லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 39 - இறுகிப்போன மைசூர்பாகு... வெடிக்காத சீடை... உப்பாத தட்டை...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

சீடை வெடிப்பதற்கு அதன் பக்குவம்தான் முக்கிய காரணம். சீடை செய்யும்போது மாவுடன் எண்ணெயைச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

தீபாவளி பலகாரங்கள்.... வாசகியர் சந்தேகங்கள்... விளக்குகிறார் சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்

சில நேரங்களில் மைசூர்பாகு செய்யும்போது இறுகி கெட்டி ஆகிவிடுகிறது. அதை என்ன செய்யலாம்?

- ராஜாத்தி, கோயம்புத்தூர்-39

மைசூர்பாகு கெட்டியாகி விட்டாலோ அல்லது உதிர்ந்து பொடிப்பொடியாகி விட்டாலோ மிக்ஸியில் போட்டு பவுடர் போல நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பவுடராக அரைத்து வைத்த மைசூர்பாகுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வீட்டில் இனிப்பு சேர்க்காத கோவா இருந்தால் இதனுடன் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே மைசூர்பாகு செய்யும்போது அதிக நெய் பயன்படுத்தி இருப்பதால் இப்போது நெய் சேர்க்கக்கூடாது. நெய்க்கு பதிலாக சிறிது பாலைத் தெளித்து உருண்டையாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இதை லட்டு போல செய்து அனைவருக்கும் கொடுக்கலாம்.

தட்டை பொரிக்கும்போது எண்ணெயில் போட்டதும் உப்பிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

- சாந்தி, பெரம்பலூர்

தட்டை மாவை சிறு உருண்டைகளாக எடுத்து நீரை நன்கு உறிஞ்சும் சுத்தமான வெள்ளைத் துணியில் மெலிதாகத் தட்ட வேண்டும். இவ்வாறு தட்டும்போது மாவில் அதிக தண்ணீர் இருந்தால், அந்தத் துணி தண்ணீரை உறிஞ்சி தட்டை உப்பாமல் வரும். மேலும் கடலைப்பருப்பு, எள், வெள்ளரி விதை, மிளகாய்த்தூள், சீரகம் ஆகிவற்றையும் தட்டை மாவுடன் சேர்த்தால் சுவை அதிகரிக்கும் என்பது கூடுதல் டிப்ஸ்.

சமையல் சந்தேகங்கள் - 39 - இறுகிப்போன மைசூர்பாகு... வெடிக்காத சீடை... உப்பாத தட்டை...

கடை சுவையில் காஜு கத்லி செய்ய டிப்ஸ் ப்ளீஸ்...

- ஜெனிஃபர், திருப்பத்தூர் - 53

காஜு கத்லி செய்ய முதலில் முந்திரியை நன்றாக வெயிலில் உலரவைக்கவும். முந்திரியை வெயிலில் உலரவைத்த சூட்டிலே சிறிது சிறிதாக மிக்ஸியில் போட்டு, விட்டுவிட்டு அரைத்துக்கொள்ளவு. பாதாம் கத்லி செய்ய பாதாமை நன்றாக ஊறவைத்து தோலை உரித்துக்கொள்ளவும். அதை இரவு முழுவதும் உலர்த்தி, மீண்டும் வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். மேலும் பாதாமை லேசாக வாணலியில் வறுத்து எடுத்து மிக்சியில் அரைத்தால் சுவை கூடும்.

கத்லிக்கு பாகு செய்ய ஒரு கப் பவுடருக்கு முக்கால் கப் சர்க்கரை மற்றும் சிறிது நீர் எடுத்துக்கொள்ளவும். சர்க் கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தால் கருப்பட்டியை மெலிதாக சீவிக்கொள்ளவும். பாகு ஒரு கம்பிப்பதத்துக்கு வந்த பிறகு முந்திரி அல்லது பாதாம் பவுடரை சேர்க்கவும்.இப்போது நெய் சேர்க்கக்கூடாது. கத்லியை அதிக நேரம் அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது. அடுப்பை அணைத்து விட்டு நன்றாகத் திரண்டு வரும்வரை சிறிது நேரம் கிளறி விடவேண்டும். பிறகு, நெய் தடவிய சிலிக்கான் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் கத்லியைப் போட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பூரிக்கட்டையில் உருட்டவும். இரண்டு நிமிடங்கள் கழித்து டைமண்ட் வடிவில் காஜு கத்லியை வெட்டவும்.

காஜு கத்லி செய்ய இன்னொரு முறையும் உண்டு. முந்திரியை ஊறவைத்து, கொஞ்சமாக நீர் ஊற்றி முதலில் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, தேவையான அளவு நீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். நான்-ஸ்டிக் கடாயில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, அரைத்த முந்திரி - சர்க்கரை விழுது சேர்த்து கெட்டியாகத் திரண்டு வரும்வரை கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சப்பாத்தி மாவு போல் வரும் வரை கிளறவும். அதன்பிறகு, நெய் தடவிய சிலிக்கான் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் கத்லியை போட்டு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பூரிக்கட்டையில் உருட்டி, இரண்டு நிமிடங்கள் கழித்து டைமண்ட் வடிவில் துண்டுகள் போடலாம்!

சமையல் சந்தேகங்கள் - 39 - இறுகிப்போன மைசூர்பாகு... வெடிக்காத சீடை... உப்பாத தட்டை...

சீடையை வெடிக்காமல் செய்வது எப்படி?

- வசந்தி, மதுரை

சீடை வெடிப்பதற்கு அதன் பக்குவம்தான் முக்கிய காரணம். சீடை செய்யும்போது மாவுடன் எண்ணெயைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். எண்ணெய் மாவுடன் எல்லா இடத்திலும் கலக்காமல் எங்கேயாவது ஓரிடத்தில் எண்ணெய் தங்கி பொரிக்கும்போது வெடிப்பு விடும். மேலும் சீடையை அழுத்தி உருட்டக்கூடாது. தேங்காயை நன்றாகத் துருவி, மிக்ஸியில் அடித்து சீடை மாவுடன் சேர்த்தால் சீடையும் வெடிக்காமல், நல்ல மொறுமொறுப்பாக வரும். நிறைய சீடைகளை பொரிக்கும்போது, எண்ணெய் தடவிய காகிதத்திலோ அல்லது தட்டிலோ, மாவை முன்னரே உருட்டி வைத்துக்கொண்டால், சீடை பொரிப்பது சுலபமாகிவிடும்.