லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் 61 - வெயிட்லாஸுக்கு உதவுமா சப்ஜா விதை ஊறவைத்த நீர்?

கரம் மசாலா, கறி மசாலா
பிரீமியம் ஸ்டோரி
News
கரம் மசாலா, கறி மசாலா

- சாஹா

கரம் மசாலா, கறி மசாலா இரண்டும் ஒன்றா... வேறு வேறு என்றால் எதை, எந்தச் சமையலுக்குப் பயன் படுத்த வேண்டும்? - எஸ்.மரியம், சென்னை-11

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சமையற் கலை நிபுணர் வசந்தா தின்கர்

கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான். கடைகளில் இரண்டுக்கும் தனித்தனி பொடிகள் கிடைக்கின்றன. கரம் மசாலா வில் மணமும் காரமும் சற்று குறைவாக இருக்கும். கறி மசாலாவில் அந்த இரண்டும் தூக்கலாக இருக்கும். எந்த உணவைச் சமைக்கிறோம், அதன் மணமும் காரமும் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து இரண்டையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டையும் நாம் வீட்டிலேயே அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக தயாரித்துப் பயன்படுத்தினால் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.

கரம் மசாலா தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 10, தனியா (மல்லி) - ஒன்றே கால் டீஸ்பூன், பட்டை - 3 துண்டு, கிராம்பு - 15, அன்னாசிப்பூ - 2, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், கல்பாசி - அரை டீஸ்பூன், பிரியாணி இலை - 2.

கரம் மசாலா, கறி மசாலா
கரம் மசாலா, கறி மசாலா

இவை எல்லாவற்றையும் வெறும் கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் விடாமல் வாசம் வரும்வரை வறுக்க வும். ஆறியதும் பொடித்துவைத்துக்கொண்டு, தேவைப் படும்போது பயன்படுத்தலாம். இதை பிரியாணி, குருமா, சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா போன்றவை சமைக்கும்போது பயன்படுத்தலாம். கரம் மசாலாவைப் பொறுத்தவரை முதலிலேயே சேர்க்காமல், கடைசியில் சேர்த்தால்தான் சுவையும் மணமும் நன்றாக இருக்கும். மிதமாகச் சேர்க்க வேண்டும். அளவு கூடினால் உணவின் சுவையே மாறக் கூடும். அசைவ உணவுகளுக்கும் மசாலா தூக்கலான பிரியாணி மாதிரியான உணவுகளுக்கும் சுவையையும் மணத்தையும் கூட்டுவதே கரம் மசாலாவின் குணம்.

கறி மசாலா தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 20, தனியா (மல்லி) - ஒன்றரை டீஸ்பூன், சோம்பு- 1 டீஸ்பூன், பட்டை - 5 பெரிய துண்டு, கிராம்பு - 10, அன்னாசிப்பூ - 1, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கல்பாசி - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 5, பிரியாணி இலை- 1, கசகசா- ஒன்றரை டீஸ்பூன்.

இவை எல்லாவற்றையும் வெறும் கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் விடாமல் வாசம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் பொடித்துவைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இதை மிக்ஸ்டு வெஜிடபுள், சிக்கன் ஃப்ரை, முட்டை குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி போன்றவை சமைக்கும் போது பயன்படுத்தலாம். குழம்பும் கிரேவியும் கெட்டியாக வரவும் இதைப் பயன்படுத்துவதுண்டு.

 வசந்தா தின்கர்,  ஸ்பூர்த்தி அருண்
வசந்தா தின்கர், ஸ்பூர்த்தி அருண்

சப்ஜா மற்றும் சியா விதைகளை ஊறவைத்த நீரைக் குடித்தால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? எவ்வளவு சாப்பிட வேண்டும்? - ச.மலர்விழி, விருதுநகர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

சப்ஜா மற்றும் சியா விதைகள் இரண்டுமே நிறைய ஊட்டச்சத்துகள் கொண்டவை. இவற்றில் அதிக நார்ச் சத்து, புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம். எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்த முடியும்.

இந்த இரண்டு விதைகளையுமே தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் ஜெல் வடிவத்துக்கு மாறும். அதை தண்ணீரில், ஜூஸில், சர்பத்தில் கலந்து குடிக்கலாம். அது தவிர சாலட், சூப் போன்றவற்றில் இந்த விதைகளை ஊறவைக்காமலும் அப்படியே தூவிச் சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கும். ரத்தச் சர்க்கரை அளவையும் அவை குறைக்கும். அந்த வகையில் இதய நோயாளிகள், நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமுள்ளோர் ஆகியோர் இந்த விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பலன் தரும். புரதச்சத்து அதிகம் என்பதால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவது தடுக்கப்படும். நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் இவை தீர்வாக அமையும். இந்த விதைகள் சேர்க்கப்படும் உணவுகளைச் சாப்பிடும்போது குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும் என்பதால் அதன் மூலம் மறைமுகமாக எடைக் குறைப்பும் நிகழும். எடை குறைந்தால் ரத்தச் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் என எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சப்ஜா மற்றும் சியா விதைகள்
சப்ஜா மற்றும் சியா விதைகள்

இந்த விதைகளைச் சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்று உப்புசம் ஏற்படலாம். அதனால் புதிதாக இந்த விதை களைச் சாப்பிட ஆரம்பிக்கிறவர்கள் அரை அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் அளவுடன் தொடங்கலாம். அது பழகியதும் இரண்டு டேபிள்ஸ்பூன் வரை போகலாம். அதற்கு மேல் பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த விதைகளைச் சாப்பிடும்போது கூடவே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.