வாசகிகள் பக்கம்
''இந்த ஓட்ஸ் தானியம், நம்ம ஊருல அறிமுகமானதிலிருந்து, அதை வெச்சு விதம்விதமா ரெசிபிகள் வந்துட்டேதான் இருக்குது. இங்க பாருங்களேன்... 'டூ மினிட்ஸ் ரெசிபி'யிலகூட நம்ம வாசகிகள் ஓட்ஸைக் கையில எடுத்து, வடை சுட ஆரம்பிச்சுட்டாங்க.
அப்பப்பா... வந்து குவிஞ்சுட்டே இருக்கற உங்களோட ரெசிபிகள்ல இருந்து எதை விடுறது... எதைத் தொடறதுனு தடுமாறிட்டிருக்கேன். எங்கே இருந்துதான் இத்தனை ரெசிபிகளைப் பிடிக்கறீங்களோ! ம்... தூள் கிளப்புங்க'' என்று தட்டிக் கொடுக்கும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகம், தன் கமென்ட்ஸோடு பரிமாறும் வாசகிகளின் இரண்டு ரெசிபிகள் இதோ...
முள்ளங்கி சட்னி

##~## |
நான்கு பெரிய முள்ளங்கியை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் நெல்லிக்காய் அளவு புளி, சிறிய கட்டி வெல்லம், தேவையான அளவு காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். கடாயில், ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்து வைத்துள்ள முள்ளங்கியை அதில் சேர்த்து, நீர் சுண்டும் வரை வதக்கவும். நிறைவாக, அரை டீஸ்பூன் வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.
சப்பாத்தி மற்றும் தோசைக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
ராதா நரசிம்மன், பெங்களூரு
கமென்ட்: இதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி அரைத்தால்... கூடுதல் மணம் மற்றும் ருசி நிச்சயம்.
ஓட்ஸ் வடை
கால் கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, இரண்டு காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் சோம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு, அரை கப் ஓட்ஸில் தண்ணீர் தெளித்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இந்த வடைக்கு, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

- ஜோதிமணி ராமநாதன், கோயம்புத்தூர்
கமென்ட்: கடலைப்பருப்புடன், உளுந்து, பாசிப்பருப்பு சேர்த்தால்... ஓட்ஸ் வடை இன்னும் சாஃப்டாக இருக்கும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.
நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு!
ரெசிபிகள் விகடன் டாட் காம் (www.vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்! உங்கள் செல்போனில் இருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்கள் பெயர், முகவரி மற்றும் ரெசிபியைச் சொல்லுங்கள்.
வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.
படங்கள்: வீ.நாகமணி