ரெசிப்பிஸ்
Published:Updated:

முந்திரி கொண்டாட்டம்!

முந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
முந்திரி

முந்திரி என்றாலே மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் அதன் மொறுமொறு சுவைதான் நினைவுக்கு வரும். உலக அளவில் முந்திரி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

முந்திரி கொண்டாட்டம்!

ந்தியாவில் கோவாவும் தமிழ்நாடும் முந்திரிக்குப் பெயர்பெற்றவை. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஆகிய இடங்களில் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

வறுத்த முந்திரியைத் தவிர முந்திரியைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய முடியும்? பிஸ்கட், கேண்டி, கேக், லட்டு, கீர், பக்கோடா, புலாவ், கிரேவி, மசாலா என ஏராளமான வகைகளைப் பரிமாறுகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் மீனா சுதிர். இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் முந்திரியும் முந்திக் கொள்ளட்டும்!

பிரவுன் ஆனியன் கேஷ்யூ பீஸ் புலாவ்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 2 கப்

வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது) - ஒன்றரை கப்

பச்சைப் பட்டாணி - அரை கப்

முந்திரி - அரை கப்

சீரகம் - 2 டீஸ்பூன்

பிரியாணி இலை - 2

கிராம்பு - 4

பெரிய ஏலக்காய் - 2

பட்டை - ஒரு இன்ச் துண்டு

ரீஃபைண்டு ஆயில் அல்லது நெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

அரிசியை 40 நிமிடங்கள் ஊறவைக்

கவும். குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். சீரகம், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து 30 விநாடிகள் வறுக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிற

மாக வறுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயத்தை அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைக்கவும். பட்டாணியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். ஊறவைத்த அரிசி, உப்பு, வறுத்த முந்திரி சேர்க்கவும் (அலங்கரிக்க சிறிதளவு முந்திரியை எடுத்துவைக்கவும்). அரிசி கலவையை ஒரு நிமிடம் வறுத்து, 3 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வறுத்த வெங்காயம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். ரெய்தா அல்லது கறியுடன் சூடாகப் பரிமாறவும்.

* முந்திரியின் தாயகமாக வடகிழக்கு பிரேசில் கருதப்படுகிறது.

கேஷ்யூ குலாப் ஜாமூன் மிக்ஸ் பிஸ்கட்

தேவையானவை:

குலாப் ஜாமூன் மிக்ஸ் - ஒன்றரை கப்

உப்பு சேர்க்காத மென்மையான வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

கேஸ்டர் சுகர் (castor sugar) - கால் கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

நொறுக்கிய முந்திரி - 4 டேபிள்ஸ்பூன்

காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு (மாவு பிசைவதற்குத் தேவைப்பட்டால்)

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

அவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸுக்கு 10 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்யவும். கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைக்கொண்டு மாவு தயாரிக்கவும். மாவை சப்பாத்திபோல் இடவும். குக்கீ கட்டரால் வெட்டி வடிவம் செய்து கொள்ளவும். இதை ட்ரேயில் வைக்கவும். 170 டிகிரியில் 15 - 18 நிமிடங்கள் அல்லது லைட் பிரவுன் நிறமாகும் வரை பேக் செய்யவும்.

* கி.பி 1560 - 1565 காலகட்டத்தில் போர்ச்சுகீசியர்கள் மூலமாக கோவா வாயிலாக இந்தியா வந்து சேர்ந்தது.

ஹோல் வீட் சாக்லேட் அண்டு கேஷ்யூ கேக்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒன்றரை கப்

ரீஃபைண்டு ஆயில் - கால் கப்

இனிப்பு இல்லாத கோகோ பவுடர் - கால் கப்

பொடித்த சர்க்கரை - ஒரு கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

வினிகர் / ஆப்பிள் சிடர் வினிகர் - ஒரு டீஸ்பூன்

தண்ணீர் (அறை வெப்ப நிலையில்) - ஒரு கப்

வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்

காம்பவுண்ட் சாக்லேட் (சிறிய க்யூப்கள்) - அரை கப்

உப்பு - ஒரு சிட்டிகை

நறுக்கிய முந்திரி - கால் கப்

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

உலர் பொருள்களைச் சலிக்கவும். ஒரு மிக்ஸிங் பவுலில் எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர், உலர் பொருள்கள் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு (cut and fold) முறையில் கலந்துகொள்ளவும். வினிகர், வெனிலா எசென்ஸ் சேர்த்து அனைத்தையும் கலந்துகொள்ளவும். முந்திரி, சாக்கோ கியூப் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். அவனை (oven) பிரீஹீட் செய்யவும். ட்ரேயை அவனில் (oven) வைத்து 180 டிகிரியில் செல்ஷியஸில் 20 - 25 நிமிடங்கள் பேக் செய்யவும். ஆறவிட்டு, தூண்டுகளாக்கிப் பரிமாறவும்.

மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகள், வட தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில்தான் முந்திரி பழங்காலத்தில் அதிக அளவு பயிரிடப்பட்டது.

கோகனட் பீநட் கேஷ்யூ லட்டு

தேவையானவை:

துருவிய தேங்காய் - ஒன்றரை கப்

முந்திரி - ஒரு கப்

வேர்க்கடலை - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

நெய் - கால் கப்

அலங்கரிக்க:

முந்திரி - தேவைக்கேற்ப

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து ஆறவிட்டு தோல் நீக்கவும். இதனுடன் முந்திரி, சர்க்கரை சேர்த்து அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்து உருக்கிய நெய் சேர்த்துக் கைகளால் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும். முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

சில வகை

முந்திரி மரங்கள் 14 மீட்டர்

(46 அடி) உயரம் வரை வளரும். ஆனால், 6 மீட்டர் (20 அடி) வரை வளரும் வகையே விரைவாக அதிக விளைச்சலைத் தரக்கூடியது.

மலாய் கோஃப்தா இன் கேஷ்யூ கிரேவி

கோஃப்தா செய்ய:

துருவிய பனீர் - 200 கிராம்

மைதா - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)

முந்திரி - 5 அல்லது 6 (பொடியாக நறுக்கவும்)

உலர்திராட்சை - 5 அல்லது 6 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

கிரேவிக்கு:

முந்திரி - முக்கால் கப் (ஒரு மணி நேரம் ஊறவிடவும்)

பால் - 2 கப்

தண்ணீர் - ஒரு கப்

தர்ப்பூசணி விதைகள் - 2 டேபிள்ஸ்பூன்

கசகசா - 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள்- ஒன்றரை டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

அலங்கரிக்க:

துருவிய பனீர் - சிறிதளவு

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

துருவிய பனீரையும் மசித்த உருளைக் கிழங்கையும் ஒரு பவுலில் சேர்க்கவும். இதனுடன் மைதா, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, எண்ணெய் தடவிய கைகளால் மென்மையான மாவாகப் பிசையவும். முந்திரி, உலர்திராட்சை, தேங்காய்த் துருவலை ஒரு சிறிய பவுலில் சேர்க்கவும். பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஓர் உருண்டையை எடுத்துத் தட்டி நடுவில் அரை டீஸ்பூன் முந்திரி கலவையை வைத்து எல்லா பக்கங்களிலும் மூடி உருண்டையாக்கவும். மற்ற உருண்டைகளையும் இதேபோல் செய்து கொள்ளவும். கோஃப்தா தயார். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கோஃப்தாக்ளைப் போட்டு, லைட் பிரவுன் நிறம் ஆகும் வரை பொரித்தெடுக்கவும்.

தர்ப்பூசணி விதைகளையும் கசகசாவையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். முந்திரியுடன் அரை கப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் அரைத்த பொடி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முந்திரி விழுதைச் சேர்த்து 7- 8 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும், மீதமுள்ள பால், தண்ணீர் சேர்த்து 5 - 6 நிமிடங்கள் கிளறவும். உப்பு, சர்க்கரை சேர்த்து, 1 - 2 நிமிடங்கள் கிளறவும். ஏலக்காய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சில விநாடிகள் கிளறி அடுப்பை அணைக்கவும். முந்திரி கிரேவி தயார். கிரேவியில் கோஃப்தாக்களைப் போட்டு, துருவிய பனீர் கொண்டு அலங்கரிக்கவும்.

* `முந்திரி’ எனப் பொதுவாக அழைக்கப்படுவது அதன் விதையே (கொட்டை). இதைக் கொண்டு முந்திரி சீஸ், முந்திரி பட்டர் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன.

கேஷ்யூ பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு - அரை கப்

அரிசி மாவு - அரை கப்

முந்திரி (உடைத்தது) - அரை கப்

சோள மாவு - கால் கப்

சோம்பு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

பூண்டு - 3 பல் (நறுக்கவும்)

நறுக்கிய புதினா - கால் கப்

கறிவேப்பிலை - 4 (நறுக்கவும்)

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவைச் சேர்த்து தேவையான நீர்விட்டு கெட்டியான மாவாகக் கலந்துகொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, சோள மாவு, முந்திரி, சோம்பு, பச்சை மிளகாய், பூண்டு, புதினா, கறிவேப்பிலை, உப்பு சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய்விட்டு நன்கு கலந்துகொள்ளவும். கலக்கும்போது சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மாவைக் கிள்ளி எடுத்து மீடியம் சைஸ் பக்கோடாக்களாக மெதுவாக எண்ணெயில் விடவும். தீயைக் குறைத்து, மிதமான தீயில் பக்கோடாக்களை எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஜல்லி கரண்டியில் எடுத்து, கிச்சன் டிஷ்யூவில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். சூடான ஃபில்டர் காபியுடன் மாலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாறவும்.

முந்திரியில் ஏராளமான வைட்டமின்களும் கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், துத்தநாகம் ஆகிய தாதுக்களும் உள்ளன.

கேஷ்யூ கீர்

தேவையானவை:

பால் - 500 மில்லி

முந்திரி - 50 கிராம்

கண்டன்ஸ்டு மில்க் - 150 - 200 கிராம்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

பாதாம், முந்திரி - சிறிதளவு

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

முந்திரியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சவும். சற்று கெட்டி யானவுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து தொடர்ந்து கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து முந்திரி விழுது சேர்த்து, தொடர்ந்து கிளறவும். கெட்டியானவுடன் பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றவும். பாதாம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

* முந்திரியிலிருந்து கருமஞ்சள் நிறம்கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. மரச்செக்கு வாயிலாக எடுக்கப்படும் இந்த எண்ணெயைச் சமையலுக்கும் சாலட்டுக்கும் பயன்படுத்தலாம்.

காஜு மசாலா

தேவையானவை:

முந்திரி - ஒரு கப்

மிளகு - 3 - 4

பட்டை - ஒரு இன்ச் துண்டு

தர்ப்பூசணி விதைகள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

வெங்காயம் (மீடியம் சைஸ்) - 2 (நறுக்கவும்)

பூண்டு - 4 - 5 பல்

இஞ்சி - அரை இன்ச் துண்டு (தோல் சீவவும்)

பச்சை மிளகாய் - 2

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

முந்திரி 8 - 10 (அரைக்க)

தக்காளி - 4 (விழுதாக அரைக்கவும்)

பிரியாணி இலை - ஒன்று அல்லது இரண்டு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கடுகு, சீரகம் - சிறிதளவு

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

நறுக்கிய வெங்காயம், முந்திரி, தர்ப்பூசணி விதைகளை 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.இதனுடன், இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

பானில் (pan) அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து, ஆறவிடவும். பானில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து சூடாக்கி, கடுகு, சீரகம், பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய், மிளகு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து 7 - 8 நிமிடங்கள் கிளறி வேகவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது தக்காளி விழுது சேர்த்துக் கலக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு முந்திரியைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். பிறகு, இறக்கி சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

* இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் முந்திரிப்பழத்தைப் பயன்படுத்தி பானங்கள் தயாரிக்கப்பட்டன.

நட்ஸ் சக்கோ ராக்ஸ்

தேவையானவை:

ரோஸ்டட் கேஷ்யூநட் (roasted cashewnut) - ஒரு கப்

ஸ்வீட் டார்க் சாக்லேட் - 75 கிராம்

இன்ஸ்டன்ட் காபி பவுடர் - ஒரு டீஸ்பூன்

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

டார்க் சாக்லேட்டை நறுக்கி டபிள் பாய்லிங் முறையில் உருக்கவும். அல்லது மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் உருக்கவும். மைக்ரோவேவ் பயன்படுத்துவதாக இருந்தால் 10 விநாடிகளுக்கு ஒருமுறை, சாக்லேட் முழுவதுமாக கரையும் வரை, செக் செய்யவும்.

சாக்லேட் சூடாக இருக்கும்போதே இன்ஸ்டன்ட் காபி பவுடரைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ரோஸ்ட்டட் கேஷ்யூவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். குக்கீ ஷீட்டை எடுத்து அதனுள் பர்ச்மென்ட் பேப்பர் அல்லது பட்டர் பேப்பரை வைக்கவும். அதில் முந்திரி - சாக்லேட் கலவையில் கொஞ்சம் அளவை கொத்தாகவும், சிறிதளவை அவற்றுக்கு நடுவே இருக்கும் இடைவெளியிலும் வைக்கவும்.

30 நிமிடங்கள் செட்டாகவிட்டுப் பரிமாறவும் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

* இந்தியா, பாகிஸ்தான் உணவுகளிலேயே முந்திரி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கேஷ்யூநட் கேண்டி

தேவையானவை:

முழு முந்திரி - ஒரு கப்

பொடித்த வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி கொண்டாட்டம்!

செய்முறை:

முந்திரியைக் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். (நான் உப்பில்லாத, `ரோஸ்டட் கேஷ்யூ’வை (roasted cashewnut) பயன்படுத்தி, அதை இளம் சூடாக, வாசனை வர, சிறிதளவு நெய்யில் வறுத்தேன்). பச்சை முந்திரியைப் பயன்படுத்துவதாக இருந்தால், முந்திரி நன்கு பொன்னிறமாக வறுபட்டுள்ளதை உறுதிசெய்யவும். பிறகு வறுத்த முந்திரியை வடித்து நன்கு ஆறவிடவும்.

பானில் (pan) வெல்லத்துடன் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு, சற்றே கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். இப்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுத்து முந்திரியையும் சேர்த்து, முந்திரி உடையாதவாறு மரக்கரண்டியால் கிளறவும். இது முந்திரியில் பாகு சீராகப் பரவ உதவும். கிளறாவிட்டால் வெல்லம் கெட்டியாகி அடியில் தங்கிவிடும். முந்திரியில் வெல்லப்பாகு படிந்திருக்காது. 10 நிமிடங்கள் கிளறினால் எல்லா முந்திரிகளிலும் வெல்லப்பாகு சீராகப் பரவிவிடும். இப்போது முந்திரிகளை நெய் தடவிய தட்டில் சேர்த்து துண்டுகளாக்கி முழுவதுமாக ஆறவிடவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்

குறிப்பு:

வெல்லத்துக்குப் பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

* வியட்நாம், இந்தியா... இந்த இரு நாடுகளே அதிக அளவு முந்திரியை உற்பத்தி செய்கின்றன.