Published:Updated:

ஃபைவ் ஸ்டார் சமையல் !

ஃபைவ் ஸ்டார் சமையல் !

நிக்கேத்தனா

தங்கம் போன்று தகதகக்கும் பெரிய தட்டில், வாழை இலை போட்டு, தமிழகத்துக்கே உரிய சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், மோர்க் குழம்பு, அப்பளம், வடை, பாயசம் என்று விருந்தினர்களுக்குப் பரிமாறுவதோடு... தமிழகத்தின் உடை, இசை, நாட்டியம் ஆகியவற்றையும் சேர்த்தே அறிமுகப்படுத்துவதால்... சாப்பாடு மற்றும் கலாரசிகர்களின் வேடந்தாங்கலாகவே இருக்கிறது சென்னை, பார்க் ஷெரட்டன் ஹோட்டல். இங்கு பிரத்யேகமாக இருக்கும் 'தக்ஷின்’ ரெஸ்டாரன்ட்டில் வழங்கப்படும் நம்மூர் உணவு வகைகளுக்கு கிடைத்த வரவேற்பு, மற்ற ஊர்களில் இருக்கும் 'பார்க் ஷெரட்டன்’களிலும் 'தக்ஷின்’ என்ற பெயரில் கிளைகளைத் திறக்க வைத்திருக்கிறது!

ஃபைவ் ஸ்டார் சமையல் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

இந்த வெற்றிக்கு பின்பலமாக இருக்கும் 'எக்ஸிக்யூட்டிவ் செஃப்’ ப்ரவீன் ஆனந்த், ''நான், சாப்பாட்டில் சரித்திரத்தைத் தேடும் ஆர்வம் உள்ளவன். வெளி ஊர்களுக்குச் சென்றால்... திருமண சமையல், பண்டிகை சமையல், கிராமத் திருவிழா சமையல்... எதையும் மிஸ் பண்ண மாட்டேன். அப்போதுதான், செட்டிநாட்டு சமையல், ஐயர் வீட்டு சமையல், மரைக்காயர் வீட்டு சமையல், ராவுத்தர் வீட்டு சமையல் என்று ஒவ்வொரு இனத்தினரும் எப்படி விதம்விதமாகச் சமைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்'' என தன் சமையல் ரகசியம் சொல்லும் ப்ரவீன் ஆனந்த், சென்னை, தரமணியில் இருக்கும்

ஃபைவ் ஸ்டார் சமையல் !

கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்.

''நம் பாட்டிமார்களின் சமையல் பக்குவம் அழிந்து வருவதில் எனக்கு அளவில்லா ஆதங்கம். இதற்காகவே சமையல் பற்றி நான் திரட்டும் தகவல்களை சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா நூலகத்தோடு பகிர்ந்து, ஆவணங்களாக்கி வருகிறேன்'' எனும் பிரவின், சமகால சாப்பாட்டிலும் கில்லாடி. 2010-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்சில் பங்குபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு, இவருடைய கைப்பக்குவத்தில்தான் உணவு பரிமாறப்பட்டது. இங்கே வாசகிகளுக்காக இவர் சமைப்பது... 'காலிஃப்ளவர் மிளகு பெரட்டை'!

காளிஃப்ளவர் மிளகு பெரட்டை

தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 750 கிராம், சன்ஃப்ளவர் ஆயில் - 60 மில்லி, கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், உடைத்த வெள்ளை உளுந்து - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, தூளாக்கப்பட்ட மிளகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவர் துண்டுகளை சுத்தப்படுத்தி, வேக வைத்துக் தனியே எடுத்து வையுங்கள். பாத்திரத்தில் (பேன்) எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் உடைத்த வெள்ளை உளுந்து ஆகியவற்றைத் தாளியுங்கள். கடுகு பொரிய ஆரம்பித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறம் ஆனதும் காலிஃப்ளவர், உப்பு, மிளகு சேருங்கள். மேற்கொண்டு இரண்டு நிமிடம் வரை வதக்கினால்... மணக்க மணக்க காலிஃப்ளவர் பெரட்டை தயார்!

அடுத்த இதழுடன் நிறைவடைகிறது...

படங்கள்: எம்.உசேன்