"காய்கறிக் கழிவுகளை தேவைப்படாத பழைய பிளாஸ்டிக், இரும்பு, மண் தொட்டினு எதுல வேணாலும் சேகரிச்சு, ஏரோபிக், அன்-ஏரோபிக்னு ரெண்டு முறையில உரம் தயாரிக்கலாம். இதுல ஏரோபிக் உரம் தயாரிக்க, கழிவைச் சேகரிக்கற பாத்திரத்துல காற்று போற மாதிரி துளை போடணும். அன்-ஆரோபிக் உரம் தயாரிக்க, காற்று புகாம கழிவுகளை சேகரிக்கணும். இப்படி ரெண்டு முறையிலயும் சேகரிச்ச கழிவுகள், மக்கிய உரமா மாறுறதுக்கு மூணு மாசம் ஆகும். அப்பறம் அதை தாவரங்களுக்குப் பயன்படுத்தலாம்!" என்று தொழில்நுட்பம் சொன்னவர், தான் சேகரித்து வரும் உரங்களையும் நமக்குக் காட்டினார்.
"நம்ம நாட்டுலதான் பணம் கொடுத்தா விளை நிலங்கள்கூட கட்டடங்களாகும். ஆனா, வெளி நாடுகள்ல விளைநிலங்கள வீடுகளா மாற்ற அனுமதி வழங்கறதில்லை. என்னதான் மக்கள் தொகை பெருகினாலும் தனித்தனி குடியிருப் புகளை பெருக்காம, நெடுக்குவாட்டில் அடுக்குமாடி குடியிருப்பா மாற்றுவதன் மூலம் விளைநிலங்கள், வீட்டுமனை ஏரியாக்களா மாறுறதைத் தவிர்க்கறாங்க" என்று சொன்ன நிர்மல்,
"தோட்டம்போட இடத்தைவிட மனசுதான் முதல்ல வேணும். முட்டை ஓடு, தேங்காய் ஓடு, பயன்படாத ஷூக்கள், மோட்டார் வாகன டயர்கள், புக் ராக், பவுடர் டப்பானு எங்கெல்லாம் மண்ணும் நீரும் நிக்குமோ... அங்கேயெல்லாம் செடி வளர்க்கலாம். ஏன்னா... வாழ்ந்தே தீருவேங்கற வைராக்கியம் செடி, கொடிகளுக்கு இருக்கு. விதையை விதைச்சுட்டு நீங்க தூங்கப் போகலாம்... விதை தூங்காது!" என்று 'சூப்பர் பஞ்ச்' வைத்தவர், அப்படியே தன்னுடைய கிராமத்து நினைவுகளுக்கள் புகுந்தார்.
|