Published:Updated:

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

விலைவாசிக்கு தீர்வு...மனதுக்கு நிறைவு...

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

''அநியாயத்துக்கு கறிகாய் விலை ஏறிப்போய் நிக்குதே..! அரை கிலோ வாங்கின காசுக்கு, கால் கிலோ வாங்கறதே அதிசயமாத்தான் இருக்கு. கால் கிலோ காயை வாங்கி சமைச்சா... யாருக்கும் நிரக்க மாட்டேங்குதே..!'’

- சமீப மாதங்களாக ஊர் முழுக்க இதே புலம்பல்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சிக்கலுக்கு, ''கால் கிலோ காயா இருந்தாலும், பருப்பு, தானியம், கடலைனு கலந்து கட்டி சமைச்சுப் பாருங்க... கறிகாய் சாப்பிட்ட திருப்தி முழுசா கிடைச்சுடும். சாப்பாடு, சப்பாத்தி, பூரினு எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம்... கலந்த சாதமாகவும் தயாரிக்கலாம்'' என்று அருமையாக தீர்வு தருகிறார் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகத்தின் சிஷ்யை... வளசரவாக்கம், பாரதி முரளி. அவருடைய கைவண்ணத்தில் இங்கே இடம் பிடிக்கிறது முப்பது வகை பொடிமாஸ்-உசிலி ரெசிபி!

ரெடி... ஸ்டெடி... குக்..!

 பீட்ரூட் பொடிமாஸ்

தேவையானவை: பீட்ரூட் - அரை கிலோ, மலர வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பாதாம் - 10, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். துருவிய பீட்ரூட், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மிதமான தீயில் காய் வேகும் வரை கிளறவும். இதில் மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். பாதாமை வெறும் கடாயில் நன்றாக சிவக்க வறுத்து, பொடித்து சேர்க்கவும்.

 பீன்ஸ் உசிலி

தேவையானவை: பீன்ஸ் - கால் கிலோ, வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, குழையாமல் வேக வைக்கவும். கொண்டைக்கடலையை வேக வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து உதிர் உதிராக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை கலவையைப் போட்டு... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து உதிராக வரும் வரை கிளறவும். பிறகு வேக வைத்த பீன்ஸை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
 

குடமிளகாய்-பட்டாணி உசிலி

தேவையானவை: பட்டாணி - அரை கப், குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: பட்டாணியில் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், சோம்பு, சிறிது உப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும்.  இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் குடமிளகாயை வதக்கி வைக்கவும்.  கடாயில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்து பொல பொலவென்று ஆகும் வரை கிளறி... வதக்கிய குடமிளகாய், பட்டாணி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

வெந்தயக்கீரை-பட்டாணி பருப்பு உசிலி

தேவையானவை: வெந்தயக்கீரை, பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஊற வைத்து... மிளகாய், உப்பு சேர்த்து ககரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன்... நறுக்கிய வெந்தயக்கீரை, பட்டாணி சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். இந்தக் கலவையை ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கீரை - பருப்பு கலவையைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

 அவரைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: அவரைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 2, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

வறுத்துப் பொடிக்க: பச்சரிசி - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: அவரைக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய அவரைக்காயைப் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும், வறுத்த அரைத்த பொடியை சேர்த்துக் கிளறவும்.

வாழைப்பூ பருப்பு உசிலி

தேவையானவை: வாழைப்பூ - 1, துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 7, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,  எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கி, நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.  துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பு விழுதைப் போட்டுக் கிளறவும். உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள வாழைப்பூவை போட்டுக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: துவரம்பருப்புக்கு பதிலாக கடலைப்பருப்பிலும் இதைச் செய்யலாம்.

 கொத்தவரங்காய் பொடிமாஸ்

தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும். இதில் வெந்த கொத்தவரங்காயைப் போட்டுக் கிளறி, அரைத்த விழுதை சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடம் கிளறி இறக்கவும். 

வாழைப்பூ-கீரை உசிலி

தேவையானவை: சிறிய வாழைப்பூ - 1, ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - கால் கப், சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் - தலா 4, நீர் மோர் - சிறிதளவு,  உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள்தூள் - எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வெங்காயம், கீரையைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் போட்டு மூன்று சுற்று சுற்றவும். துருவல் போல் ஆனதும் நீர் மோரில் கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டுத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வாழைப்பூவை பிழிந்து சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். பிறகு, நறுக்கி வைத்துள்ள கீரையைச் சேர்த்து, ஐந்து நிமிடம் கழித்து, வேக வைத்த பருப்பைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
 

பாகற்காய் - பருப்பு உசிலி

தேவையானவை: பாகற்காய், வெங்காயம் - தலா 1, காய்ந்த மிளகாய் - 2, பாசிப்பருப்பு - 3 டீஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, எள்ளு - தலா 2 டீஸ்பூன்.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், பாகற்காயை பொடியாக நறுக்கவும். பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். காய் வெந்ததும் தண்ணீரை வடித்துவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி... பாசிப்பருப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும், வேக வைத்த பாகற்காயை அதில் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சுண்டியதும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். அரைத்த பொடி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

