Published:Updated:

நெகிழவைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’ Follow-up

நிழல்... 'உஸ்தாத் ஹோட்டல்’ நிஜம்... 'ஏலகிரி ஹோட்டல்’! வாசகிகள் பக்கம்

லையாளத்தில் 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம், 'உஸ்தாத் ஹோட்டல்’. நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், திலகன் உள்ளிட்டோர் நடிக்க... அன்வர் ரஷீத் இயக்கியிருந்தார். பிரியாணிக்கு சிறப்பு பெற்ற உஸ்தாத் ஹோட்டலை திலகன் நடத்துகிறார். அவர் பேரன் (துல்கர்) வெளிநாட்டில் படித்துத் திரும்பும்போது, அப்பகுதியில் பெருகிவிட்ட நவீன ஹோட்டல் களுடன் போட்டி போட முடியாமல், தாத்தாவின் ஹோட்டல் மூடப்படும் நிலையில் இருக்கிறது. அதை எப்படி வெற்றிகரமாக பேரன் நடத்துகிறார் என்பதே கதை. கூடவே மனிதநேயம், அன்பு, பாசம் அனைத்தையும் கலக்கி அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள்.

'யார் வேண்டுமென்றாலும் சமைத்து வயிற்றை நிரப்பலாம். ஆனால், மனதை நிரப்புவதுதான் உண்மையான புண்ணியம்’ என்று பேரனுக்குப் பாடமெடுப்பார் திலகன். கூடவே, 'சமைப்பது எப்படி என்று நான் கற்றுக்கொடுத்துவிட்டேன். எதற்காக சமைக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்காக உன்னிடம் அனுப்புகிறேன்’ என்று கடிதமெழுதி, மதுரையில் இருக்கும் தன் நண்பர் ஜெயப்பிரகாஷிடம் பேரனை அனுப்பி வைப்பார்.

நெகிழவைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’ Follow-up

அன்று தயாரான உணவுடன் வழக்கம்போல வெளியே கிளம்பும் ஜெயப்பிரகாஷ், தன் குழுவுடன் துல்கரையும் அழைத்துச் செல்கிறார். சாலையோர நடைபாதைகளில் வசிப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என ஒவ்வொரு இடமாக வண்டி நிற்க, அங்கிருக்கும் அனைவருக்கும் உணவைப் பரிமாறுவார். அனைத்தையும் ஆச்சர்யமாகப் பார்ப்பார் துல்கர்.

'உன்னைப்போல் நானும் ஒரு செஃப்தான், இங்கே தாஜ் ஹோட்டலில் 12 வருடங்கள் பணிபுரிந்தேன். நீ இங்கே பார்க்கும் இந்த பெரியவர்தான், என் வாழ்க்கையை மாற்றியவர். ஒருநாள் ஒரு பாலத்துக்கு அடியில் பசிக்கொடுமை தாங்காமல், தன் சொந்த கழிவையே இவர் தின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். மனம் நொந்துபோனேன். 'எங்கெங்கிருந்தோ வரும் விருந்தினர்களுக்கு விதவிதமாகச் சமைத்துப் போடுகிறோம்... ஆனால், இங்கே என் மனிதர்கள் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இந்த நிலையில் இருக்கிறார்களே’ என்ற வருத்தத்தில், அன்றே வேலையை விட்டுவிட்டு, இவர்களுக்கு சமைத்துப் போடத் தொடங்கிவிட்டேன்’ என்று சொல்வார் ஜெயப்பிரகாஷ்.

கனத்து தெளிந்த மனதுடன் ஊர் திரும்பும் துல்கர், ஹோட்டலில் தாத்தா விட்ட இடத்தை நிரப்புவார்... ஏழைகள் பலரின் வயிற்றையும்தான்!

பல விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தின் மனிதர்களை, நிஜத்தில் பார்க்க வைத்துவிட்டது... அவள்விகடன் 8.4.14 இதழில் இடம்பெற்ற 'ஹோட்டல் ஏலகிரி’. அந்தத் தம்பதிகள் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்; அவர்களுக்கு இந்த தேசம் சரியான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது, என் போன்ற வாசகிகளின் ஆசை!

பின்குறிப்பு: இந்தப் படம், 'தலப்பாகட்டி’ எனும் பெயரில் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

- நிரஞ்சா, சென்னை-15

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு