தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

எக்லெஸ் கேக் ரெசிப்பி

கேக்
பிரீமியம் ஸ்டோரி
News
கேக்

கிறிஸ்துமஸ் & நியூ இயர் ஸ்பெஷல்

மசாலா டீ பிரவுனீஸ்

தேவை: தேங்காய்த் துருவல் - 1/3 கப், மைதா - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், இனிப்பு சேர்க்காத கோகோ பவுடர் - 1/3 கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், ஸ்ட்ராங் மசாலா டீ - அரை கப், எண்ணெய் - அரை கப், ­வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவனை 175 டிகிரி சென்டிகிரேடில் வைத்து பிரீஹீட் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும். 8 x 8 அங்குல பேக்கிங் பானில் (Pan) சமையல் எண்ணெயை லேசாகத் தடவி, அதன் மேல் 2 டீஸ்பூன் கோகோ பவுடர் தூவிவிடவும். மைதா மாவு, சர்க்கரை, கால் கப் கோகோ பவுடர், அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தயாரித்து வைக்கப்பட்ட ஸ்ட்ராங்கான தேநீர், எண்ணெய், வெனிலா எசென்ஸ் உடன் மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, ஈரப்பதம் வரும் வரை, கட்டியில்லாமல் நன்றாக மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். கலவையைத் தேங்காய்த் துருவலில் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் கேக் கலவையைப் பரப்பவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் இந்தக் கலவையை, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து ஒரு மணி நேரம் குளிர அனுமதிக்கவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அற்புதமான சாக்லேட் மசாலா டீ பிரவுனீஸ் தயார்.

பூசணி கேக்

தேவை: வெண்ணெய் - ஒரு கப், கிரானுலேட்டட் சர்க்கரை ­- 2 கப், தயிர் ­- முக்கால் கப், வெனிலா எசென்ஸ் ­- 2 டீஸ்பூன், வினிகர் - ஒரு டீஸ்பூன், மைதா - 3 கப், பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பூசணிக்கூழ் -­ 2 கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: 350 டிகிரி ஃபாரன்ஹீட் / 180 டிகிரி சென்டிகிரேடுக்கு அவனை பிரீஹீட் செய்யவும். பேக்கிங் பானில் (Pan) நன்றாக வெண்ணெய் தடவி, மாவு தடவி தயாராகவைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒன்றாகக் கலந்து, பஞ்சு போல வரும் வரை அடிக்கவும். தயிர் சேர்க்கவும். நன்கு கலக்கவும். இந்தக் கலவை கெட்டியாக, மாவு பதத்தில் கட்டிகள் இல்லாமல் இருக்க வேண்டும். வெனிலா எசென்ஸ் மற்றும் வினிகர் சேர்க்கவும். மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இரண்டு கலவைகளையும் ஒன்றாகச் சேர்த்து, பூசணிக்கூழ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை கிரீஸ் செய்து வைக்கப்பட்டுள்ள பானில் ஊற்றி, 50 - 60 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் அல்லது ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப்பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். கேக்கை முழுவதுமாகக் குளிர அனுமதிக்கவும். உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும்.

குலாப் ஜாமூன் கப் கேக்

தேவை: கண்டன்ஸ்டு மில்க் - 100 மில்லி, கேஸ்டர் சர்க்கரை - 500 கிராம், பால் - 500 மில்லி, ரோஜா எசென்ஸ் - 10 மில்லி, மைதா - 650 கிராம், பேக்கிங் பவுடர் - 12 கிராம், பேக்கிங் சோடா - 12 கிராம், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 50 கிராம், நெய் - 300 மில்லி.

அலங்கரிக்க: குலாப் ஜாமூன் - தேவைக்கேற்ப.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: பால், சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். சர்க்கரை முழுதாகக் கரையும் வரை கலக்கவும். பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரோஜா எசென்ஸ் மற்றும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை மஃபின் ட்ரே அல்லது கப் கேக் அச்சுக்குள் ஊற்றவும். பிரீஹீட் செய்த அவனில் 15-20 நிமிடங்கள் வரை 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும். முழுமையாகக் குளிர அனுமதிக்கவும். மேலே குலாப் ஜாமூன் ஒரு துண்டு வைத்துப் பரிமாறவும்.

சாக்லேட் மோர் கேக்

தேவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், வெண்ணெய் - அரை கப், இனிப்பில்லாத கோகோ பவுடர் - கால் கப், பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், மோர் - ஒன்றரை கப், வினிகர் - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். ஒரு பெரிய கலவைக் கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து க்ரீம் போல நன்றாகக் கலக்கவும். மோர், வினிகர் மற்றும் வெனிலா எசென்ஸை இந்தக் கலவையில் சேர்க்கவும். ஒரு தனி கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா, கோகோ பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, வெண்ணெய் கலவையோடு கலந்துகொள்ளவும். வெண்ணெய் தடவப்பட்ட, எட்டு அங்குல உருண்டை வடிவ இரண்டு பேக்கிங் பானில் (Pan) கலவையை ஊற்றி, 24 - 26 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் முற்றிலும் குளிர்ந்த பிறகு, உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும்.

தர்ப்பூசணி தோல் கேக்

தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதியைப் பலரும் உண்பதில்லை. சிவப்பு நிற பழத்தை மட்டும் உண்டுவிட்டு, வீசிவிடுகிறோம். அதைப் பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சமைத்துச் சாப்பிடும் வழக்கமும் உள்ளது. ஆனால், இந்த வெள்ளைப்பகுதியில் முட்டை சேர்க்காமல் கேக் செய்யவும் முடியும்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

தேவை: தர்ப்பூசணி வெள்ளைப்பகுதி (கூழாக்கியது) - ஒரு கப், தர்ப்பூசணி சிவப்புப்பகுதி (கூழாக்கியது) - ஒரு கப், துருவிய தேங்காய் - ஒரு கப், உப்பு - கால் டீஸ்பூன், வறுத்த ரவை - ஒரு கப், துருவிய வெல்லம் / பழுப்புச் சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், பாதாம் - 10, முந்திரி - 10, திராட்சை - 10, பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன். அலங்கரிக்க: தர்ப்பூசணி துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை: பாதாம், முந்திரி, திராட்சையைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். தர்ப்பூசணியைத் துண்டுகளாக வெட்டி, சிவப்புநிறப் பகுதியை அகற்றி தனியாக எடுத்துவைக்கவும். மிச்சமிருக்கும் பகுதியில், பச்சைத் தோலை நீக்கிவிட்டு, வெள்ளைப்பகுதியை மட்டும் துருவிக்கொண்டோ, சின்னஞ்சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டோ அதை மிக்ஸியில் அரைத்து கூழாக்கிக்கொள்ளவும். தர்ப்பூசணி தோல் ப்யூரி தயார்.

