வாரே வாவ்...வள்ளிக்கிழங்கு கீர் !
வாசகிகள் கைமணம்!
வள்ளிக்கிழங்கு கீர்
தேவையானவை: பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் - தலா 2, பால் - ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாதாம் எசன்ஸ் - ஒரு சொட்டு, முந்திரி - 6, திராட்சை - 10, பிஸ்தா, சாரைப்பருப்பு - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

##~## |
செய்முறை: பாலை பாதியாக சுண்டக் காய்ச்சவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட்டை தோல் நீக்கி நெய்யில் வதக்கவும் அதே நெய்யில் முந்திரி, திராட்சை, பிஸ்தா, சாரைப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.
வதக்கிய கிழங்கு, கேரட்டை சுண்டிய பாலில் போட்டு அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாகக் கொதித்ததும் பாதாம் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா சாரைப்பருப்பை சேர்க்கவும்.
- தாரா, கோவை
சோள இனிப்பு சுண்டல்
தேவையானவை: உதிர்த்த சோளம் - 2 கப், வெல்லத்தூள் - அரை கப், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய், தேன் - தலா ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை தலா - 2 டீஸ்பூன்.

செய்முறை: சோளத்தை நன்றாக வேக வைக்கவும். கடாயில் சிறிது நெய் விட்டு, தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி பாகு காய்ச்சவும். தேங்காயுடன் வெந்த சோளம், பாகு சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். கடைசியில், தேன் சேர்த்துக் கலக்கினால் சூப்பர் சுண்டல் ரெடி!
- ஜெயலக்ஷ்மி, புதுச்சேரி
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் அவருடைய கமென்ட்ஸ்...
வள்ளிக்கிழங்கு கீர்: சிறிது திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
சோள இனிப்பு சுண்டல்: சுக்குப்பொடி சேர்த்துக் கொள்ளலாம். வாசனை தூக்கலாக இருக்கும்.
படங்கள்: எம்.உசேன்