Published:Updated:

செளசெள சட்னி | மேத்தி கா தெப்லா | தவா புலாவ் - காய்கறி ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

மெயின் டிஷ்ஷிலேயே காய்கறிகள் சேர்த்து அதையே முழுமையான உணவாக மாற்றலாம். இந்த வீக் எண்டு சமையலை சிம்பிளாகவும் சத்தானதாகவும் ட்ரை பண்ணுங்களேன்...

காய்கறிகள் விற்கும் விலையில் தினமும் இரண்டு, மூன்று காய்கறிகளை வைத்துச் சமைப்பது சாத்தியமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. காய்கறிகள் தவிர்த்த சமையல் ஆரோக்கியமானதும் அல்ல. ஸ்மார்ட் சமையல் தெரிந்தவர்கள் இந்த விஷயத்தில் எந்த காம்ப்ரமைஸும் செய்துகொள்ளாமலேயே காய்கறிகளின் முழு ஆரோக்கியத்தையும் செலவின்றி பெற வழி செய்வார்கள். அப்படிப்பட்ட ஸ்மார்ட் சமையலுக்கான ரெசிப்பீஸ் இங்கே... மெயின் டிஷ்ஷிலேயே காய்கறிகள் சேர்த்து அதையே முழுமையான உணவாக மாற்றலாம். இந்த வீக் எண்டு சமையலை சிம்பிளாகவும் சத்தானதாகவும் டிரை பண்ணுங்களேன்...

செளசெள சட்னி

தேவையானவை:

செளசெள - 3/4 கப் (தோல் நீக்கி நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - 250 கிராம்
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 2 - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செளசெள சட்னி
செளசெள சட்னி

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன் நிறத்துக்கு வந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய செளசெள சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும். கூடவே புளியைச் சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதை அப்படியே சாப்பிடலாம். விருப்பமானவர்கள் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, தாளித்துக் கொட்டியும் சாப்பிடலாம்.

மேத்தி கா தெப்லா

தேவையானவை:

மேத்தி (வெந்தய இலைகள்) - 250 கிராம்
கோதுமை மாவு - 375 கிராம் + சிறிதளவு
இஞ்சி பேஸ்ட் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்/தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய்/வெண்ணெய் - சிறிது (விருப்பப்பட்டால்)

மேத்தி கா தெப்லா
மேத்தி கா தெப்லா

செய்முறை:

வெந்தய கீரை இலைகளைக் கழுவி ஈரம் போனதும் பொடியாக நறுக்கி வைக்கவும். கோதுமை மாவு மற்றும் நறுக்கிய இலைகளை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து மீதம் உள்ள பொருள்களில் எண்ணெய், நெய் நீங்கலாக மற்ற அத்தனையையும் கலந்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தியாகப் பிசைந்து வைக்கவும். இதை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சிறிது மாவு தொட்டு சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சப்பாத்தியை போட்டு வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுக்கவும். வேகும்போது சிறிது எண்ணெயை சப்பாத்தியின் மேல் தெளிக்கவும். விருப்பப்பட்டால் சிறிது நெய் அல்லது வெண்ணெயை இரண்டு புறமும் மேலே தடவலாம். இது, ஊறுகாய் அல்லது ரைத்தாவுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவா புலாவ்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 1 கப்
பீன்ஸ், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்துள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைத் துண்டுகள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கவும் (அலங்கரிக்க)
உப்பு - தேவையான அளவு

தவா புலாவ்
தவா புலாவ்

செய்முறை:

பாஸ்மதி அரிசியைத் தனியாக வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி முள்கரண்டியால் லேசாகக் கிளறி விட்டுக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, மிதமான தீயில் வேக விடவும். இதில் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பாவ் பாஜி மசாலாத்தூள், உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீரைத் தெளித்துக் கிளறி வேக விடவும். எல்லாம் நன்றாக வெந்து பச்சை வாசனை போனதும் கலவையை சாதத்தில் சேர்த்துக் கிளறி சிறிது எலுமிச்சைச் சாற்றை விட்டு வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பின் வீல்/ ட்ரை கலர் பூரி

தேவையானவை:

கோதுமை மாவு - 600 கிராம் + மாவு தேய்க்க சிறிதளவு‌
வேக வைத்து அரைத்த பாலக் கீரை - 50 கிராம்
வேக வைத்து அரைத்த பீட்ரூட் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

பின் வீல்/ ட்ரை கலர் பூரி
பின் வீல்/ ட்ரை கலர் பூரி

செய்முறை:

வாய் அகன்ற மூன்று கிண்ணங்களில் தலா 200 கிராம் மாவைத் தனித்தனியாகச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். முதல் கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசையவும். இரண்டாவது கிண்ணத்தில் தண்ணீருக்கு பதில் பாலக் கீரையைச் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும். மூன்றாவது கிண்ணத்தில் பீட்ரூட்டைச் சேர்த்து மாவாகப் பிசையவும். இனி பிசைந்து உருட்டிய மூன்று மாவுகளில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாகத் தனித்தனியாகப் பிரித்து சின்ன பூரிகளாக உருட்டவும். உருட்டிய பாலக்கீரை பூரியின் மேல் பிளெயின் பூரியின் மாவை வைத்து, அதன் மேல் பீட்ரூட் மாவை வைத்து அழுத்தி ஒரே பெரிய பூரியாகத் தேய்க்கவும். இதை மீண்டும் உருட்டி உருண்டைகளாக்கி, அதில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளைப் பிரித்தெடுக்கவும். இதை மீண்டும் மாவு தொட்டு பூரிகளாக உருட்டினால் மூன்று வர்ண பூரி நிறத்தில் அதிகமாக பூரிகள் கிடைக்கும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பூரிகளாக சுட்டெடுத்தால் பின் வீல் அல்லது ட்ரை கலர் பூரி ரெடி. இது உருளைக்கிழங்கு மசாலா அல்லது காரமான கிரேவியோடு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு