Published:Updated:

நியூட்ரி பூரி... குட்டீஸ் சாய்ஸ்!

சோயா கொண்டாட்டம்! ஆதிரை வேணுகோபால், படங்கள்: எம்.உசேன்

##~##

 ஹெல்த் அவேர்னஸ் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக விளங்கும் சோயாவின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க சோயாவில் ருசியான, வெரைட்டியான ரெசிபிகளை இங்கே வழங்குகிறார்... சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

சோயா சங்ஸ் நியூட்ரி பூரி

தேவையானவை: சோயா சங்ஸ் - 10, கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், பால் - 2 கப், சின்ன ஆப்பிள், வாழைப்பழம் - தலா ஒன்று, முந்திரி - 10, திராட்சை - 10, சர்க்கரை - தேவையான அளவு, மில்க்மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து துண்டுகளாக்கவும். கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்து நீர் தெளித்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன பூரிகளாகத் திரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சோயா சங்ஸை கொதி நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நீரை ஒட்டப் பிழிந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பாலை சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் அதில் பொடித்த சோயா சங்ஸை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். அதனுடன் பழத்துண்டுகள், முந்திரி, திராட்சை, மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறவும். இந்த பால் கலவையை பூரி மீது ஊற்றி பரிமாறவும். குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.

நியூட்ரி பூரி... குட்டீஸ் சாய்ஸ்!

சோயா கிரானுல்ஸ் பிரெட் பாயசம்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - கால் கப், ஸ்வீட் பிரெட் ஸ்லைஸ் - 4, சர்க்கரை - தேவையான அளவு, பால் - அரை லிட்டர், முந்திரி - 10 (நெய்யில் வறுத்துக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சோயா கிரானுல்ஸை சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

பிரெட்டை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும் (பொடித்ததை அளந்து, அதே அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும்).

பாலை நன்கு காய்ச்சி அதனுடன் பொடித்த பிரெட், பொடித்த சோயா கிரானுல்ஸ், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், சிறிதளவு நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும் (பாயசம் சற்று கெட்டியாக இருந்தால், காய்ச்சிய பாலை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்).

அடுத்த கட்டுரைக்கு