லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 13 - சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் மால்குடி கவிதா

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

பொன்னாங்கண்ணி சூப்... கோயில் ஸ்டைல் புளியோதரை... கெமிக்கல் இல்லாத டொமேட்டோ கெட்ச் அப்...

- சுகுன ரோஷிணி

புளிச்சக்கீரையில் கடைசல்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். புளிச்சக்கீரையில் தொக்கு செய்ய முடியுமா... எப்படிச் செய்வது?

- கே.ராணி, ஆத்தூர்

செஃப் மால்குடி கவிதா
செஃப் மால்குடி கவிதா

புளிச்சக்கீரை இரும்புச்சத்துமிக்க கீரை. வாரத்தில் ஒருநாள் இதைச் சமைத்து உண்பது நல்லது. ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் மற்ற கீரைகளின் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது இதன் பயன்பாடு குறைவு தான். புளிச்சக்கீரைத் தொக்கு செய்வது ரொம்பவே சுலபம்.

தேவையானவை: புளிச்சக்கீரை - 3 கப் , கறிவேப்பிலை - கால் கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா ( மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - 8, வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 15, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன, வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தண்டுகளை அகற்றி சுத்தம் செய்த கீரை இலைகளைக் கழுவி உலர வைக்கவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி கறிவேப்பிலை மற்றும் சுத்தம் செய்த கீரையைச் சேர்த்து நிறம் மாறும் வரை சில நிமிடங்கள் வதக்கி ஆறவைக்கவும். வேறு ஒரு கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், புளி, வெந்தயம் சேர்க்கவும். பின்பு மூன்று பருப்புகளையும் சேர்த்து குறைந்த தீயில் மணம் வரும்வரை வறுத்து தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும்.

அதே கலவையில், வதக்கிய கறிவேப்பிலை மற்றும் கீரை சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு வெடித்ததும் பெருங்காயம் சேர்க்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்க்கவும். கூடவே, சிறிதளவு வெல்லம் மற்றும்

உப்பு சேர்க்கவும். 5 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வதக்கவும். எண்ணெய் மேலாக மிதந்து வரும்போது அடுப்பை அணைத்து ஆறவைத்து, கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நாள்கள் வரை பயன்படுத்தலாம். சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பொன்னாங்கண்ணிக்கீரை சூப் செய்வது எப்படி?

- ஜெ.மலர்விழி, காரமடை

சமையல் சந்தேகங்கள் - 13 - சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் மால்குடி கவிதா

பொன்னாங்கண்ணிக்கீரை காசநோய், இருமல், கண்நோய், வெப்ப நோய், வாத நோய் போன்றவற்றைக் குணமாக்கக்கூடிய சிறந்த உணவாகும். ‘பிளான்ச்சிங்’ என்பது ஒருவித சமையல் செயல்முறை. காய்கறி அல்லது பழம் ஆகியவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் மூழ்கச்செய்து அவற்றின் ஃபிரெஷ்னெஸைத் தக்கவைக்கும் சமையல் செயல்முறை. இந்த வகையில் கீரையின் நிறமும் குணமும் மாறாமல், என்ஸைம்கள், சத்துகள் அழியாமல் சூப் தயாரிக்கலாம்.

தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட பொன்னாங் கண்ணிக்கீரை - ஒரு கட்டு, நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் – ஐந்து, நறுக்கிய தக்காளி - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - கால் டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டேபிள்ஸ்பூன், தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 3 பற்கள், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். கீரையைக் கொதிக்கும் நீரில்போட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் எடுத்து, குளிர்ந்த நீரில் மூழ்கி எடுக்கவும். இப்படி பிளான்ச்சிங் செய்யப்பட்ட கீரையையும் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடானவுடன் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு நொடி வதக்கவும். இவற்றுடன் கீரைக்கூழ், எலுமிச்சைப்பழச்சாறு, மஞ்சள்தூள், உப்பு, பாசிப்பருப்பு நீர் மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி மிளகுத்தூள் மற்றும் தேன் இரண்டு சொட்டுவிட்டுப் பரிமாறலாம். மிகவும் மருத்துவ குணம் நிறைந்த பொன்னாங்கண்ணிக்கீரை சூப் சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

இட்லி, தோசை டிபன் வகைகளுக்கு எப்போதும் தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி செய்து அலுத்து விட்டது. வித்தியாசமான சட்னி செய்முறை ப்ளீஸ்...

