ஸ்பெஷல் 1
Published:Updated:

ஃபைவ் ஸ்டார் சமையல்

ஃபைவ் ஸ்டார் சமையல்

நிக்கேத்தனா

'

ஃபைவ் ஸ்டார் சமையல்

உருளைக்கிழங்கு பொரியல்', 'முருங்கைக்காய் பொரியல்' எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்! 'பைன்ஆப்பிள் பொரியல்'? கோபுகுமார் கைப்பக்குவத்தில் உருவாகும் இந்தப் பொரியலுக்கு, மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப்களுக்கு இடையேயான சமையல் போட்டியில், 'மிகச்சிறந்த உணவு வகை' எனும் விருதே இதற்குக் கிடைத்திருக்கிறது!

''பொரியல் என்றால், பொதுவாகக் காய்களைத்தான் பயன்படுத்து வார்கள். ஆனால், ஒரு பழத்தை வைத்தே அதைச் செய்து காட்டியது... பலரையும் கவர்ந்தது’' என்று சொல்லும் கோபுகுமார், அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் மூன்றரை ஆண்டுகள், வாஷிங்டன் மாநகரில் இரண்டு ஆண்டுகள், இந்தியாவின் மும்பையில் ஐந்து ஆண்டுகள் என்று ஸ்டார் ஹோட்டல்களில் பணியாற்றிய பெரும் அனுபவத்தோடு, தற்போது... சென்னை, அண்ணா சாலை, ரெயின் ட்ரீ ஹோட்ட லின் 'சூ செஃப்' என்ற பொறுப்பில் இருக்கிறார்.

##~##

'அம்பேத்கர்' சினிமா ஷூட்டிங்கின் போது... சுமார் ஆறு மாத காலம் மும்பையின் 'லீலா கெம்ஷெகி’ ஹோட்டலில் குடும்பத்தோடு தங்கி இருந்தாராம் மலையாள ஹீரோ மம்முட்டி. அங்கே பணியாற்றிய கோபு குமார், மம்முட்டியின் குடும்பத்தை தன்னுடைய கைப்பக்குவத்தின் மூலமே கட்டிப்போட்டு விட்டாராம்.

பைன்ஆப்பிள் (அன்னாசிப் பழம்) பொரியல்

தேவையான பொருட்கள்: ரீஃபைண்ட் ஆயில் - சிறிதளவு, சிறிதாக நறுக்கப்பட்ட வெங்காயம் - அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு-சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட பைன்ஆப்பிள் - 1 கப், சர்க்கரை - 4 டீஸ்பூன்.

ஃபைவ் ஸ்டார் சமையல்

செய்முறை: வாணலியில் ரீஃபைண்ட் ஆயிலை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு வதக்கி, அதில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைக் கலந்து அடிபிடிக்காமல் கிளறுங்கள். பிறகு... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் பைன்ஆப்பிள் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கிளறுங்கள். தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து, லேசாகக் கிளறினால்... சுண்டி இழுக்கும் வித்தியாசமான சுவையில் பைன்ஆப்பிள் பொரியல் ரெடி!

விருப்பப்பட்டால், முக்கால் கப் தேங்காய் துருவலை கடைசியாக சேர்க்கலாம். சர்க்கரையை விரும்பாதவர்கள், உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

- பரிமாறுவோம்...

படங்கள்: ஜெ.தான்யராஜு