Published:Updated:

குழைந்தது சாதம்.... குறையவில்லை அன்பு !

ஆருத்ரா தரிசன மகிமை

நம் ஒவ்வொருவருடைய பிறப்போடு பின்னிப் பிணைந்திருக்கும் நட்சத்திரங்கள் 27. அவற்றில் இரண்டுக்கு மட்டுமே 'திரு' என்கிற மரியாதையான அடைமொழி. அவை, திருவாதிரை... திருவோணம். அத்தகைய மரியாதைக்குரிய திருவாதிரை நாளில் வரும் பழமையான திருநாள்... ஆருத்ரா தரிசனம். இந்த ஆண்டுக்கான திருநாள்... மார்கழி 7 அன்று (டிசம்பர் 22) கொண்டாடப்படுகிறது. அந்நாளின் சிறப்புகள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரும், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளருமான டாக்டர் சுதா சேஷய்யன்!

குழைந்தது சாதம்.... குறையவில்லை அன்பு !

''மார்கழி மாதத்தில் சந்திரன், திருவாதிரையோடு சேர்ந்து வரும் நாளையே, 'ஆருத்ரா' நாள் எனக் கொண்டாடுகிறோம். அந்நாளில்தான் சிவபெருமான் நெருப்பாகத் தோன்றி, நடராஜ ஸ்வரூபமாக காட்சி அளித்தார். அவர், ஒரு கையில் 'துடி’ என்கிற உடுக்கையைப் பிடித்திருப்பார். இது படைத்தல் தொழிலைக் குறிக்கிறது. 'அபய’ முத்திரை காட்டும் மற்றொரு கை... 'காத்தல்' என்பதைக் குறிக்கும். இன்னொரு கையில் இருக்கும் 'அக்னி', அழித்தல் என்பதைக் குறிக்கும். ஒரு காலை 'முயலகன்’ என்கிற அரக்கன் மீது ஊன்றியிருப்பார். இது மறைத்தல் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தூக்கியிருக்கும் இடது பாதம்... 'குஞ்சித பாதம்’ என்று அழைக்கப்படும். இது 'அருளல்' என்பதை உணர்த்துகிறது. அக்னியின் ஸ்வரூபமாக இருந்த நடராஜனைக் குளிர வைக்க, அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆடலரசன் தந்த காட்சியே 'ஆருத்ரா தரிசனம்’!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இறைவனுக்கு சிறப்பு நைவேத்தியமாக வைத்து படைக்கப்படும் திருவாதிரைக் களிக்கு கதை ஒன்று உள்ளது. திருவெண்காடு பகுதியில் வசித்த சேந்தனார் என்கிற சிவபக்தர், தினமும் விறகு வெட்டி பொருளீட்டி, யாராவது ஒரு சிவனடியாருக்கு உணவு அளித்த பிறகே... தான் சாப்பிடுவார். ஒரு நாள் நடராசப் பெருமானே சிவனடியாராக வந்தார். வீட்டில் மிகக்குறைவாக இருந்த புது அரிசியை சமைத்தபோது, அது குழைந்து களி போல் ஆனது. 'இதை எப்படி இறையடியார்க்கு அளிப்பது..?’ என்று கண்ணீர் மல்கினார் சேந்தனார். நடராசப் பெருமானோ அந்த களியாகிய உணவை விரும்பி ஏற்றதுடன், சிறிது களியை தன் திருமேனியில் அபிஷேகம் போல் பூசி, சேந்தனாரின் சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார்!

குழைந்தது சாதம்.... குறையவில்லை அன்பு !

மழை பொழிந்து, பயிர்கள் செழித்து வளரும் இந்தப்பருவத்தில் புத்தம் புதிதாக விளைந்த ஏழு காய்கறிகளில் கூட்டு செய்து, திருவாதிரை நாளன்று களியோடு சிவபெருமானுக்கு படைக்கும்  வழக்கம் இதையட்டி தோன்றியதுதான்!''

உங்களுக்காக, திருவாதிரை களி மற்றும் கூட்டு ஆகியவற்றை இங்கே சமைக்கிறார்... சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

களி

தேவையானவை: அரிசி - 2 கப், பயத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு, துருவிய தேங்காய் - அரை கப்.

குழைந்தது சாதம்.... குறையவில்லை அன்பு !

செய்முறை: அடிகனமான கடாயில் அரிசி, பயத்தம்பருப்பைப் போட்டு மிதமான தீயில் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் இரண்டையும் கலந்து மிக்ஸியில் ரவை போல் அரைத்துக் கொள்ளவும். 5 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்லக் கரைசலை பாத்திரத்தில் கொட்டி, தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும், அரிசி கலவையைத் தூவி கிளறவும். இக்கலவையை குக்கரில் போட்டு மூடி, 3 விசில் வந்ததும் இறக்கவும். மற்றொரு கடாயில் நெய்யை விட்டு, காய்ந்ததும் முந்திரித் துண்டுகளைப் போட்டு வறுத்து, களியில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கலக்கவும்.

கூட்டு

தேவையானவை: அவரைக்காய், வாழைக்காய், சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, மொச்சை (அ) துவரை, வெண் பூசணி, மஞ்சள் பூசணி (காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)  - தலா ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

குழைந்தது சாதம்.... குறையவில்லை அன்பு !

வறுத்து அரைக்க: கடலைப் பருப்பு, தனியா - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: புளியை சிறிது தண்ணீரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். உருளை, சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, ஆறிய தும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்க வும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்கறி துண்டுகளைப் போட்டு... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை விட்டு புளி வாசனை போகும்வரை கொதிக்க வைக்கவும். அரைத்த விழுது சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தொகுப்பு : ரேவதி
படங்கள் எம்.உசேன்