அம்மா ரெசிப்பி- வடிகஞ்சி சூப்

''செலவே இல்லாத சூப் இது. அந்தக் காலத்துல என் அம்மா, சாதத்தை வடிச்சதும், அந்த வடிகஞ்சியில் மிளகு, சீரகம் பொடிச்சுப் போட்டு, தினமும் காலையில் எங்களுக்குத் தருவாங்க. நல்ல தெம்பா இருக்கும். இதனால் எங்கள் வீட்டில் யாருக்கும் வயிறு தொடர்பான பிரச்னையே வந்தது இல்லை. இப்போ, என் கணவருக்கும் மகனுக்கும் கஞ்சியில் காய்கறிகளைச் சேர்த்து, சூப் மாதிரி செஞ்சு தர்றேன். ருசியோட வாசனையாவும் இருக்கும். உடலுக்கு ரொம்பக் குளிர்ச்சி.'' என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்ரமணியன்.
வடிகஞ்சி சூப் செய்யும் முறை:
தேவையானவை: சாதம் வடித்த கஞ்சி - 2 கப், புளித்த மோர் - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியை நீளவாக்கில் நறுக்கவும். எண்ணெயில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கி, காய்கறிக் கலவையையும் சேர்த்து, வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு இறக்கிவைத்து, கடைந்த மோரை அதனுடன் சேர்க்கவும். இறுதியாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

டாக்டர் வேலாயுதம், சித்த மருத்துவர்: வடிகஞ்சி சூப், உடலை உரமாக வைத்திருக்க உதவும். காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நார்ச் சத்து மற்றும் கஞ்சியில் உள்ள கார்போஹைட்ரேட், குளூகோஸ், தையமின் போன்றவை உடலால் நேரடியாகக் கிரகிக்கப்படும். இஞ்சி சேர்ப்பதால், காலையில் குடிப்பதன் மூலம், மதியம் பித்தம் ஏறாமல் தடுக்கலாம். மோர், நல்ல பாக்டீரியாவைக் கொடுப்பதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
படங்கள்: எஸ்.தேவராஜன்
உங்கள் வீட்டு உணவு அனுபவங்களை 'அம்மா ரெசிப்பி!’ பகுதிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். கலக்கலான பரிசுகள் உண்டு.
அனுப்பவேண்டிய முகவரி: 'அம்மா ரெசிப்பி’ டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. மின்னஞ்சல்: doctor@vikatan.com