Published:Updated:

இன்றைய சமையல்! - 3

செஃப் தாமு, படங்கள்: எம்.உசேன், ப.சரவணகுமார்

இன்றைய சமையல்! - 3

திங்கள் முதல், ஞாயிறு வரை தினமும் செய்து மகிழ உதவும் 'இன்றைய சமையல்’ பகுதியில்...

இந்த முறை செஃப் தாமு சொன்னது புதன்கிழமைக்கான ரெசிபி. சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ், பொறுப்பாக நோட்ஸ் எடுத்துக் கொண்டதோடு, அவற்றை அழகாக நமக்கு சமைத்துக் காட்டினார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 தேவையானவை: பச்சரிசி - ஒரு டம்ளர், பாசிப்பருப்பு - அரை டம்ளர், பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா அரை குழிக்கரண்டி (மொத்தத்தில் இரண்டுமே 50 மில்லிதான் வர வேண்டும்), மிளகு - சீரகம் (சேர்த்து) - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, இஞ்சி - ஒரு சின்ன துண்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), முந்திரிப் பருப்பு - 6, உப்பு - தேவையான அளவு.

இன்றைய சமையல்! - 3

செய்முறை: அரிசி மற்றும் பருப்பைக் கழுவி, குக்கரில் சேர்த்து, கூடவே பெருங்காயத்தையும் சேர்த்து, நாலேகால் டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதோடு உப்பு சேர்த்து வேக வைத்து மசித்துவிடுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, பொரிக்கவும் (இரண்டும் பொரிந்து மேலே வர வேண்டும். சாப்பிடும்போது மிளகு வத்தல் சாப்பிடுவது போல இருக்க வேண்டும்). பிறகு, அடுப்பை 'சிம்’மில் வைத்து... இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்துக் கிளறி ... மசித்து வைத்திருக்கும் பொங்கல் மேலே ஊற்றி, கிளறிவிடுங்கள். மணக்கும் பொங்கல் தயார்!

இதற்கு தேங்காய் சட்னி சூப்பரான சைட் டிஷ் (சென்ற முறையே இதற்கான ரெசிபி சொல்லியிருக்கிறேன்).

இன்றைய சமையல்! - 3

காலையில் ஹெவியான பொங்கல் சாப்பிட்டிருப்பதால், மதியம் அரிசிக்கு பதிலாக, லேசான புலாவ் ரெசிபி சொல்கிறேன்.

தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு டம்ளர், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, பூண்டு - 6 பல், புதினா இலை - 4, நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து - ஒரு கைப்பிடி அளவு, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, தக்காளி - பாதியளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 2, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, புதினா சேர்த்து தாளித்து... கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்ந்து நன்கு வதக்க வேண்டும். இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் சம்பா ரவையை சேர்த்து வேகவிட்டு இறக்கினால், அருமையான சம்பா புலாவ் ரெடி.

இதற்கு, வெண்டைக்காய் மிளகு வறுவல் சூப்பர் சைட் டிஷ்.

வெண்டைக்காய் மிளகு வறுவல்

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை வட்டமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலையை தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெண்டைக்காயை அதன் மேலே பரப்பினாற்போல தூவிவிடுங்கள். அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவவும். மூடி போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடுங்கள். பிறகு, மூடியைத் திறந்து வெண்டைக்காயைத் திருப்பி போட்டு, மீண்டும் ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவிடுங்கள். எண்ணெயில் பொரிந்து மொறுமொறுவென இருக்கும் இந்த வெண்டைக்காய் மிளகு வறுவல்.

இன்றைய சமையல்! - 3

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு டம்ளர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - அரை டம்ளர்.

செய்முறை: மாவில் உப்பு, தண்ணீர், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். சின்ன சின்ன உருண்டைகளாக மாவை எடுத்து, சிலிண்டர் போன்ற நீண்ட உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள். சப்பாத்தி உருட்டும் கல்லில் சிறிது மாவு தடவி, உருட்டிய குழலை நேரே நிற்க வைத்து, அதன் மேல் பகுதியில் உள்ளம் கையை வைத்து, அடிபாகம் வரை மெதுவாக அழுத்த வேண்டும். இப்படி செய்வதால் அழுத்திய மாவில் வரிகள் ஏற்படும். இனி, இதை மிதமாக சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும். (மாவில் உள்ள வரிகள் மறையாதவாறு மிதமாக தேய்க்க வேண்டும்). அடுப்பில் தவாவை வைத்து சூடு செய்து, தேய்த்த வைத்ததை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

##~##

இந்த லட்சா பரோட்டாவுக்கு சால்னா சிறந்த சைட் டிஷ்!

சால்னா

தேவையானவை: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் (சேர்த்து) - கால் கிலோ, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி - தலா இரண்டு கைப்பிடி அளவு,

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - கால் குழிக்கரண்டி, சோம்பு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை கழுவி, நறுக்கி குக்கரில் போடவும். இதோடு தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு விழுது சேர்க்கவும். காய்கறி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அடுப்பில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் 'சிம்’மில் வைக்கவும். இப்போது காய்கறி நன்றாக வெந்திருக்கும். ஒருவேளை, காய்கறிகளில் தண்ணீர் அதிகமாக இருந்தால்... குக்கரை அடுப்பில் வைத்து கெட்டியாக ஆகும் வரை வேகவிடுங்கள். இனி, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும்... சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, வெந்த காய்கறிகள் மேல் ஊற்றிவிட்டால்... அற்புதமான சால்னா ரெடி.

இதை லட்சா பரோட்டா மீது ஊற்றி ஊற வைத்துச் சாப்பிட்டால், அட்டகாசமான சுவையில் இருக்கும்.

கமகமக்கும்...