Published:Updated:

வாவ்... வரகு ஸ்கொயர்!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200, படங்கள்: ஆ.முத்துக்குமார்

##~##

 வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

பிரெட்  பனீர் டிலைட்

தேவையானவை: பிரெட் - 3 ஸ்லைஸ், பனீர் - 100 கிராம், பெங்களூர் தக்காளி (நன்கு பழுத்தது) - 3, பெரிய வெங்காயம் - 2, நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க் கரை, சோம்பு - தலா அரை டீஸ்பூன், சோள மாவு, உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிதளவு, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய் - தலா 2.

அலங்கரிக்க: மெல்லியதான சேவ், கொத்தமல்லி, துருவிய சீஸ் - தேவையான அளவு.

செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக 'கட்’ செய்யவும். பனீரையும் சிறுசிறு க்யூப்களாக வெட்டவும். வெங்காயம், தக் காளியை மிகவும் மெல்லியதாக, பொடியாக நறுக்கவும்.

வாவ்... வரகு ஸ்கொயர்!

வாணலியை அடுப்பில் வைத்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பிரெட்டை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பனீரையும் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு, பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து,  பின்னர் தக்காளியை சேர்த்து, உப்பு, வறுத்து பொடி செய்த மசாலா பொடியை சேர்த்து... தக்காளி சிறிது குழையும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும் (கிரேவி நீர்க்க இருந்தால் சிறிது சோளமாவை தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்).

ஒரு கப்பில் சூடான கிரேவியை ஊற்றி, அதில் தேவையான அளவு பிரெட், பனீர் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் மெல்லிய சேவ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய சீஸ் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.

- சீதாலஷ்மி, அஹமதாபாத்

வாவ்... வரகு ஸ்கொயர்!

வரகு ஸ்கொயர்

தேவையானவை: வரகு - அரை கிலோ, வெள்ளை உளுந்து - 200 கிராம், துவரம்பருப்பு, கொள்ளு, வெந்தயம் - தலா 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 7 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வரகை கழுவி காய வைத்து ரவையாக திரிக்கவும். உளுந்து, கொள்ளு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து, அதில் ரவையாக திரித்து வைத்துள்ள வரகு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கரைத்து, புளிக்க வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடேறியவுடன் மிளகு, சீரகம் தாளித்து... பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கி, புளித்த மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு தட்டில் நல்லெண்ணெய் தடவி, ஆறு கரண்டி மாவை ஊற்றவும். இட்லி பானையில் நீர் விட்டு, அதன் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து நீர் விட்டு, வரகு மாவு ஊற்றிய தட்டை மேலே வைத்து, அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி வைத்து, வெந்தவுடன் சதுர துண்டுகளாக்கவும். இதுபோல் எல்லா மாவையும் ஊற்றி வெந்தவுடன் சதுர துண்டுகளாக்கவும்.

- வெ.தாரகை, கும்பகோணம்