
##~## |


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எல்லையற்று விரியும் சாம்ராஜ்யம் ஒன்று உண்டு என்றால், அது சமையல் சாம்ராஜ்யம்தான். அதிலும், 'எங்க ஊர்ல கிடைப்பது போல இது வேறு எங்கேயும் கிடைக்காது’ என்று நாடு முழுக்க பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் பெருமிதப்பட்டுக் கொள்ளும் உணவு வகைகள் எண்ணிலடங்காது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சமைத்துப் பரிமாறப்படும் அத்தகைய உணவு வகைகளைத் தேடித் தேடி சேகரித்து, அவற்றில் 30 ரெசிபிகளை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
''உணவில் வெரைட்டி விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் நோக்கத்துடன் இந்த ரெசிபிகளைக் கொடுத்திருக்கிறேன். உறவு, நட்பு வட்டத்தில் 'சமையல் ராணி’ என்று வலம் வர இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு'' என்று உற்சாகப் படுத்துகிறார் தீபா.
காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி... வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்... காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!
டெல்லி தர்பார்
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - 50 கிராம், முந்திரி, பாதாம் - தலா 10, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாதாம், முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். மைதா மாவை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து, சிறிய அப்பளங்களாக இட்டு, நடுவே பாதாம் - முந்திரி பொடியை வைத்து மூடி, ஓரத்தை நன்கு ஒட்டவும். இதனை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மைசூர் சட்னி பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது விருப்பத்துக்கேற்ப), தேங்காய் துருவல் - ஒரு கப், எள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கசகசா - சிறிதளவு, கறிவேப்பிலை - 10 இலைகள், புளி - கொட்டைப் பாக்கு அளவு, தனியா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை, வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். கசகசா, எள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தனியா, புளி ஆகியவற்றையும் எண்ணெய் விடாமல் தனித்தனியே கருகாமல் வறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து... பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
இது, சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடியுடன் நீர் சேர்த்துக் கரைத்து, சட்னி போலவும் பயன்படுத்தலாம்.
பாம்பே காஜா
தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் - சிறிதளவு, நெய் - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்யுடன் ஆப்பசோடா சேர்த்து தேய்த்து, சலித்த மைதா சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும். வேறொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் நெய் சேர்த்து பேஸ்ட் போல குழைக்கவும். பிசைந்த மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி அப்பளமாக திரட்டி, ஒவ்வொன்றின் மீதும் அரிசி மாவு பேஸ்ட் தடவி முக்கோணமாக மடிக்கவும். காஜா தயார்.
எண்ணெயைக் காய வைத்து, காஜாக்களை பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் கேசரி கலர் சேர்த்து பாகு செய்து, பொரித்த காஜாக்களை முக்கி எடுத்து, தட்டில் வைத்து, அதன் மீது கொப்பரைத் துருவலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
பாம்பே சட்னி
தேவையானவை: கடலை மாவு - 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, கரைத்த கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியானதும் இறக்கவும். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.
ஆந்திரா ரைஸ் பால்ஸ்
தேவையானவை:அரிசி மாவு - ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசி மாவுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும். பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். ஒரு மணி நேரம் ஊறவிட வும். பின்னர், சீடை போல உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.
நெல்லூர் மசாலா ரைஸ்
தேவையானவை:அரிசி - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: எள் - 2 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), லவங்கம் - ஒன்று.

செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். இந்த மசாலாவுடன் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால்... நெல்லூர் மசாலா ரைஸ் ரெடி!
ராஜஸ்தானி கட்டா கிரேவி
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளித்த தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக்கி பொரித்து எடுக்கவும். இது தான் கட்டா.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து... பொரித்த கட்டா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, தனியாத்தூள், தயிர், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து... ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மங்களூர் ஸ்வீட் பன்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பச்சை வாழைப்பழம் - ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ் பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வாழைப்பழத்தை தோலை உரித்து, துண்டுகளாக்கி மசிக்க வும். இதனுடன் தயிர், உப்பு, சர்க்கரை, சீரகம், ஆப்பசோடா சேர்த்துக் கிளறவும். பிறகு, கோதுமை மாவில் இந்தக் கல வையை சேர்த்து, சிறிதளவு எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசையவும். இந்த மாவு கலவையை நான்கு மணி நேரம் ஊறவிடவும். பின்பு மாவை சிறிய உருண்டைகளாக்கி... வட்டமாக, சற்று கனமாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
துவாரகா லட்டு
தேவையானவை: சப்பாத்தி - 2, வறுத்த வேர்க்கடலை - அரை கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலை, சப்பாத்தி துண்டுகள், வெல்லம் சேர்த்துப் பொடிக்கவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, அரைத்த பொடியை லட்டுகளாக பிடிக்கவும்.
காசி அல்வா
தேவையானவை: வெள்ளைப் பூசணி துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், முந்திரிப் பருப்பு - 10, நெய் - கால் கப்.

செய்முறை: வெள்ளைப் பூசணியை தோல் சீவி, விதைகளை நீக்கி, கேரட் துருவியில் மெல்லிய தாக துருவவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு இதை வதக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டி யாகும்போது மீதமுள்ள நெய் விட்டு கிளறி, சுருண்டு வரும்போது இறக்க வும். முந்திரிப் பருப்புகளை நெய்யில் வறுத்து மேலே அலங்கரித்து பரிமாற வும்.
பஞ்சாபி பாலக்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தயிர் - 2 டீஸ்பூன், பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவிடவும். பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, சுத்தம் செய்து துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி... உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பின்பு, தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும். இது சப்பாத்திக்கு சிறந்த சைட் டிஷ்.
பெங்காலி ஆலு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய், பட்டை - தலா ஒன்று, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தயாராக வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து வதக்கி... உப்பு, பொரித்த உருளை துண்டுகள், தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.
கேரள நேந்திரன் சாக்லேட்
தேவையானவை: நேந்திரன் வாழைப்பழம் (மசித்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப்.

செய்முறை: தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், மசித்த நேந்திரன் பழ விழுது, தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி, ஆறியவுடன் வில்லைகளாக்கி பரிமாறவும்.
மணப்பாறை முறுக்கு
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் வெண்ணெய் (அ) நெய், உப்பு, எள், சீரகம், பெருங்காயத்தூள், ஓமம், தேவையான அளவு தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும். பிசைந்த மாவை தேன்குழல் முறுக்கு அச்சு தட்டில் போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்காக பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.
குஜராத்தி கடீ
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - சிறிதளவு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிள காய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பச்சை மிள காயை சேர்த்து விழுதாக அரைக்க வும். கெட்டித் தயிருடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, கடலை மாவு சேர்த்து நன்கு கரைக்க வும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து, கரைத்த தயிர் கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சுத்தம் செய்த கொத்தமல்லித் தழையை சேர்க்கவும்.
சப்பாத்தி, பராத்தா வகைகளுக்கு இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
ஒடிசா சுகர் பிஸ்கட்
தேவையானவை: அரிசி - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடியவிட்டு நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது இந்த அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் விடக்கூடாது).
காற்றுப்புகாத டப்பாவில் பிசைந்த மாவை நன்கு அழுத்தி அழுத்தி போட்டு, எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வடைகள் போல தட்டி... கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஹூப்ளி ஹாட் அண்ட் ஸ்வீட் தோசை
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல், வெல்லம் - தலா கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டவும். தோசை மாவுடன் வெல்லக் கரைசல், அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலக்கி, தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
நெல்லை உக்காரை
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - 5 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரி - 10.

செய்முறை: பருப்பு வகைகளை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து... ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தி காயவிட்டு, மிக்ஸியில் போட்டு ரவை போல பொடிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து, கரைய விட்டு வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு தக்காளி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் பருப்பு ரவையை சேர்த்து கரண்டி காம்பால் கிளறவும்.நெய்யில் வறுத்த முந்திரியை இந்த பருப்பு கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
நெல்லையில் தீபாவளி சமயத்தில் இதைச் செய்வார்கள்.
மராட்டி கேப்சிகம் ரைஸ்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பச்சைப் பட்டாணி - அரை கப், குடமிளகாய், தக்காளி - தலா 2, லவங்கம், ஏலக்காய், சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன், பச்சைப் பட்டாணி சேர்த்து வேகவிடவும். குட மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய்யை காய விட்டு... லவங்கம், ஏலக்காய், சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வடித்த சாதக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கினால்... மராட்டி கேப்சிகம் ரைஸ் ரெடி!
உடுப்பி கொத்சு
தேவையானவை: கேரட், பீன்ஸ், பரங்கி துண்டுகள் சேர்த்து - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கெட்டியான புளிக் கரைசல் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், வறுத்த தேங்காய் துரு வல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4.

செய்முறை: துவரம்பருப்பு, சீரகம், எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து... நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்கறி துண்டுகளை வதக்கி, இதனுடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து... புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும் காய்கறி கலவையில் அரைத்து வைத்த விழுது, வெங்காயம் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஹைதராபாத் கத்திரிக்காய் கறி
தேவையானவை: கத்திரிக்காய் - 10, வெந்தயக்கீரை - அரை கட்டு, வெங்காயம் - 2, கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, வறுத்த வேர்க்கடலை - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், கத்திரிக்காயை பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், கத்திரிக்காய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய் - வேர்க்கடலை பொடி, உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
கேரளா புட்டு
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பச்சைப் பயறு, தேங்காய் துருவல் - தலா கால் கப், நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிய விட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். நேந்திரன் வாழைப்பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும். பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.
அரைத்த அரிசி மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சிறிதளவு வெந்நீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேகவிடவும். பிறகு, வெந்த மாவுடன் நேந்திரம்பழத் துண்டுகள், வெந்த பயறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
மிகவும் ஹெல்தியான புட்டு இது!
தர்மஸ்தலா ரைஸ் லட்டு
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அரிசியைக் களைந்து வெயிலில் காய வைக்க வும். வெறும் வாணலியில் இந்த அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலிக்கவும். தேங் காய் துருவலுடன், வெல்லம் சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத் தில் சலித்த அரிசி மாவு, அரைத்த தேங் காய் - வெல்லம் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, லட்டுகளாக பிடிக்க வும்.
மஹாராஷ்டிரா மல்லி வடி
தேவையானவை: கடலை மாவு, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப், கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலையை பொடித்த தூள் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன், எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சீரகம் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்க்கவும். கடலை மாவை நீரில் கெட்டியாக பேஸ்ட் போல் கரைத்து இதனுடன் சேர்த்து, வேர்க்கடலைத் தூள் போட்டு நன்கு கிளறவும். கடலை மாவு வெந்து பச்சை வாசனை போனதும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் துண்டுகள் போடவும். இந்த துண்டுகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
செட்டிநாடு மசாலா பணியாரம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - முக்கால் கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - கால் கப், பச்சை மிளகாய் - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி ஊற வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும். முதலில் உளுந்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைக்கவும். பிறகு, அரிசியை தனியாக கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு சேர்த்து, நன்கு வெடித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த அரிசி மாவு, உளுந்து மாவு, வதக்கிய வெங்காய கலவை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து, சற்று தளர்வாக பிசையவும். மாவை காய்ந்த எண்ணெயில் போண்டா போல கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: கடுகு நன்கு வெடிக்காவிட்டால், பணியாரம் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். உளுந்துக்கு தண்ணீர் அதிகம் விட்டு அரைத்தால், எண்ணெயைக் குடிக்கும்.
கூர்க் பென்னி கடுபு
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரிசி ரவை, தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்த பின் இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை பந்து போல உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். இதற்கு ஏதாவது ஒரு வகை சட்னி தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: பச்சரிசியை மிக்ஸியில் சின்ன ரவையாக உடைத்து பயன்படுத்த வும்.
சேலம் மாங்காய் சட்னி
தேவையானவை: மாங்காய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு மூடி, உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது விருப்பத்துக்கேற்ப), பெருங்காயத்தூள், கடுகு - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். மாங்காயைக் கழுவி கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளாக்கவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயுடன்... மாங்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
சாத்தூர் சேவ்
தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவுடன்... எள், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், மிள காய்தூள், காய்ச்சிய எண் ணெய் 4 டீஸ்பூன் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். எண் ணெயைக் காய வைக்கவும். மாவை காராசேவ் கரண்டியில் போட்டு, சூடான எண்ணெயில் விழும்படி அழுத்தி தேய்க்கவும். பொன்னிற மானதும் எடுக்கவும். அல்லது, மாவை காராசேவ் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்தும் எடுக்கலாம்.
கன்னியாகுமரி கறுப்பு உளுந்து சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல் - தலா அரை கப், பூண்டு - 4 பல், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசி, உளுந்தை களைந்து தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.
இதனுடன் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். இந்த சாதத்தை சூடாக தேங்காய் (அ) எள் துவையலுடன் பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி ; படங்கள்: எம்.உசேன்; ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் மசாலா
வெஜ் அண்ட் மட்டன் ரோல்ஸ்
தேவையானவை - மேல் மாவு தயாரிக்க: மைதா - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், முட்டை - ஒன்று, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
ஸ்டஃப்பிங் செய்ய: கொத்துக்கறி - 100 கிராம், பொடி யாக நறுக்கிய காய்கறி கலவை - அரை கப் (கேரட், குடமிளகாய், உருளைகிழங்கு, முட்டைகோஸ்), பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, ஆச்சி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், ஆச்சி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஆச்சி கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கொத்துக்கறியுடன் ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலா சேர்த்து... அளவான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், காய்கறிக் கலவை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தேவையான உப்பு சேர்க்கவும். காய்கள் ஓரளவு வெந்தவுடன் வேக வைத்த கொத்துக்கறி, கொத்தமல்லி, புதினா சேர்த்து, நீர் முழுதும் வற்றும் வரை வதக்கி இறக்கினால்... ஸ்டஃப்பிங் தயார்.

மேல் மாவு தயாரிக்கத் தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். மாவை சின்னச் சின்ன மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். தயாரித்த தோசையின் ஒரு பகுதியில் ஒரு ஸ்பூன் ஸ்டஃப்பிங் வைத்து சுருட்டி, ஓரங்களை மைதா மாவால் ஒட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் தயாரித்த ரோல்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதனை சூடாக, தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
குறிப்பு: அசைவம் விரும்பாதவர்கள் மேல் மாவில் முட்டை யையும், ஸ்டஃப்பிங்கில் மட்டனையும் சேர்க்காமல், 'வெஜ் ரோல்ஸ்’ தயாரிக்கலாம்.
- ருக்ஷானா, பொள்ளாச்சி
