Published:Updated:

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

Published:Updated:

26-03-2010
கிச்சன் கிளினிக்!
'செஃப்' ஜேக்கப்
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?

டி.பி -யுடன் டிஷ்யூம் போடும் நெல்லிக்காய் புளிக்குழம்பு !

எலும்புகளை குறி வைக்கும் 'ஆஸ்டியோபெரோசிஸ்' எனப்படும் நோயின்தாக்கம்... அதை உணவு முறைகளால் எப்படி எதிர்கொள்வது என்று கடந்த இதழ்களில் அலசினோம். இந்த இதழில் டி.பி. எனப்படும் எலும்புருக்கி நோயிலிருந்து விடுதலையாக என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி செஃப் ஜேக்கப் சொல்கிறார்.

கிச்சன் கிளினிக் !

அதைக் கேட்பதற்கு முன்பாக... டி.பி. நோய் பற்றி, சென்னை, விஜயா மருத்துவமனையின் நுரையீரல் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சங்கீதா பேசுவதைக் கேட்டுவிடுவோமா?

"டி.பி. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய். உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இது எளிதில் தொற்றிக் கொள்ளும். மைக்கோ பேக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் (Mycobacterium Tuberculosis - MTB) என்ற கிருமி தொற்றினால் இது வருகிறது. ஒருவரது உடம்பில் தொண்டை, நுரையீரல் பகுதியை இந்த நோய் தாக்கினால் மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடும். மூளை, கல்லீரல், குடல், கிட்னி, மூட்டுப் பகுதி, கண் போன்ற உடம்பின் மற்ற எந்த உறுப்புகளை தாக்கினாலும் இது அடுத்தவர்களுக்கு பரவ வாய்ப்பே இல்லை.

எதனால் வருகிறது?

பொதுவாக எல்லோருடைய உடம்புக்குள்ளும் MTB நுண்கிருமி ஒன்று, இரண்டு இருக்கும். சளி, எச்சில் மூலமாகவும், சுவாசிக்கிற பாக்டீரியாவின் அளவு அதிகமாகும்போதும், உடலுக்குள் இருக்கும் இந்த கிருமியின் அளவும் அதிகரிக்கும். சரிவர கவனிக்காவிட்டால், டி.பி. நோய் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

அறிகுறிகள்..?

காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து லேசான காய்ச்சல் இருந்து கொண்டேயிருக்கும். உடல் எடை குறைந்துவிடும். பசியே இருக்காது. மூன்று வாரத்துக்கு மேலாக இருமல், லேசான காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சிகிச்சை..?

கிச்சன் கிளினிக் !

டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களுக்கு ஒருவகையான மருந்து கொடுத்து குணப்படுத்திவிடலாம். ஆனால், டி.பி-யைப் பொறுத்தவரை, நான்கு மருந்துகள் ஒன்றாகக் கொடுத்தால்தான் கிருமிகள் அழியும். நோயாளிகள் முழுமையாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், பாதியில் நிறுத்தினால், அந்தக் கிருமிகள் முற்றிலும் அழியாமல் உடம்பில் இருந்துகொண்டே இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி, மாத்திரை மருந்துகளை முழுமையாக எடுத்துக் கொள்ளுதல், அதிக அளவு புரதச் சத்தான ஆகாரங்களை உட்கொள்ளுதல், காற்று வசதியுள்ள இடத்தில் வசித்தல் போன்றவற்றினாலும், தொடர் சிகிச்சையினாலும் குறைந்தபட்சம் மூன்றே மாதத்தில் டி.பி-யை முற்றிலும் குணப்படுத்திவிட முடியும்" என்று சொன்னார் டாக்டர் சங்கீதா.

"புரதம் நிறைந்த பாதாம், பருப்பு வகைகளில் உணவுகளைத் தயாரித்திருக்கிறேன். மருத்துவ சிகிச்சையுடன், மகத்தான இந்த உணவுகளும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்' என்று நம்பிக்கைத் தெறிக்கப் பேசும் செஃப் ஜேக்கப், ரெசிபிகளை சொல்ல ஆரம்பித்தார்.

நெல்லிக்காய் புளிக்குழம்பு

தேவையானவை நெல்லிக்காய் - 100 கிராம், புளிக் கரைசல் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 10, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த பட்டாணி - 20 கிராம், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை காய்ந்த பட்டாணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். வெந்த பட்டாணி, நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்துக் கொதித்து நன்றாக வெந்ததும், இறக்கவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
சுரைக்காய் தொக்கு

தேவையானவை தோலுடன் கட்டமாக நறுக்கிய சுரைக்காய் - 200 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், அரைத்த முந்திரி விழுது - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை பயத்தம்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி -பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஊறிய பருப்பு சேர்த்து கிளறி, முந்திரி விழுதையும் சேர்க்கவும். நறுக்கிய சுரைக்காயைப் போட்டு அடிக்கடி தண்ணீர் தெளித்துவிட்டு, எண்ணெய் மேலாக மிதந்து வரும் வரை வேகவிட்டு, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

பாதாம் குழம்பு

தேவையானவை முழு பாதாம் - 50 கிராம், அரைத்த பாதாம் விழுது - 5 டேபிள்ஸ்பூன், அரைத்த கசகசா - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலையை போட்டு வதக்கி, பாதாமை சேர்த்து வறுக்கவும். இதனுடன் அரைத்த பாதாம் விழுது, கசகசா விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து கொதித்ததும் பச்சை மிளகாயை கீறிப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

நாண், ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பத்துக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

'டயட்டீஷியன்' கருத்து...

கிச்சன் கிளினிக் !

செஃப் ஜேக்கப்பின் ரெசிபிகளைப் படித்த டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி, ''டி.பி-யைப் பொறுத்தவரை மருந்து, மாத்திரைகள் அவசியம். அத்தோடு உணவுப் பழக்கமும் மிக முக்கியம். அதேசமயம், நோய் வராமல் தடுக்க உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

ஜேக்கப் சொல்லும் நெல்லிக்காய் குழம்பு நல்ல பசியைத் தூண்டும். பச்சைப்பட்டாணியில் புரதம் கிடைத்துவிடும்.

சுரைக்காய் தொக்கிலும் முந்திரி சேர்த்திருப்பதால் காப்பர், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஷ் போன்ற தாது உப்புக்கள், புரதம், கார்போஹைட்ரேட் சத்துக்கள் கிடைத்து உடம்பை வலுவாக்கும்.

பாதாம்குழம்பில் கொழுப்பு, புரதம், தாது உப்புக்களும் அதிகமாக இருப்பதால் இழந்த எனர்ஜியை திரும்ப மீட்டுத்தந்து, தெம்பைக் கூட்டிவிடும்.

மொத்தத்தில் மூன்று ரெசிபிகளையும் சாதம், டிபன் அயிட்டங்களில் சேர்த்து சாப்பிட்டால் சத்துக்கள் உடம்பில் சேர்ந்து நோயை விரட்டிவிடும்" என்று சொன்னவர்,

''சோயா, பருப்பு வகைகள், சுண்டல், தட்டைப்பயறு போன்றவற்றில் அதிகமாக புரதச்சத்து கிடைக்கிறது.

டி.பி. நோய் இருப்பவர்கள் வெஜிடேரியனாக இருந்தால், நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் பசும்பால் சாப்பிட்டால் நல்ல தெம்பு கிடைக்கும். மேலும் நெய் சேர்த்த பருப்பு சாதம் சாப்பிடலாம்.

நான்-வெஜ் சாப்பிடுபவர்கள், தினமும் ஒரு முட்டை, வாரத்துக்கு இரண்டு நாட்கள் மீன், இரண்டு நாட்கள் சிக்கன் என வாரம் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்'' என்று கூடுதல் தகவல்களைத் தந்தார்.

- பரிமாறுவோம்...

படங்கள் வி.செந்தில்குமார்

கிச்சன் கிளினிக் !
 
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism