ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

பிரெட் புலாவ்... பிரமாதம்ஃபுட்ஸ்ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார்

##~##

'சமைத்தோமா... வயிறு நிறைய சாப்பிட்டோமா’ என்றிருந்த காலம் மாறி, சாப்பிடும் உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகமாகி வரும் காலகட்டம் இது. எனவேதான், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை தன்னுள்ளே அடக்கியுள்ள சோயா அனைவர் மனதையும் கவர்ந்து, சமையலறையில் மிகவும் அதிகமாக இடம்பெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சோயாவில் வித்தியாசமான, சுவைமிக்க உணவு வகைகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா கிரானுல்ஸ் டைமண்ட் ஸ்வீட் மற்றும் சோயா சங்ஸ் பிரெட் புலாவ்.

சோயா கொண்டாட்டம்!

சோயா கிரானுல்ஸ் டைமண்ட் ஸ்வீட்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ், பீட்ரூட் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், , சர்க்கரை - 2 கப், பால் - அரை கப், நெய் - தேவையான அளவு, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி துண்டுகள் - 8.

செய்முறை: பீட்ரூட் துருவல், கேரட் துருவலுடன் கால் கப் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சோயா கிரானுல்ஸை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, பிழிந்து, கால் கப் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் கோதுமை மாவு சேர்த்து (அடுப்பை 'சிம்’மில் வைத்து) பொன்னிறமாக வறுக்கவும். அரைத்த பீட்ரூட் -  கேரட் விழுது, சோயா கிரானுல்ஸ் விழுது ஆகியவற்றை வறுத்த கோதுமை மாவில் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து,

சோயா கொண்டாட்டம்!

கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு, வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரவலாக்கி, சற்று ஆறியதும் டைமண்ட் வடிவத்தில் 'கட்’ செய்து, மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

சுவையில் அசத்தும் இந்த ஸ்வீட், குட்டீஸ்களை கவர்ந்து இழுக்கும்.

சோயா சங்ஸ் பிரெட் புலாவ்

தேவையானவை: சோயா சங்ஸ் - 50 கிராம், பிரெட் துண்டுகள் - 8, பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - 100 கிராம், கேரட் - ஒன்று, தக்காளி - 2, பொடியாக நறுக்கிய புதினா -  சிறிதளவு, தேங்காய் - அரை மூடி, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 6, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும் கேரட்டை துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சோயா சங்ஸை கொதி நீரில் போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி உதிர்த்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, சோயா சங்ஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கவும். (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட் துருவல், புதினா, கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், உதிர்த்த பிரெட் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின் நெய்யில், வறுத்த முந்திரி திராட்சை, தேங்காய் துருவல், நெய்  சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சுடச் சுட சாப்பிட்டால் சுவை இரட்டிப்பாகும். சிறுவர், பெரியவர் என அனைவரும் விரும்பி சாப்பிடும் புலாவ் இது!