Published:Updated:

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

பிரீமியம் ஸ்டோரி

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி....'
'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'
'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'
அடுப்பு இல்லாமல் ஒர் அதிசய சமையல் !

பொன்.செந்தில்குமார்

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

உலகிலேயே மிகச் சிறந்த சமையல்காரன், சூரியன்தான்! ஆதவன் அடுப்பில்லாமல் சமைத்த ஆயிரக்கணக்கான காய்கறி, கனி வகைகளைத்தான் நாம் சுட்டுத் தின்று சத்தில்லாமல் சுத்திக் கொண்டிருக்கிறோம்.

'சமைத்த உணவைக் காட்டிலும், சமைக்காத உணவில் கூடுதல் சத்தும், சுவையும் உள்ளது' என்று அவ்வப்போது எந்தத் திசையில் இருந்தாவது தகவல் வந்து விழுந்தால், அடுத்து இரண்டு நாட்களுக்கு முட்டைகோஸ் இலையையும், கேரட் கிழங்கையும் கண்களை மூடிக் கொண்டு கடித்து தின்றுவிட்டு, 'ச்சே ரொம்ப போர்ப்பா' என்று வழக்கம்போல சமோசாவுக்கும், பீட்சாவுக்கும் மாறிவிடுகிறோம்.

இதோ... இன்று உள்ள நாகரிக உலகத்துக்கு ஏற்ப, அடுப்பில் ஏற்றாமலே... இட்லி, சாம்பார், பிரியாணி என்று சத்துள்ள உணவுகள் தயாரிப்பு பற்றி இந்தத் துறையில் பல ஆண்டு காலம் அனுபவம் பெற்ற 'இயற்கை பிரியன்' இரத்தின சக்திவேல் நம்முடன் பகிர்ந்து கொள்வதுடன், சில சுவையான 'இயற்கை உணவுகள்' ரெசிபிகளையும் கொடுத்து அசத்துகிறார்!

''பதினைந்து ஆண்டு காலமாக அடுப்பில் ஏற்றாத சத்துள்ள உணவு வகைகளைத்தான் தயாரித்துச் சாப்பிட்டு வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இயற்கை மருத்துவ பயிற்சி முகாம்களில் அவற்றை தயாரித்தும் கொடுத்து வருகிறேன்.

பொதுவாக, அடுப்பில் ஏற்றாத உணவு என்றவுடன், 'காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட விஷம், சமைத்தால்தானே முறியும்?' என்ற கேள்வி வரும். ஆனால், அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள், நாம் சாதாரணமாக சமைக்கும் 110 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு எல்லாம் அசைந்து கொடுக்காது. அதற்கு 350 டிகிரி செல்சியஸ் வெப்பம் வேண்டும். ஆனால், இந்த அளவு வெப்பத்தில் சமைத்தால், பாதி உணவு கரைந்து ஆவியாகவும்... மீதி கூழாகவும் மாறிவிடும்!

இயற்கை லட்டு

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

தேவையானவை முந்திரிப் பருப்பு - 200 கிராம், பாதாம் பருப்பு, உலர் திராட்சை - தலா 100 கிராம், பிஸ்தா பருப்பு - 50 கிராம், பேரீச்சை - 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை முந்திரி, பாதாம், பிஸ்தா அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதனுடன் கழுவிய பேரீச்சை, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் கலந்து லேசாக அரைக்கவும். அரைத்த சூடு குறைவதற்குள்ளாகவே சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இது, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து செய்யலாம். ஆனால், அதை உடனடியாகச் சாப்பிட்டுவிட வேண்டும்!

பயன்கள் உடலுக்குத் தெம்பும், வேலை செய்ய அதிக கலோரி சக்தியும் தரும் உணவு. பசியைத் தாங்கும். விந்து பலம், ஆண்மை சக்தியைக் கூட்டும். சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு நல்லது. உடலில் சதைப் பிடிக்காத குழந்தைகளுக்கு ஏற்றது. மூலச்சூடு இருப்பவர்கள் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

'அப்போ இதற்கு என்னதான் வழி...' என்கிறீர்களா? உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத இயற்கை முறை விவசாயம்! இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் இப்போது பரவலாக கிடைக்கத் துவங்கிவிட்டன. அவற்றை வாங்கி பயன்படுத்துவது, ஆயுளுக்கு கியாரன்டி!

'இயற்கை விவசாயம் இருக்கட்டும். காய்கறிகளைச் சமைத்தாலும் சரி... சமைக்காவிட்டாலும் சரி, அதிலிருக்கும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தைக் குறைக்க முடியாது என்கிறீர்கள். பிறகு எதற்காக சமைக்காமலே சாப்பிடவேண்டும்?' என்று ஒரு கேள்வி எழக்கூடும். சமைக்கும்போது சத்துக்கள் இழப்பு ஏற்படும். அதைத் தவிர்க்கத்தான் சமைக்காமலேயே சாப்பிடச் சொல்கிறோம். சமைத்த உணவு ஒரு கிலோ சாப்பிடுகிறீர்கள் என்றால்... சமைக்காத உணவு 100 கிராம் சாப்பிட்டாலே போதும்... தேவையான கலோரி சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும்.

அதுமட்டுமல்ல... எண்ணெய், கேஸ் என்று பலவிதமான செலவுகளும் முற்றிலுமாக குறைந்துவிடும்.

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

நீங்கள் சமைக்காமல் சாப்பிட நினைக்கும் காய்களில் சிறிதளவு உப்பு கலந்து இருபது நிமிடம் ஊற வைத்தால், அவற்றில் பூச்சி மற்றும் கெடுதல் செய்யும் நுண்ணுயிரிகள் இருந்தால் அவை வெளியேறிவிடும். என்ன இப்போது நம்பிக்கை வந்துவிட்டதுதானே!" என்று கேட்ட இரத்தின சக்திவேல்,

"சாப்பாட்டில் வழக்கமான உப்பு சேர்ப்போம். இது சோடியம் குளோரைடு. இதைச் சாப்பிடுவதால் கிட்னியில் கல் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. அதேசமயம், பிளாக் சால்ட் மற்றும் இந்துப்பு ஆகியவற்றில் பொட்டாசியம் குளோரைடு இருக்கிறது. இதுவும் உப்புச் சுவையைத் தரும். ஆனால், உடலுக்கு எந்த உபாதையையும் ஏற்படுத்தாது. பிளாக் சால்ட் மற்றும் இந்துப்பு என்ற இரண்டு உப்புகளைத்தான் இயற்கை உணவில் பயன்படுத்துகிறோம். இவை பூமியிலிருந்து வெட்டிஎடுக்கப்படுகின்றன. சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக் கடை மற்றும் கிராமப்புறத்து மளிகைக் கடைகளில் இவை கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு,

"இனி இயற்கை சமையலை ஆரம்பிப்போமா?!'' என்றபடியே சில ரெசிபிகளைப் பட்டியலிட்டார். அவை பெட்டிச் செய்திகளாக இடம் பெற்றுள்ளன.

"சப்புக்கொட்ட வெச்சுடுச்சு!"

அவர் சொன்ன ரெசிபிகளை அப்படியே 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணனிடம் கொடுத்து, தயாரித்துப் பார்த்து கருத்துச் சொல்லச் சொன்னோம். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

''இந்த ரெசிபியெல்லாம் என் கைக்கு வந்ததுமே... 'அடுப்பில்லாம சமையலா... நோ சான்ஸ்'னுதான் நினைச்சேன். ஆனா, ஒவ்வொரு ரெசிபியையும் செய்து முடித்து வாயில வெச்சதும்... சப்புக்கொட்ட வெச்சுடுச்சுங்கறதுதான் உண்மை!" என்று வியப்போடு சொன்னவர்,

"வெஜ் பிரியாணி செய்யுறப்ப... புதினா, கொத்தமல்லியை அரைச்சுப் பயன்படுத்தினா சுவை இன்னும் ஜோரா இருக்கும்" என்று தன் பங்குக்கு குட்டி டிப்ஸ் ஒன்றையும் தந்தார்.

"தொடர்ந்து சாப்பிட்டால், தொடரும் ஆரோக்கியம்!"

''அடுப்பில் ஏற்றாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஏற்றவையா?'' என்று பிரபல சத்துணவு நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டபோது... ''ஆதி காலத்துல நம் முன்னோர்கள் இப்படித்தான் சாப்பிட்டு வந்தாங்க. நாகரிகம் வளர, வளர அதெல்லாம் மலையேறிப் போச்சு. இப்போ மறுபடியும் அந்த உணவு முறை பிரபலமாகி வர்றது ஆரோக்கியமான விஷயம்.

இந்த இயற்கை உணவுகளைச் சாப்பிடும்போது ஆரம்பத்துல சிலருக்கு செரிமானம் குறைவா இருக்கும். அதுக்காக பயப்படத் தேவையில்ல. போகப் போக இயற்கை உணவுகளை செரிமானம் செய்ய நம்ம உடம்பு பழகிடும். தொடர்ந்து இந்த வகை உணவுகள சாப்பிட்டு வந்தா உடம்பு வலுப் பெற்று ஆரோக்கியம் கிடைக்குங்கறது உறுதி!'' என்று அடித்துச் சொன்னார்.

அப்புறமென்ன... சமைக்காமலே சாப்பிட ஆரம்பிப்போமா?!

இயற்கை இட்லி

தேவையானவை கார் அரிசி அவல் - 500 கிராம், காய வைத்த முளைத்த கோதுமை - 200 கிராம் அல்லது கோதுமை அவல் - 250 கிராம், தேங்காய் துருவல் - 5 மூடி, பிளாக்சால்ட் - சிறிதளவு.

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

செய்முறை கோதுமை அல்லது கோதுமை அவலை மிக்ஸியில் அரைக்கவும். அரிசி அவலை கல் நீக்கி, நீர் விட்டுக் கழுவவும். நீரை வடித்து, அப்படியே ஊறவிட்டு, பிறகு மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன், அரைத்து வைத்துள்ள கோதுமையைக் கலந்து, அளவான நீர் சேர்க்கவும். கூடவே, தேங்காய் துருவல், பிளாக்சால்ட் சேர்த்துக் கலக்கவும். மாவு கெட்டியாக இருக்கவேண்டியது முக்கியம். வழக்கமான இட்லி மாவு பதத்துக்கு தயாரிக்கக் கூடாது. புட்டுப் பதத்தில் இருக்கலாம். இந்த மாவை, இட்லி தட்டுகளில் வைத்து எடுத்தால், இட்லி வடிவம் கிடைக்கும். அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.

பலவகை அவல்கள் கலந்தும் இயற்கை இட்லி தயாரிக்கலாம். வெஜிடபிள் இட்லி தேவையெனில் மாவுடன் கேரட், வெள்ளரி, கோஸ் போன்றவற்றின் துருவல் கலந்தும் செய்யலாம். இத்துடன் தேங்காய்சட்னி, மல்லிச்சட்னி, மல்லித் துவையல், தக்காளிச் சட்னி சேர்த்துச் சாப்பிடலாம். இயற்கை சாம்பாரும் சேர்த்துக் கொள்ளலாம்.


வெஜ் பிரியாணி

தேவையானவை கார் அரிசி அவல் - 250 கிராம், கோதுமை அவல் அல்லது சோள அவல் அல்லது முளைத்த கோதுமை காய வைத்தது - 250 கிராம், பெரிய வெங்காயம், வெள்ளரி - தலா 2, கேரட், தக்காளி - தலா 3, கோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலை, சௌசௌ, முளைத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை - தலா 100 கிராம், உருளைக் கிழங்கு - 1, மிளகுத்தூள், சீரகத்தூள், லவங்கம், பட்டை, இந்துப்பு - சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு, எலுமிச்சை - 3, தேங்காய் துருவல் - 4 மூடி, கிராம்பு - 5, ஏலம் - 10, மாதுளை, குடமிளகாய் - தலா 2, முளைத்த பாசிப்பயறு, முளைத்த எள், இஞ்சி - தலா 50 கிராம்.

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

செய்முறை அவல்களை சுத்தம் செய்து, கல் நீக்கி, மிக்ஸியில் ரவை போல் அரைக்கவும் (எல்லா அவல்களிலும் சிறிது எடுத்தும் செய்யலாம்). காய்கறிகள் அனைத்தையும் கழுவி தோல் சீவி, தீக்குச்சி வடிவில் சிறிதாக நறுக்கவும். பாசிப்பயறு, வேர்க்கடலை, எள்... இவற்றை முதல் நாளே முளைக்க வைக்கவும். கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை கழுவி வெட்டவும். எலுமிச்சையைச் சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். இஞ்சியைத் தோல் சீவி வெட்டவும். மாதுளை முத்துக்களைப் பிரிக்கவும். உலர் திராட்சை, முந்திரியைக் கழுவி பத்து நிமிடம் ஊற விடவும். காய்கறிகள், அரைத்த அவலை விட இருபங்கு கூடுதலாக இருக்க வேண்டும்.

ஊறிய ரவை அவல், ஊறிய ரவை கோதுமையுடன் வெட்டிய காய்கறிகள், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடமிளகாய், இஞ்சி, முளைத்த தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், லவங்கம், பட்டை, கிராம்பு, ஏலம், இந்துப்பு, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்துக் கிளறவும். பிரியாணி தயார்!
பயன்கள் அருமையான, சத்தான, உடலுக்கு ஊறு விளைவிக்காத, அதிக தெம்பு தரும் வெஜ் பிரியாணி இது!


அவல் மிக்ஸர்

(இனிப்பு அல்லது காரம் என இரு சுவைகளில் தயாரிக்கலாம்)

தேவையானவை கார் அரிசி அவல் (அல்லது சோள அவல்) - 500 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பொரி, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், வெல்லத்தூள் - 250 கிராம். தேங்காய் துருவல் - 2 மூடி (மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு - சிறிதளவு, குடமிளகாய் - 1).

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

செய்முறை அவலை தண்ணீரில் நனைக்காமல் பயன்படுத்த வேண்டும். அவலை கல் நீக்கி தூசு போகப் புடைக்கவும். அத்துடன் வறுத்த வேர்க்கடலை, பொரி, பொட்டுக்கடலை, வெல்லத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். கழுவிய பேரீச்சை துண்டுகளும், உலர் திராட்சையும் சேர்க்கலாம். இதுதான் இனிப்பு அவல் மிக்ஸர்!

இதேபோல, அவலுடன் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரி, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு, தேங்காய் துருவல் கலந்து அத்துடன் குடமிளகாய் சிறிதாக வெட்டி நன்றாகக் கலக்கவும். கார அவல் மிக்ஸர் ரெடி. வறுக்காத முந்திரிகளும் பயன்படுத்தலாம்.

பயன்கள்
அல்சர் உள்ளவர்களுக்கு ஏற்றது. இது, எண்ணெய்ப் பலகாரத் துக்கு நல்ல மாற்று.


இயற்கை சாம்பார்

தேவையானவை பாசிப்பருப்புப் பொடி, துவரம் பருப்புப் பொடி - தலா 100 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - 50 கிராம், சாம்பார் பொடி - சிறிதளவு, தக்காளி - 200 கிராம், எலுமிச்சை - 3, பெரிய வெங்காயம் - 1, தேங்காய் துருவல் - மூன்று மூடி, கோஸ், வெண்பூசணி - தலா 100 கிராம், கேரட் - 200 கிராம், பிளாக்சால்ட், சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி - சிறிது, குடமிளகாய் - 2.

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

செய்முறை எல்லா காய்கறிகளையும் கழுவி தோல் நீக்கி, கேரட் துருவல் போல் துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் அரிந்து கொள்ளலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லியை கழுவவும். இஞ்சி, பூண்டு தோல் நீக்கவும். எலுமிச்சை, தக்காளியை சாறு எடுக்கவும்.

குடமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி, எல்லாவற்றையும் அரைக்கவும். தேங்காயைச் சிறிது நீர்விட்டு அரைக்கவும். தேவையான நீரில் பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி போட்டுக் கலக்கவும். துருவிய காய்கறிகள், தேங்காய் விழுது, சாம்பார் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி அரைத்த விழுது, உப்பு, சீரகப்பொடி போட்டு கலக்கவும். இதுவே இயற்கை சாம்பார்!

பயன்கள் இந்த இயற்கை சாம்பார் எல்லா சத்துகளும் கலந்த ஒரு சரிவிகித உணவு.

வெண்பூசணி கூட்டு

தேவையானவை வெள்ளைப் பூசணி - 500 கிராம், பாசிப் பருப்பு, வறுத்த வேர்க்கடலைத்தூள், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒன்று) - தலா 50 கிராம், தேங்காய் துருவல் - 2 மூடி, பொட்டுக்கடலைத்தூள் - 300 கிராம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தூள், பிளாக்சால்ட் அல்லது இந்துப்பு - சிறிதளவு.

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'

செய்முறை பாசிப்பருப்பை நீரில் ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவித் தோல், கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் துருவல், பொட்டுக்கடலைத்தூள், முளைகட்டிய தானியம், ஊறிய பாசிப்பருப்பு, வேர்க்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் தேவையான அளவு கலக்கவும். தேவைப்பட்டால் இந்துப்பு சேர்க்கவும்.

சுரைக்காய், பீர்க்கை, வெள்ளரி, புடலை, சௌசௌ என நீர்ச்சத்து நிறைந்த அல்லது எல்லா வகை கொடிக்காய்களைப் பயன்படுத்தியும் இந்த முறையில் கூட்டு தயாரிக்கலாம்.

பயன்கள் சர்க்கரை குறைபாடுடையவர்கள், உடல் மெலிய வேண்டியவர்களுக்கு இது ஏற்றது. உடலில் கெட்ட நீர் விலகி, மலச்சூடு, மூலச்சூடு, அதிக உடல்சூடு குறைகிறது. வயிற்றுவலி, வயிறு எரிச்சல், அல்சர், இரைப்பைப் புண், குடல் புண் உள்ளவர்கள் இரண்டே நாட்களில் நல்ல நிவாரணம் பெறலாம். முகப்பரு குறையும். மேனி மிளிரும். கண் எரிச்சல் குணமாகும். கண்ணாடி அணியும் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பார்வை தெளிவாகும்!

'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'
 
'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'
'கொதிக்காமலே சாம்பார்.... வேகாமலே இட்லி...'
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு