
சொந்த ஊர் கோவைதான். தலைமுறையா தங்கம் சம்பந்தப்பட்ட வேலைதான் எங்களுக்குத் தொழில். குடும்பச் சூழல் காரணமா ஏழாவது வரைக்கும்தான் படிச்சேன்.
புற்றீசல் போல சாலைகள்தோறும் உணவகங்கள்... பெரிய பெரிய ஹைஃபை உணவகங்களுக்கு ஈடாகத் தட்டுக்கடைகள்!
எங்கே... கல்வி, தொழில் உற்பத்தி, மருத்துவம், ஐ.டி என்று வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் கோவையில்தான்.
காந்தி பார்க், பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள ‘BYU’ தட்டுக்கடையின் டிரெண்டிங் உணவுகள்... கோவை மக்களிடம் பயங்கர வைரல். இட்லி ஃப்ரை, தோசை ஃப்ரை, பன் ஃப்ரை, ஷவர்மா தோசை என இவர்களின் கடையில் கிடைக்கும் புதுவித உணவுகளுக்குப் பல நூறு கிலோ மீட்டரையும் தாண்டி ‘ருசிகர்’ கூட்டம் உண்டு. செம ட்ரெண்டிங் பாஸ்புட் உணவுகளாக இருந்தாலும், வீட்டுச் சுவையை முன்னிறுத்துவதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி!

வியாபாரம் பரபரப்பாக இருந்த மாலை நேரமொன்றில் அந்தத் தட்டுக் கடைக்குச் சென்றோம். வாடிக்கையாளர்களிடம் உணவுக்கான ஆர்டர்களை எடுத்துவிட்டு, நம்மிடம் பேசத் தொடங்கினார், உரிமையாளர் விஸ்வநாதன். “சொந்த ஊர் கோவைதான். தலைமுறையா தங்கம் சம்பந்தப்பட்ட வேலைதான் எங்களுக்குத் தொழில். குடும்பச் சூழல் காரணமா ஏழாவது வரைக்கும்தான் படிச்சேன். அப்புறம் தங்கப்பட்டறையில வேலை செய்யத் தொடங்கிட்டேன். நல்ல அனுபவம் கிடைச்ச பிறகு, தனியா தங்கப்பட்டறை தொடங்கினேன். பல காரணங்களால அதைத் தொடர முடியல. வேற ஏதாவது செய்யலாம்னு யோசிச்சப்பதான், எங்க வீட்டுல நல்லா சமைக்கற விஷயம் மனசுக்குள்ள வந்துபோச்சு. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப்னு எதுல பார்த்தாலும் சாப்பாடு சம்பந்தபட்ட விஷயங்களாவே பேசிட்டிருக்கிறதையும் கணக்குப் போட்டு, உணவுத்துறையில் இறங்க முடிவு செய்தேன்.

ஐம்பதாயிரம் ரூபா கடன் வாங்கி, 2017-ம் வருஷம் தள்ளுவண்டியில சின்ன அளவுல கடையைத் தொடங்கினேன். ‘BYU'ன்னு கடைக்குப் பேர் வெச்சேன். BY U உங்களால்... உங்களுக்காக... எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். முடிஞ்சவரை வித்தியாசமான உணவுகளைக் கொடுக்கணும்கிறதுல உறுதியா இருக்கேன். காளான், பொடி, பட்டர், பூண்டு உள்ளிட்ட 10 வகை தோசைகளைக் கொடுத்தோம். ஏராளமான வகையில சேவைகளையும் கொடுத்தோம்... நல்ல வரவேற்பு கிடைச்சது!
முதல்நாள் அனுபவத்தை மறக்க முடியாது. ரெண்டாயிரம் ரூபாயை முதலீடு போட்டு சமைச்சிட்டோம். கடை நடத்த அனுமதியெல்லாம் வாங்கணும்கிற விஷயம் அப்ப தெரியாது. கொஞ்ச நேரத்துலயே போலீஸ்காரங்க வந்து, ‘அனுமதியில்லாம கடை நடத்தக்கூடாது'ன்னு சொல்லிட்டாங்க. பிறகு, அனுமதி வாங்கிக் கடையைத் திறக்கறதுக்கு ரெண்டு மாசமாகிப்போச்சு.
ஆரம்பத்துல சிறுதானிய உணவுகளை அறிமுகப்படுத்தினப்ப பெருசா வரவேற்பு இல்ல. காலத்துக்குத் தகுந்தமாதிரி டிரெண்டிங்காக யோசிக்கத் தொடங்கினோம். இட்லியை எடுக்கும்போது சில உடையும். அதை வீணாக்காம... தோசைக்கல்லுல போட்டு, தக்காளி, வெங்காயம், வெண்ணெய், இட்லி மிளகாய்ப் பொடி, தக்காளிப் பொடி கலந்துகொடுத்தோம். முட்டை கலந்தும், கலக்காமலும் இரு சுவைகளில் கொடுத்தப்ப... நல்ல வரவேற்பு. பன் ஃப்ரை முயற்சி செய்தோம். சாதாரண பன்னை பிய்ச்சிப் போட்டு, தக்காளி, வெங்காயம், வெண்ணெய், இட்லி மிளகாய்ப் பொடி, தக்காளிப் பொடி, மையோனிஸ் கலந்து செய்து பார்த்தோம். நல்ல சுவையாக வந்தது. இட்லி ஃப்ரைக்கு பயங்கர டிமாண்ட் ஏற்பட்டுச்சு. அதைச் சமாளிக்க தோசை ஃப்ரை செய்து கொடுத்தோம்.

ஷவர்மா ட்ரெண்டிங்கா இருந்த சமயம், ‘ஷவர்மா தோசை’ முயற்சி செய்தோம். வெங்காயம், தக்காளி, காளான், குடமிளகாய், மையோனிஸ் எல்லாம் கலந்து கொடுத்தோம். இதிலும் முட்டை, முட்டை இல்லாமன்னு ரெண்டு வகையா கொடுக்கிறோம்’’ என்று விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கும்போதே, சுடச்சுட ஷவர்மா தோசையும், பன் ஃப்ரையும் நம் டேபிளில் வந்திறங்கின. டிரெண்டிங்கான சுவையுடன் வித்தியாசமான உணர்வைக் கொடுத்தன இரண்டும்.
நாம் சுவைப்பதை ரசித்தபடியே தொடர்ந்த விஸ்வநாதன், ‘‘இப்போ தோசையில் 20 வகை, சேவையில் 15 வகை, பரோட்டாவில் 7 வகை கொடுத்திட்டிருக்கோம். இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் என்ன வகையான சுவையைச் சேர்க்கச் சொல்றாங்களோ... அதையும் செய்துகொடுக்கிறோம். ‘எங்க வாடிக்கையாளர் வீட்டுக்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரி ஒருத்தர் வந்திருந்தார். அவருக்காகச் சிறப்பு உணவு செய்து கேட்டாங்க. கொத்துச் சப்பாத்தி, பன் ஃப்ரை, பட்டர் வெஜிடபிள் ஊத்தாப்பம் எல்லாம் செய்துகொடுத்தோம். சாப்பிட்டுப் பார்த்துட்டு, ‘வீட்டுச் சாப்பாடுபோல சிறப்பா இருக்கு’ன்னு பாராட்டினார் அந்த அதிகாரி. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ இவங்க அலுவலகங்களுக்கு பார்சல் வாங்கிட்டுப் போவாங்க. விஜய் சேதுபதி இங்கு வந்திருந்தப்ப, அவருக்காக பார்சல் வாங்கிட்டுப் போனாங்க.''
- தங்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விஷயங்களைப் பகிர்ந்த விஸ்வநாதன், நிறைவாக...
‘‘இது ஒரு குடும்பத் தொழில்தான். இப்போதும் மாஸ்டர் மட்டும்தான் வெளியாள். மற்றபடி அம்மா, மனைவி, அக்கா உட்பட உறவுக்காரங்க எல்லாரும் வேலைகளைப் பிரிச்சுக்கிட்டு, பொறுப்போட செய்றோம். தினசரி சுமார் 15,000 ரூபாய்க்கு வியாபாரம் ஆகுது. மக்களோட வயித்துக்கு எந்தத் தொந்தரவும் இல்லாத நல்ல உணவுகளைக் கொடுக்கணும்கிறதுல உறுதியா இருக்கோம். அதைக் காப்பாத்த கடைசிவரை முயல்வோம்” என்றார் உறுதியான குரலில்.