சினிமா
பேட்டிகள்
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: சமைக்கவே தெரியாது; இப்போ சமையல் ராணி!

சித்ரா முரளி
பிரீமியம் ஸ்டோரி
News
சித்ரா முரளி

விஜய் சேதுபதி என் கணவர்கிட்ட யோகா கத்துக்க வருவார். அப்போதிலிருந்து அவரை எங்களுக்குத் தெரியும்.

‘இன்னைக்கு என்னுடைய சமையலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ஆனா, எனக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் சமைக்கத் தெரியாதுங்கிற உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும்!’’ என்று கண்ணடித்துச் சிரிக்கிறார் சித்ரா முரளி.

விதவிதமான பாரம்பரிய ரெசிப்பிகளைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு ‘சித்ரா முரளி கிச்சன்’ யூடியூப் பக்கம் பொருத்தமான தளம்!

நியூஸ் ரீடராகப் பயணித்துக்கொண்டிருந்தவர் யூடியூபராக மாறிய வெற்றிக்கதை குறித்து நம்மிடையே பகிரத் தொடங்கினார்.

‘`ஒரு தனியார் எப்.எம் நிகழ்ச்சியில் ‘மகளிர் மட்டும்’னு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். அதில் என் குரல், நான் உச்சரிக்கிற விதம் எல்லாம் பார்த்துட்டு, என் கணவர் என்னை நியூஸ் ரீடராக டிரை பண்ணச் சொன்னார். சொன்னதோட இல்லாம தினமும் காலையில் தமிழ் நியூஸ் பேப்பரைக் கத்திப் படிக்க டிரெயினிங் கொடுத்தார். பலகட்டத் தேர்வுக்குப் பிறகு ‘தமிழன்’ டி.வி-யில் நியூஸ் ரீடர் வாய்ப்பு கிடைச்சது. பிறகு, ‘ஜெயா டி.வி’ நியூஸ் ரீடரானேன்.

SHAREபட்டா பரம்பரை: சமைக்கவே தெரியாது; இப்போ சமையல் ராணி!

எனக்குக் கல்யாணம் ஆகும்போது சுத்தமா சமைக்கத் தெரியாது. என் மாமியார் முதலில் எனக்கு ரசம் வைக்கச் சொல்லிக் கொடுத்தாங்க. பிறகு, படிப்படியா அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். அவங்க எப்போ சமைச்சாலும் சமைச்சி முடிச்சதும் அந்த ரெசிப்பியை ஒரு நோட்டுல எழுதி வச்சிடுவாங்க. இப்போ அந்தச் சமையல் நோட்டுதான் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. என் மாமியாருக்கு பழங்கால சமையல் பற்றி நல்லாத் தெரியும். ரொம்பவே சுவையா சமைப்பாங்க.

கணவர் சிவில் இன்ஜினீயர். அதோடு யோகா கிளாஸும் எடுப்பார். அவரோட யோகா கிளாஸுக்குப் பல செலிபிரிட்டிகள் வருவாங்க. அவரோட ஸ்டூடண்ட் ராஜேஷ் ரங்கா, வெஜிடபிள் பிரியாணி நல்லா சமைப்பார். கிளாஸில் பலரும் வெஜிடபிள் பிரியாணி வேணும்னு கேட்டதால அவரைச் சமைக்கச் சொன்னோம். அவர் சமைக்கும்போது, நான் ஆங்கரிங் பண்ணினேன். அதை வாட்ஸ் அப்ல எங்க ஃப்ரெண்ட்ஸுக்கு அனுப்பலாம்னு என் கணவர் வீடியோ எடுத்தார். அப்போ ராஜேஷ்தான் யூடியூப்ல இந்த வீடியோவைப் போட்டா பலருக்கும் உதவியா இருக்கும்னு ஐடியா கொடுத்தார். ‘சித்ரா முரளி கிச்சன்’னு எங்க பெயரையே வச்சிக்கலாம்னு சட்டுன்னு முடிவு பண்ணிட்டோம். இப்படித்தான் எங்க யூடியூப் பயணம் ஆரம்பிச்சது.

சமையலுக்கு நிறைய பொருள்கள் வேணும்னு பலரும் நினைக்கிறாங்க. ஆனா, நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தியே சுவையா சமைக்க முடியும். ரொம்ப சிம்பிளான விஷயம்னா அது சமைக்கிறதுதான். சேனலுக்காக மெனக்கெட்டு நாங்க எதுவும் பண்றதில்லை. காத்தால எழுந்து அன்னைக்கு வீட்ல என்ன காய் இருக்கோ அதைப் பொறுத்து அன்னைக்கு என்ன சமைக்கலாம்னு முடிவு பண்ணுவேன். தினசரி வீட்ல சமைக்கிறப்போ அதை வீடியோ எடுத்து போஸ்ட் பண்ணுவோம். அதனாலதான் எங்களால தினமும் வீடியோ பதிவிட முடியுது. இதுவரை கிட்டத்தட்ட 1,500 வீடியோவுக்கு மேல பண்ணிட்டோம். வீட்ல அன்றாடம் பயன்படுத்துற பாத்திரங்கள்ல சமைச்சு, அதைத்தான் வீடியோ எடுக்கிறோம். என் கணவரும், என் மகனும் எனக்கு மிகப்பெரிய பலம். பையன் இப்போ எம்.பி.ஏ படிக்கிறான். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேங்க... ரெண்டு பேருமே சூப்பரா சமைப்பாங்க.

நான் சமைக்கிறதை என் கணவரே வீடியோ எடுத்து எடிட் பண்ணிப் போடுவார். பர்சனலா சேனலைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாத்தையும் அவர்தான் கவனிச்சிக்கிறார். 2015-ல் நாங்க சேனல் ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் கழிச்சுதான் சேனல் மூலமா பணம் சம்பாதிக்க முடியுங்கிறதே எங்களுக்குத் தெரிஞ்சது. வீடியோ போடும்போது, பர்சனலா எங்களுக்கு சந்தோஷமா இருக்கு... அதனால அதைப் பண்றோம்” என்றவரிடம் மறக்கமுடியாத எமோஷனல் மொமன்ட் குறித்துக் கேட்கவும் புன்னகைக்கிறார்.

SHAREபட்டா பரம்பரை: சமைக்கவே தெரியாது; இப்போ சமையல் ராணி!

“என்னுடைய சமையல் ரொம்ப எளிமையா இருக்குன்னு பலரும் சொல்லுவாங்க. சின்னப் பசங்க நிறைய பேர் என் வீடியோஸ் பார்க்கிறாங்க. துபாய்ல ஹரி மாமா, மாமின்னு என் ஃபாலோயர். அவங்களோட 60வது கல்யாணம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதற்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. ஆனால், என்னால கலந்துக்க முடியலை. அவங்க திருமணம் முடிஞ்ச கையோடு எங்க வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தாங்க. தன்னுடைய பொண்ணைப் பார்க்க வரும்போது எப்படி சீர் கொண்டு வருவாங்களோ அதே மாதிரி சீர் கொண்டு வந்திருந்தாங்க. அந்த மொமன்ட் ரொம்பவே எமோஷனலா இருந்துச்சு.

விஜய் சேதுபதி என் கணவர்கிட்ட யோகா கத்துக்க வருவார். அப்போதிலிருந்து அவரை எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பட ரிலீஸுக்குப் பிறகும் எங்க வீட்டுக்கு வந்து நான் போடுற டீயை விரும்பிக் குடிப்பார். இப்போ லாக்டௌன் ஆரம்பிச்சதிலிருந்து இன்னும் அவரைச் சந்திக்கலை. அதே மாதிரி, ஸ்ரீபிரியா மேடம் என்னுடைய வீடியோஸ் பார்ப்பாங்க. அவங்க ஒரு தடவை என்னைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்களுக்கு நான் பண்ற ‘வத்தக்குழம்பு’ ஃபேவரைட்.

இப்போ ஜெயா டி.வி-யில் புதன்கிழமைதோறும் ‘ரசிக்க ருசிக்க’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். என்னுடைய யூடியூப் சேனல் பார்க்கிறவங்க சிலர் என்கூட சேர்ந்து சமைக்கணும்னு ஆசைப்படுவாங்க. சிலர், அவங்க மண் சார்ந்த சமையல் ரெசிப்பிகளை என்கூட ஷேர் பண்ணிப்பாங்க” என்கிறார்.