Published:Updated:

ஆஹா... ஹாண்டுவா!

வாசகிகள் கைமணம்ஃபுட்ஸ், படங்கள்: எம்.உசேன்

##~##

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆஹா... ஹாண்டுவா!

125

 ஹாண்டுவா

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், அரிசி - அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப் பயறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - கால் கப், சுரைக்காய் (துருவியது) முக்கால் கப், கடுகு, எள், ஓமம், பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்புகள் மற்றும் பச்சைப் பயறு ஆகியவற்றை களைந்து 4 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, மிக்ஸியில் அரைக்கவும். இத்துடன் தயிரை ஊற்றிக் கலக்கவும். பிறகு துருவிய சுரைக்காய், 2 டீஸ் பூன் எண்ணெய், சமையல் சோடா, சர்க்கரை, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 3 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, எள், ஓமம், பெருங்காயம் தாளித்து, இதில் பாதியை மாவில் கொட்டி, மீதியை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மாவு கலவையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் சிறிது எண்ணெய் விட்டு, மாவு கலவையை எல்லா இடங்களிலும் நன்கு பரவும்படி செய்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரவுன் கலராக மாறி மேலே உப்பி வரும்... அப்போது, 2 மரக்கரண்டியை பயன்படுத்தி, மெதுவாக உடையாமல் திருப்பிப் போட்டு, அடுத்த பக்கமும் பிரவுன் ஆகி மொறுமொறு என்று வந்தவுடன், தாளித்து வைத்ததில் மீதியை பரவலாக அதன்மேல் போட்டு துண்டுகளாக 'கட்’ செய்யவும். சட்னி அல்லது தயிருடன் பரிமாறவும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

ஆஹா... ஹாண்டுவா!

காஷ்மீரி ரேஷ்மி பனீர்

தேவையானவை: பனீர் - 200 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, பச்சை மிளகாய் - 4, ஏலக்காய் - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், கெட்டியான தயிர் - அரை கப், பால் - தேவைக்கேற்ப, காஷ்மீரி கரம் மசாலா - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப், வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

காஷ்மீரி கரம் மசாலாவுக்கு: சீரகம், சோம்பு - தலா அரை கப், காஷ்மீரி மிளகாய் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 8, கிராம்பு - 4, பட்டை - சிறு துண்டு, வெந்தயம் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய் - சிறு துண்டு, கறுப்பு ஏலக்காய் - 4 (இவற்றை வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்).

செய்முறை: பனீரை சதுர துண்டுகளாக அரியவும். இளம் சூடான தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து, பனீர் துண்டுகளை ஊற வைக்கவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், ஏலக்காய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கெட்டியான தயிர் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது).

கடாயில் வெண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லிக் கலவை, பனீர் துண்டுகள், உப்பு, 2 டீஸ்பூன் காஷ்மீரி கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தேவையான பால் ஊற்றி தளர்த்தவும். கொதித்ததும் அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி, மேலாக கெட்டியான பால் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

- ர.கிருஷ்ணவேணி, நொளம்பூர்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஹாண்டுவா: சுரைக்காய் துருவலுக்கு பதிலாக, துருவிய பூசணிக்காயை பிழிந்து நீரை நீக்கிவிட்டு, மாவுடன் சேர்த்தும் தயாரிக்கலாம்.

காஷ்மீரி ரேஷ்மி பனீர்: கடைசியாக பால் சேர்க்கும்படி சொல்லப் பட்டுள்ளது. பால் விரும்பாதவர்கள், தயிர் சேர்க்கலாம்.