சிவப்பு சதைப்பகுதியிலிருந்து விதைகளை நீக்கி, அதிலிருந்து ஒரு கப் கூழ் எடுத்து ஒதுக்கிவைக்கவும். வெள்ளை மற்றும் சிவப்புக்கூழை, வறுத்த ரவையுடன் சேர்த்து, பின்னர் துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்க்கவும். பேக்கிங் பவுடர் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும். பிறகு பேக்கிங் பவுடர் சேர்த்து மீண்டும் கலக்கவும். பேக்கிங் பான் (Pan) முழுவதும் வெண்ணெய் தடவி கிரீஸ் செய்து, மைதா மாவால் டஸ்ட்டிங் செய்து மூடிவைக்கவும். பேக்கிங் பானில் கேக் கலவையை ஊற்றவும். அவனை 180 டிகிரி சென்டிகிரேடில் 10 முதல் 15 நிமிடங்கள் பிரீஹீட் செய்து வைத்துக்கொள்ளவும். அவனில் பான் வைத்து, 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். சுவையான தர்ப்பூசணி தோல் கேக் தயார். கேக்கின் மீது ஃப்ரெஷ்ஷாக நறுக்கிய தர்ப்பூசணித்துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும்.

தினை பீட்ரூட் பிரவுனீஸ்

தேவை: பெரிய அளவு பீட்ரூட் - ஒன்று, லேசான இனிப்பு சுவையுள்ள சாக்லேட் சிப்ஸ் - அரை கப், சர்க்கரை - அரை கப், இனிப்பில்லாத கோகோ பவுடர் - கால் கப், உப்பில்லாத மென்மையான வெண்ணெய் - 2 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன், தினை மாவு - முக்கால் கப், பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: பீட்ரூட்டை நன்றாகச் சுத்தம் செய்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பீட்ரூட்டுடன் கால் கப் தண்ணீரைச் சேர்த்துக் கூழாக்கிக்கொள்ளவும். இந்த ப்யூரியில் ஒரு கப் எடுத்து தனியே எடுத்துவைக்கவும். 180 சென்டிகிரேடுக்கு அவன் அடுப்பை பிரீஹீட் செய்து வைக்கவும். எட்டு அங்குல ட்ரேயில் பேக்கிங் பேப்பரை வைக்கவும் அல்லது குக்கிங் ஸ்ப்ரே தெளித்து பேக்கிங் பானை (Pan) கிரீஸ் செய்யவும். சாக்லேட் சிப்ஸை டபுள் பாய்லிங் முறை அல்லது அவன் அடுப்பில் ஒரு நடுத்தர அளவு கிண்ணத்தில் அதிக வெப்பநிலையில் ஒரு நிமிடம் வைத்து உருக்கிக்கொள்ளவும். உருகிய சாக்லேட்டை நன்றாகக் கலந்துகொள்ளவும். கலவை மென்மையாக இருக்க வேண்டும். அதே கிண்ணத்தில் பீட்ரூட் கூழ், சர்க்கரை, கோகோ பவுடர், வெண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இது மென்மையாகவும் க்ரீமியாகவும் இருக்க வேண்டும். மற்றொரு கிண்ணத்தில், தினை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்து எடுத்துக்கொள்ளவும். மென்மையான பீட்ரூட் கலவையை இந்த மாவில் சேர்த்துக்கொண்டு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தயாராக வைக்கப்பட்டுள்ள பேக்கிங் பானில் (Pan) இந்த பிரவுனி கலவையை ஊற்றி 35 - 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். ஒரு மணி நேரம் நன்றாக ஆறவைக்கவும். பிறகு, சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ருசியான, ஆரோக் கியமான தினை பீட்ரூட் பிரவுனீஸ் தயார்.

லெமன் கோகனட் கேக்

தேவை: மைதா - ஒன்றே முக்கால் கப், பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - அரை கப், கிரானுலேட்டட் சர்க்கரை - முக்கால் கப், தேங்காய் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - ஒன்றேகால் கப், எலுமிச்சைச்சாறு - மூன்றரை டீஸ்பூன், எலுமிச்சைத்தோல் துருவல் (Lemon Zest) - ஓர் எலுமிச்சையின் தோல்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு 180 டிகிரி சென்டிகிரேடுக்கு அவனை பிரீஹீட் செய்யவும். வெண்ணெயை கேக் பானில் (Pan) தடவி கிரீஸ் செய்து தயாராக வைக்கவும். ஒரு கிண்ணத்தில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேங்காய் பவுடர் எடுத்துக்கொண்டு, நன்றாகச் சலித்துக்கொள்ளவும். அந்தக் கலவையை நன்கு கலக்கவும். கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து, அது லேசான பதம் வரும்வரை அடித்து, கிரானுலேட்டட் சர்க்கரை சேர்க்கவும். இரண்டையும் பஞ்சு போன்று ஃபிளஃப்பியாக வரும்வரை நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையில் தயிர், எலுமிச்சைச்சாறு மற்றும் எலுமிச்சைத்தோல் துருவல் சேர்த்துக்கொள்ளவும். மாவுக் கலவையில் பாதி அளவு சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து, கட்டிகள் இல்லாமல் அதை அடித்துவிடவும். பிறகு, மீதமுள்ள மாவுக் கலவையைச் சேர்க்கவும். நன்றாக அடித்துக்கொள்ளவும். இந்த கேக் கலவையை கேக் பானில் (Pan) ஊற்றவும். அவனில் வைத்து 30-35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப்பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். முழுமையாகக் குளிர அனுமதிக்கவும். உங்கள் விருப்பப்படி கேக்கை அலங்கரிக்கவும்.

பட்டர்ஸ்காட்ச் பொரி கேக்

தேவை: சர்க்கரை - அரை கப், அரிசிப்பொரி - 2 கப், பட்டர்ஸ்காட்ச் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், ஜெம்ஸ் - 10 முதல் 20, வெண்ணெய் – சிறிதளவு.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் சர்க்கரையைச் சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீரைச் சேர்க்கவும். மிதமான சூட்டில் சர்க்கரையை முழுவதுமாகக் கரையவிடவும். எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். ஒருமுறை கரைந்து வரும்போது பாத்திரத்தின் ஓரத்தில் சேரும் சர்க்கரை கிரிஸ்டல்களை நீக்கவும். இது சர்க்கரை கிரிஸ்டல்களாக மாறுவதைத் தடுக்கும். சர்க்கரை கரையும்போது அந்தக் கலவையை கலக்க வேண்டாம். மிதமான சூட்டில் கொதிக்க வேண்டும். சர்க்கரைப் பாகு பழுப்பு நிறமாவதைப் பார்த்தால், பாத்திரத்தின் ஓரத்தில் படியும் சர்க்கரை படிமங்களை நீக்கிவிடுங்கள். ஒருகட்டத்தில், சர்க்கரை கேரமலைஸ் ஆகத் தொடங்கும். சர்க்கரைப்பாகு நிறம் மாறும். இப்போது பட்டர்ஸ்காட்ச் எசென்ஸ் சேர்க்கவும். அடுப்பை அணைத்துவிடவும். பொரியை லேசாகச் சூடுபடுத்திக்கொள்ளவும். அதைத் தயாராகி உள்ள சிரப்பில் சேர்க்கவும். ஜெம்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய கேக் பானில் (Pan) வைக்கவும். 20 நிமிடங்களுக்குக் குளிர அனுமதிக்கவும். பட்டர்ஸ்காட்ச் பொரி கேக் துண்டுகளாக்கி உண்ணத் தயார்.

சிறப்பு: இது மிகவும் சுலபமான பேக்கிங் செய்ய தேவையின்றி, உடனடியாகச் செய்யக்கூடிய சுவையான பட்டர்ஸ்காட்ச் பொரி கேக்.

அவல் கேக்

தேவை: அரைத்த அவல் - ஒன்றரை கப், கோகோ பவுடர் - 3 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், பால் - அரை கப், எண்ணெய் - கால் கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைக் கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து ஒன்றாகக் கலக்கவும். எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை கலக்கவும். பின்பு பால் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் சலித்த கலவையைச் சேர்க்கவும். இறுதியாக அரைத்துவைத்த அவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் (Pan) இந்தக் கலவையை ஊற்றவும்.

180 டிகிரி சென்டிகிரேடில் பிரீஹீட் செய்யப்பட்டுள்ள அவனில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் முழுவதுமாகக் குளிர அனுமதிக்கவும். பிறகு, உங்கள் விருப்பத்துக்கேற்ப அலங்கரிக்கவும். ஆரோக்கியமான அவல் கேக் தயார்.

இளநீர் கப் கேக்

தேவை: மைதா - ஒன்றரை கப், இளநீர் அல்லது தேங்காய்த் தண்ணீர் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், பால் - கால் கப், தயிர் - அரை கப், உருக்கிய வெண்ணெய் - அரை கப்.

அலங்கரிக்க: க்ரீம், இளந்தேங்காய் துண்டுகள் - தேவைக்கேற்ப.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைக் கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து ஒன்றாகக் கலக்கவும். சர்க்கரை மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும்வரை கலக்கவும். பின்பு பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அந்தக் கலவையில் தயிர், தேங்காய்த் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக சலித்த மைதா கலவை சேர்க்கவும். இதை கப் கேக் மோல்டில் சேர்த்து, பிரீஹீட் செய்யப்பட்ட அவன் அடுப்பில், 25 முதல் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். நன்றாகக் குளிர அனுமதிக்கவும். பின்னர், மேலே க்ரீம் மற்றும் இளந்தேங்காய் துண்டுகள் சேர்த்து அலங்கரிக்கவும்.

வெற்றிலை சாக்லேட் கப் கேக்

தேவை: மைதா - ஒரு கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், எண்ணெய் - அரை கப், மீத்தா பான் - 2 (பீடா) அல்லது வெற்றிலை - ஒன்று, ரோஜா ஜாம் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒன்றேகால் டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்.

அலங்கரிக்க: க்ரீம் - தேவைக்கேற்ப

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: மீத்தா பான்/வெற்றிலையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும். ஒரு பகுதியை அரைக்கவும். மற்ற பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைக் கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து ஒன்றாகக் கலக்கவும். இன்னொரு கிண்ணத்தில் எண்ணெய், தயிர், சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை கலக்கவும். இது மிகவும் மென்மையான கலவையாக இருக்க வேண்டும். மைதா கலவையை இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் அரைத்த பான் கலவை, நறுக்கிய பான் துண்டுகள் (அல்லது அரைத்த, நறுக்கிய வெற்றிலை, ரோஜா ஜாம்) சேர்க்கவும். தயாரிக்கப்பட்ட கேக் கலவையை கப் கேக் ட்ரேயில் ஊற்றவும். 180 டிகிரி சென்டிகிரேட் சூட்டில், அவன் அடுப்பில் ட்ரேயை 30 நிமிடங்கள் வரை வைக்கவும். டூத்பிக் கொண்டு கேக் தயாராகிவிட்டதா என்று சரிபார்க்கவும். கேக் ஆறிய பிறகு க்ரீம் கொண்டு அலங்கரிக்கலாம். மிகவும் சுவையான வெற்றிலை சாக்லேட் கப் கேக் தயார்.

ஓரியோ சாக்லேட் கேக்

தேவை: மைதா மாவு - ஒன்றரை கப், கோகோ பவுடர் - முக்கால் கப், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - முக்கால் கப், பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப், தயிர் - ஒரு கப், வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன், மோர் - அரை கப், நொறுக்கப்பட்ட ஓரியோ பிஸ்கட் - அரை கப்.

அலங்கரிக்க: ஃப்ரெஷ் க்ரீம், ஓரியோ பிஸ்கட் மற்றும் பொடித்த ஒரியோ - தேவைக்கேற்ப.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். மைதா, கோகோ தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைக் கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து ஒன்றாகக் கலக்கவும். பெரிய கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும். தயிர் சேர்த்துக் கலக்கவும். பின்பு வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையில், சலித்த மைதா கலவையைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக மோரைச் சேர்த்து மென்மையான கலவையாக வரும்வரை கலந்துகொள்ளவும். பொடித்த ஓரியோவை அதில் நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பானில் (Pan) ஊற்றி, அவனில் 50 - 60 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் அல்லது ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப்பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். ஃப்ரெஷ் க்ரீம், ஓரியோ பிஸ்கட் மற்றும் பொடித்த ஓரியோவைக்கொண்டு அலங்கரிக்கவும்.

தேங்காய் சாக்லேட் கேக்

தேவை: மைதா மாவு - ஒன்றரை கப், தேங்காய் பவுடர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 கப், இனிப்பில்லாத கோகோ பவுடர் - அரை கப், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன், பால் - 2 கப், எண்ணெய் - அரை கப், உருக்கிய வெண்ணெய் - 2 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 3 டீஸ்பூன், வெள்ளை வினிகர் - 2 - 3 டீஸ்பூன், தண்ணீர் - கால் கப்.

அலங்கரிக்க: ஃப்ரெஷ் க்ரீம் - தேவைக்கேற்ப.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: 350 டிகிரி ஃபாரன்ஹீட் / 175 டிகிரி சென்டிகிரேடில் அவன் அடுப்பை பிரீஹீட் செய்யவும். மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், உப்பு, தேங்காய் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சலித்து எடுக்கவும். மற்றொரு கிண்ணத்தில், ஈரப்பதமான பொருள்களை (தண்ணீர், வெண்ணெய், எண்ணெய், பால், வினிகர் மற்றும் வெனிலா எசென்ஸ்) சேர்த்துக் கரண்டியால் நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது மெதுவாக மாவுக் கலவையை ஈரமான கலவையில் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் க்ரீமியாக கலந்துகொள்ளவும். ஒரு பேக்கிங் பான் (Pan) எடுத்து எண்ணெய், மைதா தடவவும். அதில் கேக் கலவையை ஊற்றவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவன் அடுப்பில் வைத்து, 35 - 40 நிமிடங்கள் பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப்பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். தயாரான பிறகு, 3 - 4 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கட்டும். பிறகு வெளியே எடுத்து 10 - 15 நிமிடங்கள் வரை குளிர வைக்கவும். ஃப்ரெஷ் க்ரீமை மேலே சேர்த்து, உங்கள் விருப்பத்துக்கேற்ப அலங்கரிக்கவும்.

குல்கந்து நெய்யப்பம் கப் கேக்

தேவை: நெய் - அரை கப், நறுக்கப்பட்ட முந்திரி ­- கால் கப், துருவிய தேங்காய் - அரை கப், கோதுமை மாவு - ஒன்றரை கப், அரிசி மாவு - அரை கப், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 5 (தோல் நீக்கி விதைகளைப் பொடிக்கவும்), பழுத்த வாழைப்பழம் - 3 (கூழாக மசிக்கவும்), ஃப்ரெஷ் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - ஒரு கப், குல்கந்து ஜாம் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், ரோஜா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். ஒரு சிறிய கடாயில் நெய்யைவிட்டு முந்திரி மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து வறுக்கவும். அதை ஆறவைக்கவும். ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, பொடித்த ஏலக்காய் விதைகள், உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். கூழாக்கிய வாழைப்பழத்துடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்துக் கலக்கவும். அதை வெல்லம் மற்றும் துருவிய தேங்காய் கலவையில் கலக்கவும். அதில் குல்கந்து ஜாமை நன்றாகக் கலக்கவும். ரோஸ் எசென்ஸைச் சேர்த்து, மாவுக் கலவையை மெதுவாக வாழைப்பழ கலவையில் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் சேர்த்து கெட்டியான மாவுப் பதத்தில் வரும் வரை கலக்கவும். இதை கப் கேக் மோல்டுகளில் சேர்த்து, 20 நிமிடங்களுக்கு அவனில் பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகி, அதில் கேக் கலவை ஒட்டாமல் வருகிறதா என்று பார்க்கவும். பிறகு அவனில் இருந்து வெளியே எடுத்து, ஒரு ட்ரேயில் நன்றாக ஆறவைக்கவும். இதைக் காற்றுப்புகாத கன்டெய்னரில் சேமிக்கலாம்.

குல்கந்து ப்ளம் கேக்

தேவை: பேரீச்சம்பழம் - 20 (சிறிய துண்டுகளாக வெட்டவும்), டூட்டி ஃப்ரூட்டி - முக்கால் கப், உலர்திராட்சை - கால் கப், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் - அரை கப் (எல்லாம் கலந்தது), நறுக்கப்பட்ட செர்ரி - 3 டீஸ்பூன், ஆப்பிள் சாறு அல்லது ஆரஞ்சு சாறு - ஒன்றரை கப், மைதா மாவு - இரண்டே கால் கப், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், பேக்கிங் சோடா - முக்கால் டீஸ்பூன், பட்டைத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் - ஒன்றரை கப், வெள்ளை வினிகர் - ஒன்றரை டீஸ்பூன், உருக்கிய நெய் - முக்கால் கப், பழுப்புச் சர்க்கரை - ஒன்றேகால் கப், குல்கந்து - ஒரு டீஸ்பூன், ரோஜா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் - சிறிதளவு.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளை (நட்ஸ்) ஒன்றாகச் சேர்த்து ஆப்பிள் சாறு அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து நன்கு கலந்து, முதல் நாள் இரவில் ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் பழங்கள் மற்றும் கொட்டைகள் சாற்றில் ஊறியிருக்கும். அந்தச் சாற்றை வடிகட்டி எடுத்து, ஊறிய பழங்கள், கொட்டைகளைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். கேக் பானில் (Pan) பட்டர் பேப்பர் வைத்து, வெண்ணெய் தடவி கிரீஸ் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

பெரிய கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலக்கவும். பட்டைத்தூள், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை ஒருமுறை நன்றாகச் சலித்துக்கொள்ளவும். இன்னொரு கிண்ணத்தில் பால் மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து கலந்து தனியே வைக்கவும். பால் திரிந்து வரும். அதுதான் நம் உபயோகிக்க வேண்டியது. பழுப்புச் சர்க்கரையுடன் நெய் சேர்த்து, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை கலக்கவும். ரோஜா எசென்ஸ் சேர்த்து விஸ்க் செய்யவும். பால் - வினிகர் கலவை, மைதா கலவை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். குல்கந்து மற்றும் வடிகட்டிய உலர்ந்த பழங்கள் - பருப்புகளைச் சேர்க்கவும்.

வெண்ணெய் தடவிய கேக் பானில் கேக் கலவையை ஊற்றவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவன் அடுப்பில் 60-65 நிமிடங்கள் வரை 350 டிகிரி ஃபாரன்ஹீட்டில் பேக் செய்யவும். 30-35 நிமிடங்களுக்குப் பிறகு, கேக்கின் மேல் பகுதியை அலுமினியத்தாள் கொண்டு மூடிவிடலாம். தயாரான பிறகு, அடுப்பிலிருந்து கவனமாக கேக்கை அகற்றவும். 5-10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ட்ரேயில் கேக் வைக்கவும். கேக் முற்றிலும் குளிரட்டும். அதைப் புத்தம் புதிய ரோஜா இதழ்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

நுங்கு கேக்

தேவை: மைதா - ஒன்றரை கப், நுங்குக்கூழ் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், பால் - கால் கப், தயிர் - அரை கப், உருக்கிய வெண்ணெய் - அரை கப். அலங்காரம் செய்ய: ஃப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைக் கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து ஒன்றாகக் கலக்கவும். சர்க்கரை மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் தயிர் மற்றும் நுங்குக்கூழ் சேர்த்து நன்றாகக் கலந்து (கலவை தடிமனாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்). இறுதியாக, சலித்த மைதா கலவை சேர்க்கவும். கலவையை வெண்ணெய் தடவிய பானில் (Pan) ஊற்றி, 25 முதல் 30 நிமிடங்கள் வரை 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும். கேக்கை முழுவதுமாகக் குளிர அனுமதிக்கவும். ஃப்ரெஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும். சுவையான, ஆரோக்கியமான நுங்கு கேக் தயார்.

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக்

தேவை: மைதா - ஒரு கப், வெண்ணெய் - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பால் - 60 மில்லி, கோகோ பவுடர் - அரை டீஸ்பூன், சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன், ஸ்ட்ராபெர்ரி சாஸ் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - தேவைக்கேற்ப.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: கேக் பானில் (Pan) வெண்ணெய் தடவி தனியே வைத்துக்கொள்ளவும். கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும். பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மைதா, பேக்கிங் பவுடரை ஒன்றாகச் சேர்த்து, வெண்ணெய்க் கலவையுடன் மெதுவாகக் கலந்து மென்மையான கலவை வரும் வரை விஸ்க் செய்யவும். வெண்ணெய்க் கலவையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும். ஒரு பகுதியுடன் கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் சாஸ் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் க்ரீமியாக வரும் வரை கலக்கவும். மற்ற பகுதியில் ஸ்ட்ராபெர்ரி சாஸ் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் க்ரீமியாக வரும் வரை கலந்து தனியே வைக்கவும். இப்போது சாக்லேட் கலவையை கேக் பானில் ஊற்றவும். சாக்லேட் கலவை மீது ஸ்ட்ராபெர்ரி கலவையை ஊற்றி, நன்றாகப் பரப்பிவிடவும். அதை பிரீஹீட் செய்யப்பட்ட அவன் அடுப்பில் 45 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப் பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும் வரை பேக் செய்யவும். அவனில் இருந்து கேக்கை நீக்கி அதைக் குளிர அனுமதிக்கவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, உங்கள் விருப்பப்படி கேக்கை அலங்கரிக்கவும். சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக் தயார்.

ராகி சாக்லேட் கப் கேக்

தேவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், கோகோ பவுடர் - அரை கப், பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தூள் வெல்லம் - முக்கால் கப், பழுத்த வாழைப்பழம் - 3, எண்ணெய் - கால் கப், பால் - கால் கப், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், டார்க் சாக்லேட் சிப்ஸ் - 3 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - தேவைக்கேற்ப, வெள்ளை சாக்லேட் சிப்ஸ் - 2 டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: 180 டிகிரி சென்டிகிரேட் அல்லது 350 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அவன் அடுப்பை பிரீஹீட் செய்து வைக்கவும். எண்ணெய் தடவி கப் கேக் அச்சை க்ரீஸ் செய்து தயார்செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துவைக்கவும். மிக்ஸியில் வாழைப்பழம், பால் மற்றும் வெல்லம் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் அரைத்த கலவை கூழ், எண்ணெய், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உலர்ந்த மாவுக் கலவையைச் சிறிது சிறிதாக பழக்கூழ் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். டார்க் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து மீண்டும் கலக்கவும். கிரீஸ் செய்து வைக்கப்பட்ட கப் கேக் அச்சுகளில் ஊற்றவும். 35 முதல் 40 நிமிடங்கள் வரை அவனில் பேக் செய்யவும். அடுப்பிலிருந்து கப் கேக் அச்சுகளை எடுத்து ஆறவைக்கவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அலங்கரித்து, அதன் மேல் வெள்ளை சாக்லேட் சிப்ஸ் தூவவும். ராகி சாக்லேட் கப் கேக் சுவைத்து மகிழ தயார்.

காபி பிரவுனீஸ்

தேவை: மைதா மாவு - ஒரு கப், இனிப்பில்லாத கோகோ பவுடர் - கால் கப், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், வெள்ளை சாக்லேட் - 90 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), டார்க் சாக்லேட் - 90 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), இன்ஸ்டன்ட் காபித்தூள் - ஒரு டீஸ்பூன், சூடான பால் - 1/3 கப், தயிர் - அரை கப், எண்ணெய் - கால் கப், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவனை 150 டிகிரி சென்டிகிரேடில் பிரீஹீட் செய்யவும். 1/3 கப் பாலில் இன்ஸ்டன்ட் காபித்தூளைக் கலந்து, கரைத்துக்கொண்டு, தனியாக எடுத்து வைக்கவும். பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் பேப்பர் வைக்கவும். ஒரு கிண்ணத்தில், மைதா மாவு, பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். உலர்ந்த கலவையின் மையத்தில் சிறிய குழியை உருவாக்கவும். காபி, வெனிலா எசென்ஸ், தயிர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பாதியை பேக்கிங் ட்ரேயில் ஊற்றவும். வெள்ளை சாக்லேட் துண்டுகளை அதன் மேல் தூவவும். மீதமுள்ள கலவையில் டார்க் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து, ட்ரேயில் ஊற்றவும். தட்டைக் கரண்டியை (Spatula) உபயோகித்து ட்ரேயில் கலவையைச் சமமாக இருக்குமாறு பரப்பவும். அவனில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். தயாராகிவிட்டதா என்று பார்க்க, கலவையில் ஒரு டூத்பிக் செருகவும்; மாவு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வர வேண்டும். தயாராகிவிட்டால், ஐந்து நிமிடங்கள் கழித்து அவனில் இருந்து வெளியே எடுத்து ஒரு மணி நேரம் ஆறவிடவும். சுவையான காபி பிரவுனீஸ் தயார்.

மோச்சா பிரவுனீஸ்

தேவை: வெண்ணெய் - 7 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மைதா மாவு -­ முக்கால் கப், கோகோ பவுடர் - 2/3 கப், பேக்கிங் பவுடர் - ஒன்றேகால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், கிரானுலேட்டட் சர்க்கரை - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபித்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசென்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், தயிர் - அரை கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். கேக் பானில் (Pan) அலுமினியத்தாள் வைத்து சிறிதளவு வெண்ணெய் தடவி கிரீஸ் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு, இன்ஸ்டன்ட் காபித்தூள் எல்லாம் கலந்து, சல்லடையில் சலித்து, ஒன்றாகக் கலக்கவும். வெண்ணெயை உருக்கி, ஆற வைத்துக்கொள்ளவும். வெண்ணெய் குளிர்ந்தபின், எண்ணெய், கால் கப் தயிர் மற்றும் அரை கப் சர்க்கரை சேர்த்துக் கலந்து, பின்னர் மீதமுள்ள கால் கப் தயிர், அரை கப் சர்க்கரை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையில் மைதா கலவையைச் சேர்க்கவும். இது மிகவும் திக்காக இருக்கும்.

