பாலக்கீரை ஊத்தப்பம் பலே !
வாசகிகள் கைமணம்
வேர்க்கடலை பலகாரம்
தேவையானவை: வேர்க்கடலை, சர்க்கரை - தலா 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அரிசி மாவு - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் (அ) பாலில் கரைத்த அரிசி மாவு, எண்ணெய் - தேவையான அளவு.

##~## |
செய்முறை: வேர்க்கடலையை வறுத்து, தோலை நீக்கவும். தேங்காயைத் துருவி, பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டைகளை சரிவர பிடிக்க முடியவில்லையெனில், மிதமான சுடுதண்ணீரைத் தெளித்துப் பிடிக்கலாம். தனியே கரைத்த அரிசி மாவில் உருண்டைகளைத் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- பிரேமா சாந்தாராம், சென்னை-110
பாலக்கீரை ஊத்தப்பம்
தேவையானவை: ரவை - 200 கிராம், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், பாலக்கீரை - ஒரு கட்டு (லேசாக வேக வைத்து அரைக்கவும்), வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, கடலை மாவு மூன்றையும் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கரைத்து, 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும். உப்பு, மசித்த பாலக்கீரையை சேர்த்துக் கலக்கி, கால் மணி நேரம் வைத்திருந்து தோசை கல்லில் ஊத்தப்பமாக வார்த்து எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.
- விஜயா ராமன், மேகாலயா
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
பாலக்கீரை ஊத்தப்பம் கீரையை அரைக்கும்போது தண்ணீரைக் குறைத்து தயிர் சேர்த்தால், புளிப்புச் சுவையுடன் அருமையாக இருக்கும்.
வேர்க்கடலை பலகாரம் கரைத்த அரிசி மாவுடன் வறுத்துப் பொடித்த உளுந்து மாவை சிறிது சேர்க்கலாம். வாசனையாக இருக்கும்.
படங்கள்: கே.கார்த்திகேயன்