Published:Updated:

அரிசி ஸ்வீட்... அசத்தல் டேஸ்ட்!

சோயா கொண்டாட்டம்!ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

##~##

சாப்பிடும் உணவு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற அக்கறை மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக... நம் உடலுக்கு தேவையான சத்துக்களை வாரி வழங்கி, கொழுப்பையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் சோயா மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோயா சங்க்ஸ் மற்றும் கிரானுல்ஸை கொண்டு சுவைமிக்க ரெசிபிகளை இந்தப் பகுதியில் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால் வழங்குகிறார். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா கிரானுல்ஸ் அரிசி ஸ்வீட், சோயா சங்ஸ் மல்டி தால் ரோஸ்ட்.

சோயா கிரானுல்ஸ் அரிசி ஸ்வீட்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - கால் கப், பச்சரிசி - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சை - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். சோயா கிரானுல்ஸை சிறிதளவு நெய் விட்டு பிசிறி, வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். ஊறிய அரிசியில் இருந்து நீரை ஒட்ட வடிக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும் (புட்டுமாவு போல வரும்).

வாணலியில் நெய் விட்டு, அரிசி - தேங்காய் கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா கிரானுல்ஸ் பொடியை சேர்க்கவும். எல்லாம் நன்கு கலந்த பின் சர்க்கரை சேர்க்கவும். இதை நன்கு கிளறி, பால் சேர்க்கவும். நன்கு வெந்து அல்வா பதம் வரும் சமயம் ஏலக்காய்த்தூள், முந்திரிப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். பேரீச்சை துண்டுகளைத் தூவி அலங்கரிக்கவும்.

அரிசி ஸ்வீட்... அசத்தல் டேஸ்ட்!

சோயா சங்ஸ் மல்டி தால் ரோஸ்ட்

தேவையானவை: சோயா சங்ஸ் - 15, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, புழுங்கல் அரிசி - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், கடுகு - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று , வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரிசி ஸ்வீட்... அசத்தல் டேஸ்ட்!

செய்முறை: பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். சோயா சங்க்ஸை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி ஒட்டப்பிழிந்து, மிக்ஸியில்  ஒன்றிரண்டாக உதிர்த்துக் கொள்ளவும்.

ஊற வைத்த பருப்பு மற்றும் அரிசியுடன் தக்காளி, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சோயா சங்ஸ், தேங்காய் துருவல் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மாவில் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு மடித்து எடுத்தால்... மல்டி தால் ரோஸ்ட் ரெடி!

ஆனியன் ராய்தா, இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு செம காம்பினேஷன்.