கலவையைத் தயாரித்து வைக்கப்பட்ட பானில் ஊற்றி, தட்டைக் கரண்டி (Spatula) அல்லது கரண்டியை வைத்து பான் முழுவதும் பரப்பிவிடவும். கரண்டி மாவில் ஒட்டிக்கொண்டால், நான்-ஸ்டிக் ஸ்ப்ரேயரை கரண்டியில் ஸ்ப்ரே செய்துகொள்ளுங்கள். 30-35 நிமிடங்கள் வரை 350 டிகிரி ஃபாரன்ஹீட்டில் பேக் செய்யவும். கேக்கை அவன் அடுப்பில் இருந்து அகற்றி, முழுமையாகக் குளிர அனுமதிக்கவும். துண்டுகளாக வெட்டுவதற்கு 1 - 2 மணி நேரத் துக்கு முன் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். சுவையான மோச்சா பிரவுனீஸ் தயார்.

கேரட் பிரவுனீஸ்

தேவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், மைதா - அரை கப், கோகோ பவுடர் - 3 டீஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், பட்டைத்தூள் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், துருவிய கேரட் - ஒரு கப், தயிர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு கப், பால் - ஒரு கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். கேக் பானில் (Pan) வெண்ணெய் தடவி கிரீஸ் செய்து மேலே கொஞ்சம் மாவைத் தூவி வைத்துக்கொள்ளுங்கள். கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் கேரட் துருவலைக் கிண்ணத்தில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அதில் பட்டைத்தூள் மற்றும் கோகோ பவுடர் கலக்கவும். வேறொரு கிண்ணத்தில் சர்க்கரை, பால், தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும்வரை கலக்கவும். மேலே கூறியிருக்கும் ஈரப்பதமான கலவையை மைதா - கேரட் கலவையுடன் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

தயாரிக்கப்பட்ட கேரட் கலவையை கிரீஸ் செய்து வைக்கப்பட்டுள்ள பானில் ஊற்றி, 35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் அல்லது ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப் பார்த்து, அது கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். ஆறவைத்து, சதுர வடிவ துண்டுகளாக்கவும். ஆரோக்கியமான சுவையான கேரட் பிரவுனீஸ் தயார்.

ரோஸ் பிரவுனீஸ்

தேவை: மைதா மாவு - ஒரு கப், முந்திரி (சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்டது) - கால் கப், ரோஜா எசென்ஸ் - 2 டீஸ்பூன், தயிர் - அரை கப், தண்ணீர் - கால் கப், எண்ணெய் - 1/3 கப், சர்க்கரை - 2/3 கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைக் கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து ஒன்றாகக் கலக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து எண்ணெய், சர்க்கரை, தயிர், தண்ணீர், ரோஜா எசென்ஸ் எல்லாம் கலந்து ஒரு மென்மையான கலவையாக உருவாக்கிக்கொள்ளவும். இதனுடன் மைதா கலவை, முந்திரி சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். கேக் கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் (Pan) ஊற்றி 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப்பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். அடுப்பிலிருந்து கேக்கை நீக்கி, 10-15 நிமிடங்களுக்கு ஆறவிடவும். ரோஜா பிரவுனீஸ் தயார்.

நன்னாரி எலுமிச்சை சீஸ் கேக்

தேவை - க்ரஸ்ட் செய்ய: டைஜஸ்டிவ் பிஸ்கட் - 200 கிராம், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உருக்கிய வெண்ணெய் - 2 டீஸ்பூன்.

சீஸ் கேக் ஃபில்லிங் செய்ய: க்ரீம் சீஸ் - 400 கிராம், சர்க்கரை - ஒரு கப், ஹங் தயிர் - ஒரு கப் (துணியில் கட்டி தொங்கவிட்டு நீர் வடிக்கப்பட்டது), ஹெவி க்ரீம் - ஒரு கப், எலுமிச்சைச்சாறு - 4 டீஸ்பூன், நன்னாரி சிரப் - 6 டீஸ்பூன், எலுமிச்சைத்தோல் துருவல் (Lemon Zest) - ஒரு டீஸ்பூன்.

லெமன் க்ளேஸ் / சாஸ் செய்ய: சர்க்கரை - 3 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - அரை கப், எலுமிச்சைச்சாறு - 4 டீஸ்பூன், நன்னாரி சிரப் - 6 டீஸ்பூன், எலுமிச்சைத்தோல் துருவல் - அரை டீஸ்பூன், மஞ்சள்நிற எசென்ஸ் - 2 முதல் 3 சொட்டு

எக்லெஸ் கேக் ரெசிப்பி

க்ரஸ்ட் செய்முறை: 9 இன்ச் கேக் பானை (Pan) வெண்ணெய் தடவி கிரீஸ் செய்துகொள்ளவும். பிஸ்கட், சர்க்கரை மற்றும் வெண்ணெயைக் கலந்துகொள்ளவும்.பான் உள்ளே பிஸ்கட் கலவையைப் பரப்பி கரண்டியால் நன்கு அழுத்தவும். சீஸ் கேக் ஃபில்லிங் தயாராகும் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

சீஸ் கேக் ஃபில்லிங் செய்முறை: சர்க்கரை மற்றும் க்ரீம் சீஸ் சேர்த்து, மிக்ஸியில் குறைவான வேகத்தில், கட்டிகள் இல்லாமல் மென்மையாக ஆகும் வரை, க்ரீமியாக வரும்வரை கலந்துகொள்ளவும். ஹங் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது ஹெவி க்ரீம் சேர்க்கவும். எலுமிச்சைச்சாறு, நன்னாரி சிரப், எலுமிச்சைத் தோல் துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து, குறைவான வேகத்தில் மிக்ஸியில் அடித்து, எல்லா பொருள்களும் நன்றாக ஒருங்கிணைக்கப்படும் வரை கலக்கவும். க்ரஸ்ட் செய்து வைத்த பானை ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கவும். க்ரீம் கலவையைப் போட்டு நிரப்பவும். நான்கு மணி நேரம் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

லெமன் க்ளேஸ் / சாஸ் செய்முறை: அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து, சர்க்கரை மற்றும் சோள மாவு சேர்த்து, தண்ணீரைச் சேர்த்து மென்மையான, தடிமனான கலவையாக வரும்வரை கொதிக்கவைத்துத் தொடர்ச்சியாகக் கிளறவும். மஞ்சள்நிற எசென்ஸ் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்களுக்கு சமைக்கவும். அடுப்பை அணைக்கவும். அதை முழுமையாக ஆற வைக்கவும். எலுமிச்சைத்தோல் துருவல், நன்னாரி சிரப் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையை நன்றாக ஆறவைத்து, கெட்டியாக மாறும்முன் சீஸ் கேக் மேல் ஊற்றவும். நான்கு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் குளிர்விக்கலாம். பரிமாறத் தயாராக இருக்கும்போது கேக் பானிலிருந்து நீக்கலாம். விருப்பமான அளவில் துண்டுகளாக்கிப் பரிமாறலாம். மிகவும் சுவையான, பேக் செய்ய அவசியம் இல்லாத நன்னாரி எலுமிச்சை சீஸ் கேக் தயார்.

பீநட் பட்டர் கேக்

தேவை: பால் - ஒன்றரை கப், சர்க்கரை - முக்கால் கப், தேன் - 2 டீஸ்பூன், ரோஜா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், மென்மையான பீநட் பட்டர் - அரை கப், முழு கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒரு கப், உப்பு - கால் டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்.

க்ளேசிங் செய்ய (பளபளப்பான மேற்புற கலவை): குறைவான இனிப்புள்ள சாக்லேட் - அரை கப், டார்க் சாக்லேட் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - கால் கப், மென்மையான பீநட் பட்டர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். பேக்கிங் பானில் (Pan) வெண்ணெய் தடவி கிரீஸ் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் பால், சர்க்கரை, தேன் சேர்த்துக் கலவையாக்கி, பீநட் பட்டர், ரோஜா எசென்ஸ் மற்றும் எண்ணெயைக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொண்டு, மேலே கூறியுள்ள கலவையில் சேர்க்கவும். மென்மையான கலவையாக வரும் வரை நன்றாகக் கலக்கவும். தயார் செய்து வைக்கப்பட்டுள்ள பேக்கிங் பானில் ஊற்றவும். 21 முதல் 24 நிமிடங்கள் வரை அவன் அடுப்பில் பேக் செய்து எடுக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, அவனில் இருந்து எடுத்து, பின்னர் 15 நிமிடங்கள் வெளியே வைத்து ஆறவைக்கவும்

கிளேஸ் செய்ய: ஒரு பாத்திரத்தில் சாக்லேட், எண்ணெய் மற்றும் பால், சர்க்கரை சேர்த்து, குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். சாக்லேட் உருகும் வரை ஒரு கரண்டியால் கலந்துகொண்டே இருக்கவும். உருகிய பிறகு, அடுப்பில் இருந்து நீக்கி, வெதுவெதுப்பான கலவையில் பீநட் பட்டர் சேர்க்கவும். மென்மையான கலவையாக ஆகும் வரை கலக்கவும். இது கலக்க ஒரு நிமிடம் எடுக்கும். இந்தக் கலவையை கேக் மீது ஊற்றவும், தட்டைக் கரண்டி (Spatula) பயன்படுத்தி கேக் முழுவதும் பரப்பிவிடவும். அற்புதமான பீநட் பட்டர் கேக் தயார்

லெமன் கேக்

தேவை: எண்ணெய் - அரை கப், கிரானுலேட்டட் சர்க்கரை - ஒன்றரை கப், மைதா மாவு - 1 - 1/8 கப், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன், பால் - ஒரு கப், எலுமிச்சை எசென்ஸ் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன், எலுமிச்சைத்தோல் துருவல் (Lemon Zest) - ஒரு எலுமிச்சையின் தோல், துண்டுகளாக வெட்டப்பட்ட பழங்கள் - கால் கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 200 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் பால், எலுமிச்சை எசென்ஸ், எலுமிச்சைச்சாறு, எலுமிச்சைத்தோல் துருவல் மற்றும் எண்ணெய் சேர்த்து மென்மையான கலவையாகக் கலந்துகொள்ளவும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையைத் தனி கிண்ணத்தில் கலந்துகொள்ளவும். இரண்டு கலவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பழத்துண்டுகள் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய கேக் பானில் (Pan) கேக் கலவையை ஊற்றவும். 15 - 20 நிமிடங்கள் வரை அவனில் வைத்து பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கைக் கேக்கில் செருகிப்பார்த்து, அதில் கேக் கலவை ஒட்டாமல் வரும்வரை பேக் செய்யவும். பிறகு ஆறவைத்து, கேக் முற்றிலும் குளிர்ந்த பிறகு, உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும்.

ஆரஞ்சு கேக்

தேவை: மைதா - 1 - 2/3 கப், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 1/3 கப், பேக்கிங் பவுடர் - இரண்டேகால் டீஸ்பூன், கிரானுலேட்டட் சர்க்கரை - 2/3 கப், பால் - அரை கப், ஆப்பிள் சைடர் வினிகர் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை கப், ஆரஞ்சு எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் ஆரஞ்சு சாறு - கால் கப், ஆரஞ்சு தோல் துருவல் - ஒரு ஆரஞ்சின் தோல், பாதாம்பருப்பு அல்லது முந்திரிப்பருப்பு - அரை கப்.

ஐசிங் செய்ய: ஃப்ரெஷ் ஆரஞ்சு சாறு - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - ஒரு கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: அவன் அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்து வைக்கவும். ஏழரை இன்ச் சதுர வடிவ கேக் டின்னை எடுத்து வெண்ணெய் தடவி கிரீஸ் செய்துகொள்ளவும். மைதா, கார்ன்ஃப்ளார், பேக்கிங் பவுடரை கிண்ணத்தில் கலந்து, சல்லடையில் சலித்து, ஒன்றாகக் கலக்கவும். சர்க்கரை மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பால், வினிகர், ஆரஞ்சு எசென்ஸ், ஆரஞ்சு தோல் துருவல் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்த்து மென்மையாகப் பஞ்சு போல வரும் வரை அடித்துக்கொள்ளவும். மாவுக் கலவையை பால் கலவையுடன் சேர்த்து நறுக்கப்பட்ட பருப்புகள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தயாராக உள்ள கேக் டின்னில் இந்தக் கலவையை ஊற்றவும். 25 -30 நிமிடங்கள் அவனில் பேக் செய்துகொள்ளவும். கேக் பிரவுன் நிறமாக மாறினால், அதைத் தவிர்ப்பதற்கு, மேல் பரப்பில் ஒரு அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடிவைக்கவும். கேக் டின்னில் இருந்து எடுத்து, வேறொரு தட்டில் வைத்து ஆறவைக்கவும். அதை முழுவதுமாகக் குளிர அனுமதிக்கவும்.

பொடித்த சர்க்கரை மற்றும் ஆரஞ்சு சாற்றுடன் ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து கேக் முழுவதும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றது போல அலங்கரிக்கவும்.

கேக் பாப்ஸ்

தேவை: ஆறு அங்குல எக்லெஸ் கேக் – ஒன்று, டார்க் சாக்லேட் அல்லது வெள்ளை சாக்லேட் துண்டுகள் - ஒரு கப்.

அலங்கரிக்க: வண்ணமயமான சர்க்கரை மிட்டாய்கள் (colour sprinkles) - தேவைக்கேற்ப.

ஃப்ராஸ்டிங் செய்ய: வெண்ணெய் - கால் கப், பொடித்த சர்க்கரை 2, வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: கேக்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். டபுள் பாய்லிங் முறையில் (இரட்டை கொதிகலத்தில்) சாக்லேட்டை உருக்கவும்.

ஃப்ராஸ்டிங் செய்ய: வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரை ஆகியவற்றை க்ரீம் போல மென்மையாக ஆகும் வரை நன்கு கலக்கவும். வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். உருகிய சாக்லேட்டை அடுப்பிலிருந்து எடுத்து, வெப்பம் குறையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். நீங்கள் வெள்ளை சாக்லேட் உபயோகித்தால், உங்கள் விருப்பப்படி நிறத்தைச் சேர்க்கவும் (ஜெல் கலர்களைச் சேர்க்க வேண்டும்). ஒரு கிண்ணத்தில் நொறுக்கப்பட்ட கேக் துண்டுகளை எடுத்து, ஃப்ராஸ்ட்டிங் வெண்ணெய் கலவை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். கைகளை ஈரப்படுத்திக்கொண்டு, கேக் கலவையை எட்டு சம பாகங் களாகப் பிரிக்கவும். பந்துகளாக அவற்றை வடிவமைக்கவும். 10-15 நிமிடங்களுக்கு ஃப்ரீசரில் வைக்க வும். கேக் பாப்களை உருகிய சாக் லேட்டில் நனைத்து, முழுவதுமாய் சாக்லேட் கோட்டிங் செய்யவும். மேலே வண்ணமயமான சர்க்கரை மிட்டாய் களைத் தூவி அலங்கரிக்கவும் மீண்டும் 10-15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்றாகக் குளிர்ந்த பிறகு பரிமாறவும். அற்புதமான கேக் பாப்ஸ் தயார்.

கரும்புச்சாறு கப் கேக்

தேவை: கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், வெண்ணெய் - அரை கப், கரும்புச் சாறு - முக்கால் கப், வினிகர் - ஒரு டீஸ்பூன், இஞ்சிச்சாறு - ஒரு டீஸ்பூன், மைதா - ஒன்றேகால் கப், பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், டூட்டி ஃப்ரூட்டி - கால் கப்.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

செய்முறை: மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை ஒன்றாகக் கலந்து சலிக்கவும். வெண்ணெயை மென்மையாகும் வரை நன்றாகக் கலந்துகொள்ளவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த வெண்ணெய்க் கலவையில் கரும்புச்சாறு மற்றும் வினிகரைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சலித்த மாவு கலவையைச் சேர்த்து ஒரு கரண்டியால் மென்மையாகக் கலந்துவிடவும். இக்கலவையுடன் டூட்டி ஃப்ரூட்டியைக் கலந்துகொள்ளவும். மாவுக் கலவையை கப் கேக் மோல்டில் ஊற்றி, பிரீஹீட் செய்யப்பட்ட அவன் அடுப்பில் 20 - 25 நிமிடங்கள் 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும். கரும்புச்சாறு கப் கேக் தயார்.

ஜெம்ஸ் கேக்

தேவை: வெண்ணெய் - கால் கப், சர்க்கரை - கால் கப், கோகோ பவுடர் - அரை கப், ஆட்டா (கோதுமை மாவு) - ஒன்றரை கப், பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை, பால் - முக்கால் கப், ஜெம்ஸ் - அரை கப்.

கேக் அலங்காரம் செய்ய: ஃப்ரெஷ் க்ரீம், ஜெம்ஸ் - தேவைக்கேற்ப.

ஜெம்ஸ் கேக்
ஜெம்ஸ் கேக்

செய்முறை: 15 நிமிடங்களுக்கு அவனை பிரீஹீட் செய்யவும். வெண்ணெய் மற்றும் சர்க்கரையை நன்றாக மென்மையாகும் வரை கலந்துகொள்ளவும் இதனுடன் பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சலித்த கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை வெண்ணெய் கலவையுடன் நன்றாகக் கலந்துகொள்ளவும். இதனுடன் ஜெம்ஸ் மிட்டாய்களைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை, கேக் டின்னில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் சூடு ஆறிய பின் ஃப்ரெஷ் க்ரீம், ஜெம்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

வாவ்... வகை வகையான கேக்குகள்!

ஞ்சு போன்ற மென்மையான கேக்கைப் பிய்த்து வாயில் போட்டு, அது கரையும்போது கிடைக்கும் சுவை அனுபவமே அலாதிதான்! பேக்கரி மற்றும் கேக் ஷாப்களில் கேக் வாங்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டிக் கொண்டாடுவதும் பரவலாகிவிட்டது.

எக்லெஸ் கேக் ரெசிப்பி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கிவரும் நேரம் இது. Sachu’s Kitchen முகநூல் பக்கத்தை நிர்வகிக்கும் கேரளாவின் திருச்சூரில் வசிக்கும் டாக்டர் சரஸ்வதி விஸ்வநாதன், அவள் விகடன் வாசகர்களுக்கென எக்லெஸ் கேக் ரெசிப்பிகளை வழங்குகிறார்.

மசாலா டீ பிரவுனீஸ், குலாப் ஜாமூன் கப் கேக், இளநீர் கப் கேக், பட்டர்ஸ்காட்ச் பொரி கேக், சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக், குல்கந்து நெய்யப்பம் கப் கேக் என இங்கு வரிசைகட்டி நிற்கும் கேக் வகைகளை தயாரித்துப் பரிமாறினால், சுவைப்பவர்கள் `வாவ்’ சொல்வார்கள். குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் உங்களைப் பார்த்தாலே `கேக் கேக்' எனக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்!