்ஸ் அல்வா

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், பாசிப்பருப்பு, வேர்க்கடலை - தலா கால் கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - அரை கப், பாதாம் எசன்ஸ் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி - 10 (பொடித்துக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: சோயா கிரானுல்ஸை சிறிதளவு நெய் விட்டுப் பிசிறி, வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து மாவாக்கவும். பாசிப்பருப்பையும், வேர்க்கடலையையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால்... நார்ச்சத்தும் புரதச்சத்தும் மிக்க சோயா கிரானுல்ஸ் மிக்ஸ் தயார்.

அடி கனமான வாணலியில் சர்க்கரையுடன் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாகு பதம் வந்ததும், அரை கப் சோயா கிரானுல்ஸ் மிக்ஸை எடுத்து சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறிக் கொண்டே நெய்யையும் சேர்க்கவும்.

நன்கு வெந்து அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்துப் பொடித்த முந்திரி, பாதாம் எசன்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போட்டு பரிமாறவும்.

சோயா கொண்டாட்டம்!

சோயா சங்ஸ் பட்டாணி மசாலா பஜ்ஜி

தேவையாவை: சோயா சங்ஸ் - 15, பிரெட் ஸ்லைஸ் - 8, உருளைக்கிழங்கு - 2, பச்சைப் பட்டாணி - கால் கப், கடலை மாவு - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2,  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். சோயா சங்க்ஸை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி ஒட்டப் பிழிந்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சைச் சாறு, மசித்த உருளைக்கிழங்கு, மசித்த பச்சைப் பட்டாணி, மல்லித்தழை, உதிர்த்த சோயா ஆகியவற்றை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சோயா கொண்டாட்டம்!

கடலை மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து, சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். ஒரு பிரெட் ஸ்லைஸை எடுத்து, அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சங்ஸ் - பட்டாணி மசாலாவை நன்கு தடவி, இரண்டாக மடித்து, கடலை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதை சுடச்சுட தக்காளி சாஸுடன் பரிமாறினால்... சாப்பிடுபவர்கள் 'இன்னும் ஒன்று’ என்று கேட்டபடியே சுவைத்து மகிழ்வார்கள்.