கட்டுரைகள்
Published:Updated:

தொண்டைக்குழிக்குள் நழுவிச்செல்லும் அமிர்த பலகாரம் ஆற்காடு மக்கன் பேடா!

மக்கன் பேடா
பிரீமியம் ஸ்டோரி
News
மக்கன் பேடா

மக்கன் பேடா சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். தினமும் சாப்பிட்டால் உடல் எடை கூடும். முகம் பொலிவு பெறும்.

திசையெங்கும் வரலாற்றைத் தாங்கிப் பிடித்திருக்கும் மிகப்பழைமையான நகரம், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு. பிரியாணிக்கும் புகழ்பெற்ற இந்த ஊரின் மற்றொரு சிறப்பு ‘மக்கன் பேடா’ எனும் இனிப்புத் தின்பண்டம். 200 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்தப் பலகாரத்துக்குத் தாய்வீடும் ஆற்காடுதான். உருதுமொழியில் ‘மக்கன்’ என்றால் ‘நயம்’ என்றும், ‘பேடா’ என்றால் பாகில் ஊறவைக்கும் ‘இனிப்பு’ என்றும் பொருள். அப்படி, சொல்லுக்கேற்ப நயமாக தொண்டைக்குழிக்குள் நழுவிச் செல்லும் அமிர்த பலகாரமாக இருப்பதால், மக்கன் பேடா என்ற பெயர் வந்தது என்கிறார்கள், ‘தி ஆற்காடு புதிய மிட்டாய்க் கடை’ உரிமையாளர்கள் ராஜா, அருண்.

மக்கன் பேடாவின் வரலாற்றையும், அதன் செய்முறையையும் விவரித்த புதிய மிட்டாய்க் கடை உரிமையாளர் ராஜா, ‘‘200 வருடங்களுக்கு முன்பு ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்கள் உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்து விருந்து வைத்தனர். எங்கள் கொள்ளுத் தாத்தா வேலு நாயகரும் அதில் கலந்துகொண்டார். அந்த விருந்தில் பரிமாறப்பட்ட ‘மக்கன் பேடா’ இனிப்பு பற்றி நவாப்பின் சமையற்கலைஞர்களிடம் கேட்டபோது, ‘பால்கோவாவுடன் மைதா மற்றும் உலர்பழங்களைச் சேர்த்துப் பனைவெல்லப் பாகில் ஊறவைத்தால் மக்கன் பேடா தயாராகிவிடும்’ என்றிருக்கிறார்கள்.

இந்தச் செய்முறையைத் தெரிந்துகொண்ட எங்கள் முன்னோர்கள், மக்கன் பேடா தயாரிப்பதில் ஆர்வம் காட்டினர். நாங்கள், பண்டைய முறையில் பயன்படுத்தப்பட்ட பனைவெல்லப் பாகுக்குப் பதிலாக சர்க்கரைப் பாகைப் பயன்படுத்துகிறோம். மேலும் சுவைகூட்டும் வகையில் குங்குமப்பூ, அத்திப்பழம், பிஸ்தா, அக்ரூட், பாதாம், முந்திரி, சாரைப்பருப்பு, பேரீச்சை, வெள்ளரி விதை, தர்ப்பூசணி விதை, ஏலக்காய் விதை, உலர் திராட்சை, ஜாதிக்காய், ஜாதிபத்திரியைச் சேர்த்துக்கொள்கிறோம்.

தொண்டைக்குழிக்குள் நழுவிச்செல்லும் அமிர்த பலகாரம் ஆற்காடு மக்கன் பேடா!

இவற்றையெல்லாம் சம அளவில் எடுத்துக்கொண்டு பால்கோவா, மைதா, சோடா மாவு, வனஸ்பதி சேர்த்து நெய்யில் பக்குவமாகப் பிசைந்து எண்ணெயில் சிவக்க வறுத்தெடுக்கிறோம். பின்னர், சர்க்கரைப் பாகில் ஒரு மணி நேரம் ஊறவைக்கிறோம். குலாப் ஜாமூன் போலவே இருக்கும் இதைப் பார்த்தாலே நாவில் நீர் ஊறும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஒரு மக்கன் பேடாவின் விலை 40 ரூபாய். கிலோ 400 ரூபாய் என விற்கிறோம். தண்ணீர்படாமல் வைத்துக்கொண்டால் 20 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்பாக, ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. மக்கன் பேடா சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். தினமும் சாப்பிட்டால் உடல் எடை கூடும். முகம் பொலிவு பெறும். ராணிப்பேட்டை, ஆற்காட்டுப் பகுதி மக்களின் வீடுகளில் எந்த விசேஷம் நடந்தாலும், அதில் மக்கன் பேடா நிச்சயம் இடம்பெறும். தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மதுரை, காஞ்சிபுரம், சென்னை எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. ஆந்திரா, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.

நாங்கள் நான்கு தலைமுறைகளாக இந்தப் பலகாரத்தைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறோம். எங்கள் கடை ஆற்காடு பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. ஆற்காடு நகரம் முழுவதும் மக்கன் பேடா தயாரிக்கப்படுகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் மக்கன் பேடா பாரம்பரிய சுவையைத் தராது. ஆற்காட்டுப் பக்கம் வந்தால் கட்டாயம் மக்கன் பேடாவை ஒருமுறை சாப்பிட்டுச் செல்லுங்கள். அந்தச் சுவைக்காகவே மீண்டும் மீண்டும் ஆற்காட்டுக்கு வந்துசெல்வீர்கள்’’ என்றார் புன்னகைத்த முகத்தோடு.

ராஜா
ராஜா

ஆற்காட்டில் வசிக்கும் பெரியவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘உணவையும் ஊரையும் பிரித்துப் பார்க்க முடியாத மரபு நம்முடையது. வழிவழியாகச் செய்யப்படும் உணவு வகைகளே அதற்குக் காரணம். மக்கன் பேடாவின் பிரத்யேக சுவையை விரும்பிய பலரில் தந்தை பெரியாரும் ஒருவர். அவர் வடஆற்காடு மாவட்டத்தில் பிரசாரத்துக்கோ, மற்ற நிகழ்ச்சிக்கோ வரும் போதெல்லாம் மக்கன் பேடாவை விரும்பிக் கேட்பார்.

ஒருமுறை ஆற்காட்டுப் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெரியாரிடம், ‘நீங்கள் விரும்பிச் சாப்பிடுகிற மக்கன் பேடா தயாரிக்கும் கடை இதுதான்’ என ஆற்காடு வீராசாமி காட்டியிருக்கிறார். அப்போது அந்தக் கடையிலிருந்து வாங்கி வரப்பட்ட மக்கன் பேடாவை சாப்பிட்டுவிட்டு, அதன் சுவையைப் பற்றியும் சுவையாக விவரித்தார் பெரியார். அதேபோல, திரைப் பிரபலங்களில் பலருக்கும் மக்கன் பேடாமீது பிரியம் இருக்கிறது. பழம்பெரும் நடிகர்களான டி.எஸ்.பாலையா, ‘டணால்’ தங்கவேலு, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களும்கூட மக்கன் பேடா ரசிகர்கள். சமீபத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் பரிமாறப்பட்ட விருந்திலும் ‘மக்கன் பேடா’ இடம் பெற்றிருந் தது. முதல்வர் ஸ்டாலினும் அதனை விரும்பிச் சாப்பிட்டார்’’ என்கின்றனர் அவர்கள்.

தொண்டைக்குழிக்குள் நழுவிச்செல்லும் அமிர்த பலகாரம் ஆற்காடு மக்கன் பேடா!

தேவையான பொருள்கள்:

மைதா - 1 கப்

இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம்

வெண்ணெய் - 1 ஸ்பூன்

சமையல் சோடா - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

பூரணம் செய்யத் தேவையான பொருள்கள்:

பொடியாக நறுக்கிய முந்திரி - 1 ஸ்பூன்

பாதாம் பருப்பு - 1 ஸ்பூன்

சாரைப் பருப்பு - 1 ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிதளவு

சர்க்கரைப் பாகு செய்ய:

சர்க்கரை - 1 1/2 கப்

தண்ணீர் - 1 கப்

தொண்டைக்குழிக்குள் நழுவிச்செல்லும் அமிர்த பலகாரம் ஆற்காடு மக்கன் பேடா!

செய்முறை: சமையல் சோடாவுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல வரும் வரை தேய்க்கவும். மைதாவை முதலில் நன்கு சலித்து எடுத்துக்கொள்ளவும். மைதாவுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்த சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்துப் பக்குவமாக அழுத்தம் கொடுக்காமல் பிசைந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துப் பிசறிக்கொள்ளவும். தயாரான இந்த மாவின்மேல் கொஞ்சம் நெய்யைத் தடவி ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அடுத்தபடியாக பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரைப்பருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். கூடுதல் சுவைக்காக வேண்டுமெனில் உலர் திராட்சை, வெள்ளரி விதை, அக்ரூட் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து, 1 கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கம்பிப் பதம் வரும் அளவிற்குப் பாகைத் தயாரித்துக்கொள்ளவும். பிசைந்துவைத்துள்ள மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டையின் நடுவில் லேசாகத் தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிடவும். உருட்டும்போது, மாவின் ஓரங்களில் விரிசல் வரக்கூடாது. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் ஊறவைத்து எடுத்தால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.