- நந்தினி தேசிகன், பாபநாசம்

சமையல் சந்தேகங்கள் - 13 - சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் மால்குடி கவிதா

வேர்க்கடலைச் சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்தச் சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், சின்ன வெங்காயம் -10, காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 2 பற்கள், புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: முதலில் கடாயை சூடாக்கி, அதில் வேர்க்கடலையைச் சேர்த்து பொன்னிற மாக வறுத்து இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கித் தனியாக வைத்துக்கொள்ளவும். இத்துடன் பச்சை வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், தாளிப்ப தற்குக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன் றாகச் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் கலந்தால், வேர்க்கடலைச் சட்னி ரெடி.

கெமிக்கல் கலப்பு இல்லாமல் டொமேட்டோ கெட்ச் அப் (தக்காளி சாஸ்) வீட்டிலேயே தயார் செய்வது எப்படி ?

- மாலினி கண்ணன், சென்னை-11

சமையல் சந்தேகங்கள் - 13 - சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் மால்குடி கவிதா

தக்காளி கெட்ச் அப்பை அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு நிச்சயம் பிரச்னை ஏற்படலாம். காரணம், கடைகளில் விற்பனைக்கு வரும் டொமேட்டோ சாஸ் கெட்டுப்போகாமல் இருக்க வேதிப்பொருள்கள் சேர்ப்பார்கள். கெமிக்கல் கலப்பில்லாத ஆரோக்கியமான தக்காளி சாஸை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையானவை: நன்கு பழுத்த சதைப்பற்றுள்ள தக்காளி - ஒரு கிலோ, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப், காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கப், ஆப்பிள் சிடர் வினிகர் - 3 டீஸ்பூன் (இது தக்காளி கெட்டுப் போகாமல் தடுக்கிறது), மலைத்தேன் - சிறிதளவு.

வாசனை முடிப்பு தயாரிக்க: லவங்கப்பட்டை - 2, கிராம்பு - 3, கொரகொரப்பாக அரைக்கப்பட்ட மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஒரு மஸ்லின் துணியில் வாசனை முடிப்பு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்து, ஒரு முடிப்பாகக் கட்டவும். தக்காளியைப் போதுமான அளவு கொதி நீரில் போட்டு தோல் பிரிய ஆரம்பிக்கும் வரை கொதிக்க வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து தக்காளியை எடுத்து, குளிர்ந்த நீரில் சேர்த்து தக்காளியை முழுவதுமாக ஆறியதும், தோல் நீக்கி, எண்ணெய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு வடிகட்டி கொண்டு கலவையை வடிகட்டவும். தக்காளி விழுது மற்றும் தயாரிக்கப்பட்ட வாசனை முடிப்பை, அடிகனமான பாத்திரத்தில் மாற்றி, சர்க்கரை அல்லது தேன், மிளகாய்த்தூள், வினிகர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து, மிதமான தீயில் 15 முதல் 17 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

அடுப்பை அணைத்து நன்றாக ஆறியதும், முடிப்பை எடுத்துவிடவும். முழுவதும் ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

அவல் போண்டா செய்வது எப்படி?

- எஸ்.விசாலாட்சி, அலங்காநல்லூர்

சமையல் சந்தேகங்கள் - 13 - சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் மால்குடி கவிதா

தேவையானவை: ஊறவைத்து வடிகட்டிய கெட்டி அவல் - ஒரு கப், ஊறவைத்த கடலைப்பருப்பு - கால் கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - கால் கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டுப் பற்கள் - ஐந்து, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: ஒரு மிக்ஸியில் கடலைப்பருப்பு, அவல் இரண்டையும் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, ஓமம், சீரகம், உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்து போண்டா உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

வீட்டில் செய்யப்படும் புளிசாதம், கோயிலில் தருவதுபோல் இல்லையே... கோயில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை செய்வது எப்படி?

- டி.புஷ்பா, செஞ்சி

சமையல் சந்தேகங்கள் - 13 - சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் மால்குடி கவிதா

தேவையானவை: நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்- 4, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - அரை டீஸ்பூன், தூளாக்கிய கட்டி பெருங்காயம் - ஒரு சிட்டிகை புதுப்புளி - எலுமிச்சைப்பழ அளவு, உப்பு - தேவையான அளவு, வேகவைத்த பச்சரிசி சாதம் - 250 கிராம்.

பொடி செய்வதற்கு: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம் - கால் டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து மணம் வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர், அதை இறக்கி ஆறவைத்து, மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். பிறகு புளியில் அரை கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, கரைத்துக்கொள்ளவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில் உப்பு சேர்த்து, பின் புளிக்கரைசலை ஊற்றி, 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் சிறிதளவு வெல்லம் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரியும்போது இறக்கி, அதில் சாதத்தைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளவற்றைச் சேர்த்துக் கிளறி மூடி வைத்து, 30 நிமிடங்கள் கழித்துப் பரிமாறினால், கோயில் பிரசாதப் புளியோதரை ரெடி.