Published:Updated:

இன்றைய சமையல்! - 4

செஃப் தாமு, படங்கள்: எம்.உசேன்

இன்றைய சமையல்! - 4

செஃப் தாமு, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##

 ''சார் டி.வி-யில நீங்க வர்ற 'குக்கிங் ரியாலிட்டி ஷோ’வுல, எப்பவாவது நீங்க கோவப்படுறதும், எதிர்ல நிக்கற போட்டியாளர் அழறதும்... எல்லாமே நிஜமா சார்?'' என்று 'செஃப்' தாமுவிடம் அப்பாவியாகக் கேட்டார் இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

தாமு சிரித்துகொண்டே, ''நீங்களே சொல்லுங்க வேலை மெனக்கெட்டு கால்கடுக்க அவ்ளோ நேரம் நின்னு ஒரு ஷோ பண்றப்ப, அதை விளையாட்டுத்தனமா எடுத்துக்கிட்டு... காமெடி பண்ணினா கோவம் வருமா... வராதா? நீங்க பார்க்கிறது எல்லாம் நிஜம்தான்'' என்றவரின் வார்த்தைகளை 'உம்’ கொட்டி கேட்டுக் கொண்டிருந்த அஞ்சனா,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சரி சார், 'இன்றைய சமையல்’ பகுதிக்கு வியாழக்கிழமைக்கான மெனு சொல்லுங்க'' என்று ரெசிபி லிஸ்ட் வாங்கி, அவற்றிலிருந்து ஒவ்வொன்றையும் அசத்தலாக தயாரித்து வழங்கினார்... உங்களுக்காக!

காலை சிற்றுண்டி:

புட்டு

தேவையானவை: புழுங்கலரிசி - 2 டம்ளர். தேங்காய் துருவல் - கால் மூடி, சர்க்கரை - 2 கைப்பிடி அளவு (அல்லது தேவைக்கேற்ப), ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்), நெய் (விருப்பப்பட்டால்) - தேவைக்கேற்ப, தண்ணீர் - இரண்டு கை அளவு, உப்பு - கால் டீஸ்பூன்.

இன்றைய சமையல்! - 4

செய்முறை: புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து ஃபேனின் கீழ் ஈரம் போக‌ காய வைக்க வேண்டும். பின்பு, இதை மெஷினில் கொடுத்து புட்டுக்கு ஏற்றாற்போல‌ அரைத்து வைத்துக் கொள்ளவும். இட்லிப் பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இட்லித் துணியை நனைத்துப் பிழிந்து இட்லித் தட்டின் மேல் விரித்துவிடுங்கள். இனி, இரண்டு கை அளவு தண்ணீர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் உப்பை சேர்த்து கலக்கி, இந்த நீரை மாவின் மேல் தெளித்து பிசிறிக் கொள்ளுங்கள். பிசிறிய மாவை இட்லித் துணியின் மேல் பரப்பினாற்போல தூவி, மூடி போட்டு பத்து நிமிடம் வேகவிடுங்கள். வெந்ததும் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை (தேவைக்கேற்ப), நெய் விட்டுக் கலந்து சாப்பிட்டால்... புட்டு தேவாமிர்தமாக இருக்கும்.

உங்களுக்கு காலையில் அதிகம் நேரம் இருந்தால், புட்டுக்கு சைட் டிஷ்ஷாக‌ மசால் வடை செய்து, இதனுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

மதிய சாப்பாடு:

வரகரிசி சாதம்

தேவையானவை: வரகரிசி - ரெண்டு டம்ளர். தண்ணீர் - நாலரை டம்ளர்.

செய்முறை: வரகரிசியை நன்கு கழுவி, தண்ணீர் விட்டு வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சேர்த்து சாப்பிட குழம்பும், கூட்டு வகையும் சொல்கிறேன்.

இன்றைய சமையல்! - 4

மொச்சைக் குழம்பு

தேவையானவை: மொச்சை - ஒரு டம்ளர், கத்திரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு, நறுக்கிய தக்காளி - 2 கைப்பிடி அளவு, புளி - எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தண்ணீரை வடித்து, குக்கரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, மொச்சை மூழ்கும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றுங்கள். தீயை அதிகப்படுத்தி குக்கரில் மூன்று விசில் வந்ததும், அடுப்பை 'சிம்’மில் ஐந்து நிமிடம் வைத்து, பின்பு இறக்குங்கள்.

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அடுத்ததாக, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து ந‌ன்கு சுருள வதக்க வேண்டும். இனி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெந்த மொச்சை சேர்த்து நன்கு வதக்கி, நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடுங்கள். இப்போது புளியை ஒரு டம்ளர் நீரில் கரைத்து, குழம்பில் ஊற்றி வேகவிடுங்கள். நன்கு கொதித்து, சுண்டி வரும்போது இறக்குங்கள். வரகரிசி சாதத்துக்கு செம காம்பினேஷன் இந்தக் குழம்பு.

இன்றைய சமையல்! - 4

இதற்குக் கீரை மசியல் சிறந்த சைட் டிஷ்.

தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - அரை டம்ளர், தக்காளி - 2, பெரிய வெங்காயம் - அரை துண்டு, பூண்டு - 4 பல், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, கழுவிய கீரை, பூண்டு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும், பருப்பு மத்து கொண்டு கீரையை நன்கு கடைந்து கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த கீரை மசியலை சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கிவிடுங்கள்.

இரவு உணவு:

சோள ரவை கிச்சடி

தேவையானவை: சோள ரவை - ஒரு டம்ளர், கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று, பெரிய வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, முந்திரிப்பருப்பு - 6, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

இன்றைய சமையல்! - 4

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் பூண்டு, முந்திரி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... நறுக்கிய கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும். காய்கறி சிறிது வெந்ததும், அதில் ஒன்றேகால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் வேகவிடுங்கள். காய்கறி நன்கு வெந்ததும், சோள ரவையை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, வேகவைத்தால்... அற்புதமான சோள ரவை கிச்சடி ரெடி!

தாமு குறிப்பு: ''சோள ரவை கிச்சடி என் ஃபேவரைட் உணவுகளுள் ஒன்று. வீட்டில் இருந்தால், மனைவியிடம் இரவு உணவுக்கு பெரும்பாலும் சோள ரவை கிச்சடியை செய்யச் சொல்லி விரும்பிச் சாப்பிடுவேன்.''

கமகமக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism