அலசல்
Published:Updated:

சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்!

சிக்கன் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கன் டிஷ்

எந்த மசாலாவும் சேர்க்காம பிராய்லர் கோழி அல்லது நாட்டுக் கோழியில செய்யற இதோட ருசி ரொம்ப அலாதியா இருக்கும்.

``சிக்கனை சிக்ஸ்டி ஃபைவா சாப்பிட்டிருப்பே... தந்தூரியா சாப்பிட்டிருப்பே... சில்லி சிக்கனா சாப்பிட்டிருப்பே... வரமிளகாய் கிள்ளிப் போட்டு, தேங்காய்த் துண்டுகள் அள்ளிப் போட்டு பள்ளிபாளையம் சிக்கனா சாப்பிட்டிருக்கியா? சாப்பிட்டிருக்கியா..?’’ என்று ‘சிங்கம்' சூர்யா ஸ்டைலில் இந்த மேட்டரை ஆரம்பிக்கிறோம்.

அதென்ன ‘பள்ளிபாளயம் சிக்கன்'?

சிக்கன் டிஷ்களிலேயே சில்லி சிக்கனுக்கு ஒரு தனி ‘ருசிகர்' கூட்டம் எப்போது உண்டு! சிக்கன் துண்டுகளில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்து, மொறுமொறுப்பாக சுவைத்து சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், ‘ஆயில் அயிட்டம் சாப்பிடாதீங்க... வேக வெச்சதை சாப்பிடுங்க' என்று டாக்டர் அட்வைஸை அப்லோடு பண்றவர்களுக்கு மாற்று டிஷ்ஷாக ஃபேமஸ் ஆனதுதான் இந்த ‘பள்ளிபாளையம் சிக்கன்'! இன்று ஈபிஎஸ்ஸுக்கு சவால் விடும் ஓபிஎஸ் போல, சிசி - சில்லி சிக்கனுக்கு டஃப் ஃபைட் கொடுத்து கொண்டிருக்கிறது பிசி - பள்ளிபாளையம் சிக்கன்! (எப்படி செமயா கோத்து விட்டோம் பாருங்க!)

சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்!

சரி சரி, நாக்குமேல பல்ல போட்டு பேசாம, நாக்குமேல சிக்கனை போடற வேலைய பார்ப்போம், வாங்க!

“பள்ளிபாளையம் சிக்கனை வீட்டிலும் எளிமையாகச் செய்யலாம். எந்தவிதமான மசாலாவையும் சேர்க்கத் தேவையில்லை. வரமிளகாய், தேங்காய்த் துண்டு, கறிவேப்பிலையைப் போட்டு செய்தாலே இதன் வாசம் பிச்சுக்கும்’’ என்கிறார்கள், ஈரோடு பவிழம் பஞ்சாபி ஹோட்டலை நிர்வகித்து வரும் வளர்மதியும் செல்வகுமாரும். பள்ளிபாளையம் சிக்கன் இவர்கள் ஹோட்டலில் ரொம்ப பிரபலம். எங்கெங்கிருந்தும் இதற்காகவே கிளம்பி வந்து ஒரு பிடி பிடிக்கிறார்கள் பலர். “இந்த ‘பிசி' டிஷ் செய்றதுல இவங்க ரொம்ம்ம்ப பிஸி’’ என்றே சொல்லலாம்!

“கிராமத்தில் எங்க பாட்டி எங்களுக்கு சமைத்துக் கொடுத்த எளிமையான முறையைப் பின்பற்றிதான் ஹோட்டலிலும் சுவைமிக்க பள்ளிபாளையம் சிக்கனை ரெடி செய்கிறோம். ஆர்டர் கொடுத்து சிறிது நேரம் காத்திருந்தால் போதும், சுடச்சுட பள்ளிபாளையம் சிக்கன் அவர்கள் டேபிளில் கமகமக்கும். இந்த டிஷ் தவிர சிக்கனில் நாட்டுப்பு அயிட்டங்களான சிக்கன் உப்புக்கறி, நல்லாம்பட்டி சிக்கன், சிக்கன் சிந்தாமணி ஆகியவையும் தயார் செய்து தருகிறோம். எந்தப் பொடியும் கலக்காமல் வீட்டு முறைப்படி ஃப்ரெஷ்ஷாக தயார் செய்து தருவதால் அதற்காகவே குடும்பம் குடும்பமாக மக்கள் எங்கள் கடையைத் தேடி வருகிறார்கள்’’ என்றனர் பெருமையுடன்.

பள்ளிபாளையம் சிக்கன் எப்படிச் செய்வது? இதோ, பவிழம் பஞ்சாபியின் செஃப் துரைராஜ் ரெசிப்பி சொல்கிறார்...

சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்!

தேவையான பொருள்கள்: பிராய்லர் அல்லது நாட்டுக்கோழிக் கறி - அரை கிலோ, சின்ன வெங்காயம் (உரித்தது) - 200 கிராம், சமையல் எண்ணெய் - 200 மிலி, வரமிளகாய் (விதைகள் நீக்கியது) - 10, தேங்காய் சிறியதாக செதுக்கியது - கால் மூடி, தேவையான அளவுக்கு மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை. இவற்றோடு 1 லிட்டர் தண்ணீர்.

சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்!

செய்முறை: அடுப்பைப் பற்ற வைத்து எண்ணெய் காய்ந்ததும், இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும். அதோடு விதைகள் நீக்கிய வரமிளகாய் போட்டு மீண்டும் வதக்கவும். இப்போது நீள வாக்கில் வெட்டி வைத்துள்ள தேங்காய்த் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் நீரில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, கறி வெந்து வரும் அளவுக்குத் தேவையான தண்ணீரையும் சேர்க்கவும். கிரேவி போல வேண்டும் என்றால் நாம் வைத்திருக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் முழுவதையும் சேர்க்க வேண்டும். ‘டிரை'யாக தேவை என்றால் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். இடையிடையே நன்கு கிளறி விடவும். எண்ணெயும், தண்ணீரும் கலந்து கறி வேகும்போது வெளிப்படும் வாசம் கமகமவென ஆளைத் தூக்கும். கறி வெந்து வரும்போது எண்ணெய் இருந்த இடம் தெரியாது. இப்படி 15 நிமிடங்களுக்கு வேக வைத்தாலே கறி நன்கு பூ போல வெந்து விடும்.

இந்த டிஷ்ஷில் எந்தவிதமான கலர் பொடியோ, ரசாயனமோ சேர்க்கத் தேவையில்லை. நன்றாக வெந்ததும் அதன் மணமே ‘என்னை சாப்பிட்டுக்கோ' என்று நம்மை அழைக்கும்.

Iவளர்மதி
Iவளர்மதி

‘விக்ரம் 2' பாக்க போவும்போது ‘கைதி' பார்த்துட்டு வரச் சொன்னாங்க இல்லையா... ‘பொன்னியின் செல்வன்' படத்துக்குப் போறதுக்கு முன்னே கல்கி எழுதிய கதையை சுருக்கமா தெரிஞ்சுக்குவோம் இல்லையா... (“சரி சரி... விஷயத்துக்கு வா!’’) அதுமாதிரி பள்ளிபாளையம் சிக்கன் எப்படி உருவாச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?

“1980களில் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில விவசாயமும், கைத்தறி நெசவுத் தொழிலும்தான் அதிகமா இருந்துச்சு. நூல் மில்லுங்க ஜாஸ்தியா இருந்துச்சு. விசைத்தறி பட்டறைகள் 1985க்குப் பிறகு அதிகமா வரத் தொடங்கிச்சு. வீட்டுல ஆம்பளைங்க மட்டுமில்ல, பொம்பளைங்களும் வேலைக்கு போகத் தொடங்கினாங்க. ஞாயிற்றுக்கிழமையும் கூட வேலை இருக்கும். நேரமே கிடைக்காது... காலைல வேலைக்குப் போனா சாயந்தரம்தான் வீடு திரும்புவாங்க. வாரத்துல ஒருநாள் கறி ஆக்கி சாப்பிடணும்னா, அம்மிக்கல்லுல மசாலா, தேங்காய் அரைச்சு கறிக்கொழம்பு சமைக்க நேரம் இருக்காது. ஆனா கறி சாப்பிடணும்னு தோணும். சீக்கிரமா சமைக்கணும். அதனால, மசாலா சாமான்களை பெருசா சேர்த்துக்காம அவசரமா செஞ்சு சாப்பிட எங்க கிராமத்து பொம்பளைங்க கண்டுபிடிச்சதுதான் இந்த பள்ளிபாளையம் சிக்கன்.

எந்த மசாலாவும் சேர்க்காம பிராய்லர் கோழி அல்லது நாட்டுக் கோழியில செய்யற இதோட ருசி ரொம்ப அலாதியா இருக்கும். நாட்டுக்கோழி கறியில சமைச்சா நாள் பூரா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்னு தோணும். இப்படி ஆரம்பிச்ச பள்ளிபாளையம் சிக்கன் தான் பிறகு எல்லா ஹோட்டல்கள்லயும் ஃபேமஸா ஆயிருச்சு’’ என்கிறார் குமாரபாளையத்தைச் சேர்ந்த 75 வயது ரத்னா அம்மா.

கடைசியா, “போனை எடு... ஸ்விகில போடு ஒரு பள்ளிபாளையம் சிக்கன் ஆர்டர்’’னு இருக்கிற இந்த ஜெனரேஷன் கிட்ஸுக்கு, “பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்துல இருக்கு, ஆனா ஈரோடு நகரத்துக்குப் பக்கத்தில் இருக்கு’’ என்ற ஜியாக்ரபி எல்லாம் தேவைப்படாதுதானே? சரி விடுங்க!