##~## |
'பாரம்பரிய உணவுகளைக் கிட்டத்தட்ட மறந்தேவிட்டோம். சின்ன ஆறுதலாக தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் உயர்ந்து வருவது, வரவேற்கத்தக்கது. ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும், சுவையான வரகரிசி வெண்பொங்கல்தான் இம்முறை உங்களுக்கு நான் வழங்குவது...'' என்று 'செஃப்' தாமு தந்த ரெசிபியை, அருமையாக நமக்குச் சமைத்துக் காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.
வரகரிசி வெண்பொங்கல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேவையானவை: வரகரிசி - ஒரு டம்ளர், பாசிப்பருப்பு - அரை டம்ளர், பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, முந்திரிப்பருப்பு - 20, மிளகு, சீரகம் - தலா 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வரகரிசி, பாசிப்பருப்பு இரண்டை யும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு, பெருங் காயம், உப்பு சேர்த்து, நாலேகால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும், அடுப்பை ஐந்து நிமிடம் 'சிம்’மில் வைத்து, இறக்குங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி... மிளகு, சீரகம் தாளித்து, இரண்டும் பொரிந்து மேலே வந்தபின், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்துத் தாளித்து, வெந்த வரகரிசி மீது கொட்டி லேசாகக் கிளறினால்... வரகரிசி வெண்பொங்கல் தயார்.
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதற்கு சிறந்த சைட் டிஷ் கத்திரிக்காய் கொத்சு அல்லது தேங்காய் சட்னி.

கத்திரிக்காய் கொத்சு
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் - இரண்டு கைப்பிடி அளவு, நறுக்கிய தக்காளி - இரண்டு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்ததாக தக்காளியைப் போட்டு வதக்கி, நறுக்கிய கத்திரிக் காயைப் போட்டு நன்கு வதக்கவும். இதோடு துவரம் பருப்பு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்.
வரகரிசி வெண்பொங்கல் - கத்திரிக்காய் கொத்சு காம்பினேஷன் அட்டகாசமான சுவையில் அசத்தும்.
கமகமக்கும்...