 வெண்டைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து அரைத்து... மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதை இட்லி தட்டில் வைத்து, வெந்தவுடன் இறக்கி, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெண்டைக்காய் சேர்த்து மொறுமொறுப்பாக வதக்கி தனியே வைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்து வேக வைத்து உதிர்த்த பருப்பு, வதக்கிய வெண்டைக்காயைப் போட்டுக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

 கருணைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வேக வைத்த கருணைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு 20 நிமிடம் வதக்கி, உப்பு போட்டு, எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சேர்த்து இறக்கவும்.

  காலிஃப்ளவர் பொடிமாஸ்

தேவையானவை: காலிஃப்ளவர், வெங்காயம் - தலா 1, தக்காளி - 2, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1, கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து, உப்பு போட்ட தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு வைத்து எடுக்கவும் (பூவில் புழுக்கள் இருந்தால் வெளியேறிவிடும்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, உப்பு, காலி ஃப்ளவரை சேர்த்து, கால் டம்ளர் தண்ணீர் விட்டுக் கிளறி, மூடி வைக்கவும். வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்து, சுருள கிளறி இறக்கவும்.

முள்ளங்கி-கேரட் பொடிமாஸ்

தேவையானவை: முள்ளங்கி, கேரட், வெங்காயம், எலுமிச்சம் பழம் - தலா 1, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முள்ளங்கி, கேரட் இரண்டையும் துருவி, தண்ணீரை நன்றாகப் பிழிந்து, தண்ணீர் தெளித்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். துருவி வேக வைத்த காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி வதக்கவும். கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

 முருங்கைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: முருங்கைக்காய் - 10, துருவிய தேங்காய் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - பாதி அளவு, கடுகு, சோம்பு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயுடன் சீரகம், சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சற்று பெரிய கடாயில் முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வேக வைத்த முருங்கைக்காய் துண்டுகளை இதில் போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

 பருப்புக் கீரை பொடிமாஸ்

தேவையானவை: பருப்புக் கீரை - 2 (அ) 3 கட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 5 பல், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 1, வேர்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை டேபிள்ஸ்பூன்.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து பொடியாக நறுக்கவும். பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து, பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய கீரையை சேர்த்து, பாதியளவு வதங்கியதும், உப்பு, பொடித்த மசாலா சேர்த்துப் புரட்டி, மூடி போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

 ஆலு மசாலா ஃப்ரை பொடிமாஸ்

தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ (வேக வைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். பொரித்த கிழங்கிலிருந்து எண்ணெய் வடிந்ததும், அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, மாங்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்,

 பாகற்காய் உசிலி

தேவையானவை: பாகற்காய் - கால் கிலோ, வெங்காயம் - 2, இஞ்சி - ஒரு துண்டு, தக்காளி - 3, பூண்டு - 5 பல், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி... உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டு பிசிறவும். வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பாகற்காயைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, எண்ணெயை வடித்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த வெங்காய விழுதைப் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். பிறகு, பொரித்த பாகற்காய் துண்டுகளைப் போட்டு, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் வதக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

பனீர் பொடிமாஸ்

தேவையானவை: பனீர் - 200 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: பனீரை உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, பனீரை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, உப்பு போட்டு நன்றாகக் கிளறி, எலுமிச்சைச் சாறு விட்டு இறக்கவும்.

கத்திரிக்காய் பொடிமாஸ்

தேவையானவை: கத்திரிக்காய் - அரை கிலோ, வேர்க்கடலை - 50 கிராம், கறுப்பு எள், தனியா - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய், தனியா, சீரகம், எள் போட்டு வறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி பொடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் பொரிக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வேர்க்கடலை, வறுத்த கத்திரிக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்த மசாலாத்தூளை தூவி இறக்கவும்.

குடமிளகாய் பொடிமாஸ்

தேவையானவை: நறுக்கிய குடமிளகாய் - கால் கிலோ, தனியா, கொப்பரை - தலா 2 டீஸ்பூன், எள், வேர்க்கடலை - தலா 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, புளி - சிறிய எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: தனியா, வேர்க்கடலை, எள், கொப்பரை ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய குடமிளகாயைப் போட்டு நன்கு வதக்கி, தனியே வைக்கவும். திரும்பவும் கடாயில் எண்ணெய் ஊற்றி பொடித்து வைத்துள்ள மசாலாத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி... மிளகாய்த்தூள், புளிக் கரைசல், உப்பு சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.  வதக்கி வைத்த குடமிளகாயை இதில் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

 பிண்டி ஸ்டஃப்டு உசிலி

தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், வெங்காயம், தக்காளி - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி)  - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மாங்காய்த்தூள், ஆகியவற்றை உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்டைக்காய்களை சுத்தம் செய்து, காம்பு நீக்கி, நீளவாக்கில் கீறி, கலந்து வைத்துள்ள மசாலாவை ஒவ்வொரு வெண்டைக்காயிலும் சிறிதளவு அடைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி, மீதமுள்ள மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா ஸ்ட்ஃப்டு செய்த வெண்டைக்காய்களைப் போட்டு பொரித்தெடுத்து, வதக்கிய தக்காளி - வெங்காய மசாலாவை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 மிக்ஸ்டு வெஜிடபிள் உசிலி

தேவையானவை: கோஸ் - கால் கிலோ, பீன்ஸ் - 100 கிராம், பட்டாணி - அரை கப், கேரட் - 1, தேங்காய் துருவல் - ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு, வேக வைத்த கடலைப்பருப்பு - தலா அரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: காய்கறிகளைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்பு போட்டு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, வேக வைத்த காய்கள், வேக வைத்த பருப்புகள், தேங்காய் துருவல் சேர்த்து, உதிர் உதிராக கிளறி இறக்கவும்.

 முள்ளங்கி பொடிமாஸ்

தேவையானவை: முள்ளங்கி - 100 கிராம், வெங்காயம், காய்ந்த மிளகாய் - தலா 1, பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, பயத்தம்பருப்பு, மஞ்சள்தூள், முள்ளங்கி சேர்த்து வதக்கி, வெந்ததும் நன்றாகக் கிளறி... தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

 வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: வாழைக்காய் - 2, வெங்காயம் - 1, கீறிய பச்சை மிளகாய் - 3, தேங்காய் துருவல் - அரை கப்,  கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: பொட்டுக்கடலை - 50 கிராம், சீரகம், வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: வாழைக்காயைத்  தோலுடன் இரண்டு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து, கால் வேக்காடு வேகவிட்டு தோலுரித்து, துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்கா யம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் துருவிய வாழைக்காய், தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கிளறி, வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி கிளறி இறக்கவும். 

சுரைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: சுரைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்து தோல் நீக்கிய பட்டாணி - தலா கால் கப் (பட்டாணி கடைகளில் கிடைக்கும்), காய்ந்த மிளகாய் - 3, பூண்டு - 7 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: சுரைக்காயைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் துருவிய சுரைக்காய், உப்பு போட்டு வேகவிடவும். காய் வெந்ததும்... வறுத்த காய்ந்த மிளகாய், வறுத்த வேர்க்கடலை, வறுத்த பட்டாணி சேர்ந்துக் கலந்து கிளறவும்.

 பாகற்காய் பொடிமாஸ்

தேவையானவை: பெரிய பாகற்காய், வெங்காயம், தக்காளி - தலா 2, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலைப் பொடி - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  கெட்டியான புளிக் கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: பாகற்காயைப் பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பாகற்காய், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பூண்டைப் போட்டு வதக்கி... புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், தனியாத்தூள், வெல்லம் சேர்த்துக் கிளறவும். இதில் நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, காய் வெந்ததும் கடைசியில் பொட்டுக்கடலைப் பொடி தூவி, நன்றாகக் கிளறி இறக்கவும்.

 மொச்சை-கோஸ் உசிலி

தேவையானவை: மொச்சை - 50 கிராம், கத்திரிக்காய், முட்டைகோஸ் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், கீறிய பச்சை மிளகாய் - 6, கடலைப்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: மொச்சையை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், கோஸை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து... பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு வதக்கி, வேக வைத்த மொச்சையைச் சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். 

சௌசௌ பொடிமாஸ்

தேவையானவை: சௌசௌ - 2, கீறிய பச்சை மிளகாய் - 6, பட்டை - சிறு துண்டு, கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - 100 கிராம், வெங்காயம் - 2, சோம்பு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: சௌசௌவை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். பொட்டுக்கடலை, சோம்பு இரண்டையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் சௌசௌ, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். காய் வெந்ததும் பொட்டுக்கடலை - சோம்புத்தூளை தூவி, கிளறி இறக்கவும்.

 உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, எலுமிச்சம் பழம் - 1, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி துருவி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்குவதற்கு முன் எலுமிச்சைச் சாறு பிழியவும்.

 சோயா பொடிமாஸ்  

தேவையானவை: சோயா உருண்டைகள் - 20, வெங்காயம், தக்காளி - தலா 2, கடுகு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 10 பல், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: பச்சரிசி - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4 (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பச்சைத் தண்ணீரில் அலசி, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு தாளித்து, பூண்டை தட்டிப் போட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வெந்ததும், உப்பு சேர்க்கவும். இதில் பொடித்த சோயா, பொடித்து வைத்திருக்கும் பொடி இரண்டையும் தூவி கிளறி இறக்கவும்.

தொகுப்பு: ரேவதி, படங்கள்: எம்.உசேன்