Published:Updated:

30 வகை 'டூர் ரெசிபி

30 வகை 'டூர் ரெசிபி

30 வகை 'டூர் ரெசிபி

30 வகை 'டூர் ரெசிபி

Published:Updated:

26-03-2010
ஊர் ஊரா சுத்தலாம்...உற்சாகமா சாப்பிடலாம்...
30 வகை டூர் ரெசிபி
30 வகை 'டூர் ரெசிபி
30 வகை 'டூர் ரெசிபி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 வகை 'டூர் ரெசிபி

"எங்க ஸ்கூல்ல ரெண்டு நாள் ஜாலியா டூர் போறோமே... நல்ல சாப்பாடு, ஸ்நாக்ஸ் செஞ்சு தாங்க... ஆனா, கண்டிப்பா போன தடவை கட்டித் தந்த புளி சாதம் வேண்டவே வேண்டாம்!"

- இது நம்ம வீட்டுக் குட்டி பாப்பா.

"போன வருஷம் மாதிரியே எங்க பார்க் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து மதுரை, ராமேஸ்வரம்னு சின்னதா ஒரு ஆன்மிக டூர் போலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒவ்வொரு தடவையும் இட்லி, தயிர் சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ்னு ஒரே போர். டிஃபரன்ட்டா... அதேசமயம் வயித்துக்கு கெடுதல் இல்லாததா கொண்டு போகணும்..."

- இது நம்ம வீட்டுப் பெரியவர்கள். நமக்கும்கூட இதே ஃபீலிங்க்ஸ்தான்.

'டூர், பிக்னிக் சாப்பாடு' என்றாலே இட்லி, புளி சாதம், தயிர் சாதம், சிப்ஸ், ஊறுகாய் என்ற நேர்க்கோட்டில் தான் சிந்திக்கிறோம். அதைத் தாண்டி எதையாவது சமைத்து எடுத்துச் சென்றாலும்... அது கெட்டுப்போய், பார்சலைப் பிரிக்கும்போதே பல் இளித்துவிடும்.

இத்தகைய சங்கடங்களை எல்லாம் தவிர்த்து, டூரின்போது கூட விதம்விதமான சாப்பாட்டைக் கையோடு கொண்டுபோய், குடும்பத்தோடு குஷியாகச் சாப்பிட இங்கே கைகொடுக்கிறார் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். "எளிதில் கெட்டுப் போகாத, சத்தான இந்த உணவுகளை தயாரிப்பதும் செம ஈஸி'' என்றும் சான்றளிக்கிறார்.

ஹேவ் எ வொண்டர்ஃபுல் ஜர்னி!

மூங்தால் பூரி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை மைதா மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை பாசிப்பருப்பை ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயம், சீரகம் தாளிக்கவும். அரைத்த பாசிப்பருப்பு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சுருள வதக்கவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் மாவை எடுத்து பூரியாகத் தேய்த்து அதன் நடுவில் பாசிப்பருப்பு மாவு உருண்டையை வைத்து சுற்றிலும் மூடவும். மீண்டும் அதை தேய்த்து சூடான தவா அல்லது தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.

குறிப்பு அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் 2 நாட்களுக்கு கெடாமல் வைத்திருக்கலாம்.

இட்லி ஃப்ரை

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை இட்லி - 7, கறிவேப்பிலை - சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை இட்லிகளை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு இட்லித் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையை தனியே பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொரித்த இட்லித் துண்டுகள், கறிவேப்பிலையுடன் இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள... சுவையான இட்லி ஃப்ரை ரெடி!

பொட்டேடோ ஃபிங்கர் ஃப்ரை

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை உருளைக்கிழங்கு - அரை கிலோ, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை உருளைக்கிழங்கை விரல் நீளத்துக்கு சற்று மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். சுடுநீரில் அவற்றைப் போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து, ஈரம் போகத் துடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ஈரமில்லாத கிழங்குகளைப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடிந்ததும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் குலுக்கினால் வித்தியாசமான பொட்டேடோ ஃபிங்கர் ஃப்ரை தயார்.

சப்பாத்தி ரோல்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை கோதுமை மாவு - ஒரு கப், பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கலவை - ஒரு கப், மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி _ சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் இட்டு சுட்டு எடுக்கவும். காய்கறிகளைத் தனியே வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்கறி கலவை, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்துக் கிளறி எல்லாம் கலந்து வரும்போது கரம் மசாலாத்தூள் போட்டுக் கிளறவும். காய்கறிகள் நன்கு மசிந்தவுடன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும். இட்டு வைத்துள்ள சப்பாத்திகள் ஒவ்வொன்றிலும் இந்தக் கலவையை வைத்து சுருட்டி, இரு முனைகளையும் மாவினால் ஒட்டவும். தோசைக்கல்லில் ஒருமுறை இருபக்கமும் போட்டு எடுத்தால், சப்பாத்தி ரோல் தயார்.

காய்கறிக்குப் பதில் பனீர் அல்லது காளான் மசாலா சேர்த்தும் செய்யலாம்.

மினி வெஜ் ஜிட்லி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை மினி இட்லிகள் - 30, கேரட், வெங்காயம், தக்காளி - தலா 1, வேக வைத்த பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன். கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை மினி இட்லித் தட்டில் இட்லிகளை அவித்து வைத்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். துருவிய கேரட், பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எல்லாம் ஒன்றாகக் கலக்குமாறு கிளறவும். மினி இட்லிகளைப் போட்டு நன்கு கலக்கி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மல்டி விட்டமின் சாலட்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை முளை கட்டிய கொண்டைக்கடலை - 1 கப், கேரட் - 1, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - அரை கப், எலுமிச்சம்பழம் - அரை மூடி, சாட் மசாலா - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை முளை கட்டிய கொண்டைக்கடலையை ஆவியில் வேக வைத்து, எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய கேரட், பேரீச்சம்பழம் சேர்த்துக் கலக்கவும். பிறகு, உப்பு, சாட் மசாலா போட்டுக் கலந்து, எலுமிச்சம்பழம் பிழிந்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து அலங்கரிக்கவும்.

குறிப்பு இது, வெளியூரில் தங்கும்போது சமைக்கும் வசதி உள்ள இடங்களில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சாலட்.

ஆலு பரோட்டா

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை கோதுமை மாவு - ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் - 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து, பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும். சப்பாத்தி மாவை சிறு கிண்ணம் போல் செய்து அதனுள் உருளைக்கிழங்கை ஸ்பூனால் கொஞ்சமாக எடுத்து வைத்து நன்கு மூடவும். சப்பாத்திக் கல்லில் மெதுவாகத் தேய்க்கவும். இதே போல், ஓவ்வொரு சப்பாத்தியையும் செய்யவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதை உருளைகிழங்குக்குப் பதில் காலிஃப்ளவரிலும் செய்யலாம்.

மாங்காய் சாதம்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை சாதம் - ஒரு கப், மாங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், மாங்காய் துருவல், இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் பெருங்காயம், உப்பு சேர்த்து சுருள வதக்கவும். சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு சாதம் உதிரியாக இருக்க, குக்கரில் இருந்து சாதத்தை எடுத்தவுடன் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும்.

எள் சாதம்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை சாதம் - ஒரு கப், எள் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் எள், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, பொடித்த எள் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சாதத்தை சேர்த்து சீராகக் கலக்கவும்.

ஸ்டஃப்டு பிண்டி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை வெண்டைக்காய் - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பொடிக்கு காய்ந்த மிளகாய் - 5, தனியா - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன்.

செய்முறை வெண்டைக்காயை சுத்தமாகக் கழுவி, துடைத்து காம்பு நீக்கவும். ஒவ்வொரு காயையும் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். வெறும் கடாயில், பொடி செய்ய வேண்டியவற்றை போட்டு வறுத்துப் பொடித்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். கீறிய வெண்டைக்காயில் பொடித்த பொடியை வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, ஸ்டஃப்டு வெண்டைக்காய்களை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

அப்படியே சாப்பிட ஏற்றது. சாத வகைகளுக்கு சிறந்த சைட் டிஷ்.

மிஸ்ஸி ரொட்டி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை கோதுமை மாவு, கடலை மாவு - தலா அரை கப், தயிர் - கால் கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை உருட்டி சிறு சிறு துண்டுகளாக்கி, அவற்றை சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, அது லேசாக சூடானவுடன் திருப்பிப் போடவும். அதனை எடுத்து அடுப்புத் தணலில் நேரடியாகச் சுட்டு எடுக்கவும். இப்படி ஒவ்வொன்றையும் சுட்டெடுத்து அதன்மேல் நெய் தடவி வைக்கவும்.

மாவுடன் பொடியாக நறுக்கிய பாலக் அல்லது வெந்தயக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

பாசிப்பயறு கிச்சடி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பாசிப்பயறு - ஒரு கப், அரிசி - முக்கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை அரிசி, பாசிப்பயறை தனித்தனியே அரை மணி நேரம் ஊற விடவும். குக்கரில் அரிசி, பாசிப்பயறு, மஞ்சள்தூள், மிளகு, உப்பு, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்'மில் வைத்து அடுப்பை அணைக்கவும். ஆவி போனதும், குக்கர் மூடியைத் திறந்து நெய் விட்டுக் கிளறி பறிமாறவும்.

பனீர் ரோல்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை உருளைக்கிழங்கு - 2, துருவிய பனீர் - 1 கப், கேரட், வெங்காயம் - தலா 1, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கேரட்டை துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். துருவிய பனீர், கேரட், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், மைதா மாவு, கொத்தமல்லியை கிழங்குடன் சேர்த்துப் பிசைந்து, கொழுக்கட்டை வடிவத்தில் உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு தக்காளி சாஸ் சரியான காம்பினேஷன்.

பச்சை மிளகாய் ஊறுகாய்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை நீளமான பச்சை மிளகாய் - அரை கிலோ, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

மிளகாயின் உள்ளே வைப்பதற்கு கடுகுப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், சோம்புப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை மிளகாயைக் கழுவி, ஈரம் போகுமளவு துடைத்து இரண்டாகக் கீறிக் கொள்ளவும். மிளகாயின் உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இதை ஒவ் வொரு மிளகாய் உள்ளேயும் சிறிது சிறிதாக வைத்து, பீங்கான் ஜாடியில் போட்டு வைக்கவும். அந்த ஜாடியை 4-5 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் விட்டு நன்கு கலக்கினால் ஊறுகாய் ரெடி!

சிவ்டா

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை அவல் - ஒரு கப், முந்திரி - 10, கொப்பரைத் தேங்காய் - 15 துண்டுகள், வேர்க்கடலை - கால் கப், காய்ந்த திராட்சை, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு அவலைப் பொரித்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கறி வேப்பிலை, மஞ்சள்தூள், முந்திரி, திராட்சை, கொப்பரைத் தேங்காய், வேர்க்கடலையை வறுக்கவும். வறுத்தவற்றை வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு நன்கு கலக்கவும். உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் கலந்து, காற்றுப் புகாதவாறு டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு பயணத்தின்போது சாப்பிடுவதற்கு ஏற்ற சிம்பிளான நொறுக்ஸ் இது.

உப்பு உருண்டை

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை அரிசி மாவு - 1 கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், துருவிய இஞ்சி - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதனுடன் சேர்த்து வதக்கி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு வெந்தவுடன் இறக்கவும். மாவு ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு இது வயிற்றுக்கு கெடுதல் செய்யாத டூர் ரெசிபி!

டிரெய்ன் சட்னி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை தேங்காய் துருவல் - அரை கப், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 2, புளி - 50 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை வெறும் கடாயில் தேங்காய் துருவல், பூண்டு, உப்பு, புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை வதக்கவும். ஆற வைத்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பயணத்தின்போது சாதத்துடன் சாப்பிட ஏற்ற சட்னி இது.

குறிப்பு ஈரம் படாமல் இருந்தால் ஒருநாள் வரை கெடாமல் இருக்கும். அம்மியில் அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

கத்திரிக்காய் வதக்கல்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பிஞ்சுக் கத்திரிக்காய் - அரை கிலோ, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை கத்தரிக்காயை சுத்தமாகக் கழுவி, நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கத்திரிக்காய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். லேசாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் வைத்து காய் வேகும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.

குறிப்பு இதேபோல் வாழைக்காய், உருளைக்கிழங்கு, வேக வைத்த சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கிலும் செய்யலாம். எண்ணெயிலேயே வதக்குவதால் சீக்கிரம் கெட்டுப் போகாது.

டைமண்ட் பிஸ்கட்ஸ்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை மைதா மாவு - அரை கிலோ, சர்க்கரை - கால் கிலோ, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை மைதா மாவுடன் சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துப் பிசறிக் கொள்ளவும். பிறகு, தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி போல் தேய்த்து, டைமண்ட் வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வும். கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடிந்ததும், காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

குறிப்பு பயணத்தில் கொறிக்க சரியான ஸ்நாக்ஸ். இனிப்புக்குப் பதில், காரம் சேர்த்தும் செய்யலாம்.

கார்ன் இட்லி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை இட்லி மாவு - 3 கப், வேக வைத்த சோளம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய பாலக்கீரை - அரை கப், பொடித்த மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை உதிர்த்த சோளத்தை உப்பு சேர்த்து வேக வைக்கவும். இட்லி மாவுடன் நறுக்கிய கீரை, வேக வைத்த சோளம், மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லித் தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேக வைத்து எடுக்க... கார்ன் இட்லி ரெடி!

க்ரீன் ரைஸ்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை சாதம் - ஒரு கப், கொத்தமல்லி - 1 கப், புதினா - கால் கப், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், எலுமிச்சம் பழம் - அரை மூடி.

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். ஆய்ந்து, தண்ணீரில் அலசிய கொத்தமல்லி, புதினாவுடன் பச்சை மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கவும். வாசனை வந்ததும், சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். க்ரீன் ரைஸ் ரெடி!

பாலக் பக்கோடா

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பாலக்கீரை - ஒரு கட்டு, கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், நசுக்கிய இஞ்சி - பூண்டு, சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசிப் பொடியாக நறுக்கவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நசுக்கிய இஞ்சி-பூண்டு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசறவும். பிறகு, கொஞ்சம் தண்ணீர் விட்டு பக்கோடாவுக்கு தேவையான பதத்தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுப் பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஸ்டஃப்டு பட்டாணி பேட்ரீஸ்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பட்டாணி (வேக வைத்தது) - அரை கப், மைதா மாவு - 1 கப், தக்காளி, வெங்காயம் - தலா 1, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் விட்டு, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு, வேக வைத்த பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, வாசனை வந்ததும் கரம் மசாலாத்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். மைதா மாவை சப்பாத்தியாக தேய்த்து, நடுவே பட்டாணிக் கலவையை கொஞ்சம் வைத்து, சுற்றிலும் மடித்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொன்றையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, இவற்றைப் பொரித்தெடுத்தால் சுவையான ஸ்டஃப்டு பட்டாணி பேட்ரீஸ் தயார்.

கறிவேப்பிலை சாதம்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை சாதம் - 1 கப், கறிவேப்பிலை - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், புளி - 50 கிராம், பூண்டு - 2 பல், இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, உப்பு, காய்ந்த மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு, பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். ஆறியதும், மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டுத் தாளித்து, அரைத்த கலவையை சேர்த்துக் கலக்கவும். பிறகு, சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.

மாங்காய்த் தொக்கு

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பெரிய மாங்காய் - 1, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். கடுகு, வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து, துருவிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் மிளகாய்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். மாங்காய் சுருள வதங்கி வரும்போது, பொடித்த பொடியைப் போட்டு எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ஆறியதும், ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

தயிர் சாதத்துக்கு ஏற்ற சூப்பர் ஜோடி இது.

தக்காளித் தொக்கு

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை தக்காளி - அரை கிலோ, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை வெறும் கடாயில் கடுகு, சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தை வறுத்து ஆற வைத்துப் பொடிக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளிப் பழங்களைச் சேர்த்து நன்கு வதக்கி, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை விடவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். தக்காளி நன்கு வதங்கி, கலவை கொதித்து வரும்போது பொடித்த பொடியைத் தூவி நன்கு கிளறவும். எண்ணெய் மிதந்து வரும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்துக் கிளறி இறக்கவும். ஆறியதும், ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

பிரெட் சாண்ட்விச்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பிரெட் ஸ்லைஸ் - 6, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1, நெய் - தேவையான அளவு.

செய்முறை கேரட், உருளைக்கிழங்கைத் துருவிக் கொள்ளவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் தக்காளி சாஸைத் தடவி அதன் மீது கேரட் துருவலைத் தூவி இன்னொரு ஸ்லைஸால் மூடவும். அதன் மீதும் தக்காளி சாஸ் தடவி, உருளைக்கிழங்கு துருவலைத் தூவி மற்றொரு ஸ்லைஸால் மூடவும். தவாவில் நெய் தடவி ரெடி செய்த பிரெட் ஸ்லைஸைச் சுட்டெடுக்கவும். இதேபோல் எல்லா ஸ்லைஸ்களிலும் செய்யவும். இதை டோஸ்டர் பயன்படுத்தியும் செய்யலாம்.

குறிப்பு பயணத்தின்போது காலையில் சாப்பிட ஏற்ற டிபன் இது.

மாங்காய்-கோவைக்காய் சட்னி

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை மாங்காய் - 1, கோவைக்காய் - கால் கிலோ, பச்சை மிளகாய் - 8, கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை மாங்காய், கோவக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு மாங்காய், கோவக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஆறியதும், மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவறைப் போட்டுத் தாளித்து, அரைத்து வைத்திருப்பதை சேர்த்து வதக்கவும். சுருள வதங்கியவுடன் இறக்கி ஆற வைத்தால் சட்னி தயார். இதை சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும். சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்.

குறிப்பு மாங்காயில் உள்ள புளிப்புத் தன்மையால் இந்த சட்னி சீக்கிரம் கெடாது.

ஸ்வீட் கேக்

30 வகை 'டூர் ரெசிபி

தேவையானவை பச்சரிசி - 2 கப், பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

பூரணத்துக்கு தேங்காய் துருவல் - அரை கப், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு பொடி - ஒரு டீஸ்பூன்.

செய்முறை பச்சரிசியை 5-6 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். பொடித்த சர்க்கரை சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் மட்டும் வேக விட்டு எடுக்கவும். அதில் தேங்காய்ப் பூரணத்தை வைத்து சுருட்டிக் கொள்ளவும். ஸ்வீட் கேக் ரெடி.

இது ஆறிய பிறகும் சாப்பிட சுவையாக இருக்கும்.

தொகுப்பு நாச்சியாள் - படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக்
அட்டையில் ரிச்சா

30 வகை 'டூர் ரெசிபி
 
30 வகை 'டூர் ரெசிபி
30 வகை 'டூர் ரெசிபி
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism