தேவையானவை பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி கலவை - தலா ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பிரெட் துண்டுகள் - 2, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மசாலாவுக்கு பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - ஒன்று, ரோஜா மொட்டு - ஒரு துண்டு, கசகசா - ஒரு டீஸ்பூன். முந்திரி - 3, பாதாம் - 3, வதக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - 5, சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய்ப் பால் - கால் கப்.
செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரோஜா மொட்டு, கசகசாவை வறுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், இஞ்சி, பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், மிளகு, சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய்ப் பால் விட்டு நைஸாக அரைக்கவும்.
பிரெட் துண்டுகளை, எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும், தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கி, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து... அரிசி, அரைத்த மசாலாவையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடவும். மீண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்கி, பிரெட் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.
தேங்காய்ப் பால் பிரியாணி
|