ஸ்பெஷல்
டிடெயில் டிப்ஸ்
Published:Updated:

அம்மா ரெசிப்பி; சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு

அம்மா ரெசிப்பி; சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு

'எங்க வீட்ல, குழந்தைங்கள்ல இருந்து... பெரியவங்க வரை, அவங்களுக்கு வரக்கூடிய சின்னச் சின்ன உடல் உபாதைகளைக்கூட, உணவு மூலமாகவே என் பாட்டி சரிசெய்திடுவாங்க. சோர்வா இருந்தாலும் இடுப்பு வலி எடுத்தாலும் வாயுத் தொல்லை வந்தாலும் உடனே உளுத்தம் புட்டு, முள்ளங்கிச் சட்னி செய்து கொடுப்பாங்க. வீட்டுல பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா, ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு

அம்மா ரெசிப்பி; சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு

தொடர்ந்து 30 நாளைக்கு, இந்த உளுத்தம் புட்டைச் செய்து கொடுப்பாங்க. என் திருமணத்துக்குப் பிறகு, என் புகுந்த வீட்டிலும் இந்த உணவை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுறாங்க'' என்று உற்சாகமாகச் சொல்லும் மதுரை வாசகி கீதா சுந்தரேசன், உளுத்தம் புட்டு செய்முறையை விளக்குகிறார்.

தேவையானவை: தோல் உள்ள உளுந்து - 200 கிராம், புழுங்கல் அரிசி - 100 கிராம், தேங்காய் - ஒரு மூடி, நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தையும் அரிசியையும் தனித்தனியே நன்றாக ஊறவைத்து, கழுவிச் சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக, சற்றே கரகரப்பான பதத்தில் எடுக்கவும். பிறகு, ஆவியில் புட்டு மாதிரி உதிராக வேகவைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும்.

அம்மா ரெசிப்பி; சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு

புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சூடாகச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமல், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

சித்த மருத்துவர் தணிகை ராஜ்: உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண் களுக்கு, கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும். ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

- படங்கள்:  எ.கிரேசன் எபினேசர்

உங்கள் வீட்டு உணவு அனுபவங்களை 'அம்மா ரெசிப்பி!’ பகுதிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். கலக்கலான பரிசுகள் உண்டு.

அனுப்பவேண்டிய முகவரி: 'அம்மா ரெசிப்பி’ டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: doctor@vikatan.com