ஒப்பட்டு... ஓஹோ! படங்கள் : எம்.உசேன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்.
ராகி பனீர் ஒப்பட்டு
தேவையானவை: பனீர் துருவல், ராகி (கேழ்வரகு) மாவு - தலா 2 கப், பொடித்த கருப்பட்டி - 3 கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி (சீவியது) - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: ராகி மாவுடன் கொஞ்சம் உப்பு, எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு தளர பிசைந்து அப்படியே வைக்கவும். கருப்பட்டியை சுத்தம் செய்து, அதை பாகாக்கி கொள்ளவும். அதனுடன் பனீர் துருவல் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக வரும்போது... தேங்காய் துருவல், முந்திரி சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய்த்தூள், நெய், சேர்த்து நன்கு கிளறி எடுத்தால்... பூரணம் ரெடி.

பிசைந்து வைத்திருக்கும் ராகி மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து சின்ன கிண்ணமாக செய்து அதனுள் பூரணத்தை வைத்து மெல்லிய போளியாக வாழையிலையில் தட்டவும். தவாவில் சிறிது நெய் விட்டு போளியை போடவும். நன்றாக வெந்து சிவந்ததும், சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்க... சூப்பரான, சத்தான ராகி - பனீர் ஒப்பட்டு தயார்.
- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி
முப்பருப்பு லட்டு
தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், சர்க்கரை - 3 கப், நெய் - 2 கப், டூட்டி ஃப்ரூட்டி, முந்திரிப்பருப்பு - தேவையான அளவு, பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் - தலா கால் கப், ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து, ஆறவிட்டு, பொடி செய்யவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, டூட்டி ஃப்ரூட்டி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு நெய்யைக் காய்ச்சி அதில் ஊற்றிக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- ஆர்.பிருந்தா ரமணி, மதுரை