Published:Updated:

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

கேக்
பிரீமியம் ஸ்டோரி
News
கேக்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: ஸ்வாதி நந்தினி

``அப்போது கிறிஸ்துமஸ் கேக் என்பது மேல்தட்டு மக்களுக்கான இனிப்பாக மட்டுமே இருந்தது. 18-ம் நூற்றாண்டில் கேக், பிரெட் செய்வதற்கான சமையல் பாத்திரங்கள், கேக்குக்கான அடுப்பு எல்லாம் நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விதத்தில், விலையில் உருவாக்கப்பட்டன. தொழிற்புரட்சியின் காரணமாக, எட்டா உயரத்தில் இருந்த கேக் என்பது எல்லா மக்களுக்குமான இனிப்பாக மாறிப்போனது.

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் வழியாகத்தான் உலகமெங்கும் பல்வேறு உணவுகள் பரவின. கேக்கும் அப்படித்தான் இந்தியாவுக்கும் கப்பலேறி வந்தது.

கிறிஸ்துமஸுக்காகத் தயாரிக்கப்படும் கேக் தனித்துவம் வாய்ந்தது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை அந்த கேக் தயாரிப்பை `Plum Porridge’ என்று அழைத்தார்கள்’’ என்று கேக் சரித்திரத்தைப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் முகில்.

நாசியைத் துளைக்கும் அலாதியான மணம், நாவில் கரையும் மென்மை, திளைக்கவைக்கும் சுவை... சொல்லிக் கொண்டே போகலாம் கேக்கின் மேஜிக் பற்றி. இந்த இதழில் கிறிஸ்துமஸ் தினத்தை அலங்கரிக்கும் விதவிதமான கேக் ரெசிப்பிகளை அளிக்கிறார் ஸ்வாதி நந்தினி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

கிறிஸ்துமஸ் புடிங்

தேவையானவை:

 • கோதுமை மாவு - அரை கப்

 • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

 • பிரெட் தூள் - அரை கப்

 • சர்க்கரை - 1/3 கப்

 • பட்டைத் தூள் - அரை டீஸ்பூன்

 • ஆப்பிள் - ஒன்று

 • வாழைப்பழம் - ஒன்று

 • குளிர்ந்த வெண்ணெய் - 75 கிராம்

 • ஆப்பிள் சாறு - 4 டேபிள்ஸ்பூன்

 • பொடித்த சர்க்கரை - சிறிதளவு

ஊறவைக்க:

 • ஆப்பிள் சாறு - அரை கப்

 • உலர்ந்த பழங்கள் - 2 கப் (உலர்திராட்சை, உலர் கறுப்பு திராட்சை, பேரீச்சம்பழம், டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம்)

 • நட்ஸ் - கால் கப் (முந்திரி, பாதாம், பிஸ்தா)

 • தேன் - 3 டீஸ்பூன்

தயாரிப்பு:

ஊறவைக்கக் கொடுத்துள்ள உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸை நறுக்கி ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் ஆப்பிள் சாறு மற்றும் தேன் ஊற்றவும். ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதை ஒரு வாரம் அல்லது 3 - 4 நாள்கள் ஊறவைக்கவும். கரண்டியால் அடிக்கடி கிளறி மீண்டும் குளிரூட்டவும்.

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பிரெட் தூள், சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் பட்டைத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரைத்த ஆப்பிள் மற்றும் பிசைந்த வாழைப்பழத்தை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் 4 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சாறு சேர்த்து, குளிர்ந்த வெண்ணெயைத் துருவி சேர்த்து கலவையாகக் கலக்கவும். இப்போது ஊறவைத்த உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்ளவும். இதை வெண்ணெய் தடவிய கிண்ணத்தில் ஊற்றி, சில்வர் ஃபாயில் கொண்டு மூடி, ஒரு ரப்பர் பேண்டு மூலம் மூடவும்.

கிண்ணத்தை இட்லி குக்கர் அல்லது ஸ்டீமரில் வைத்து, இரண்டு மணி நேரம் ஆவியில் வேகவைக்கவும். அது நன்கு குளிர்ந்தவுடன் ஒரு தட்டுக்குக் தலைகீழாக மாற்றவும். மேலே சிறிதளவு பொடித்த சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

தன் எடையில் 25% தண்ணீர் கொண்டிருப்பதால், ஆப்பிள்கள் நீரில் மிதக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பியர் அப்சைடு டவுன் கேக்

தேவையானவை:

 • பேரிக்காய் - ஒன்று

 • சர்க்கரை (கேரமல் செய்ய) - அரை கப்

 • தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்

 • எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கோதுமை மாவு - ஒரு கப்

 • எண்ணெய் - கால் கப்

 • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - அரை டீஸ்பூன்

 • சர்க்கரை - கால் கப்

 • தயிர் - கால் கப்

 • நெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • பால் - முக்கால் கப்

 • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

பேக்கிங் அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி சிறிதளவு கோதுமை மாவைத் தூவிவிடவும். பேரிக்காயைக் கழுவி மெல்லிய நீண்ட துண்டுகளாக வெட்டவும். பேக்கிங் டின்னில் பேரிக்காய்த் துண்டுகளை வரிசையாக அடுக்கவும். கேரமல் தயாரிக்க, ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீரை எடுத்து நடுத்தரத் தீயில் சூடாக்கவும். பொன்னிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். கேரமலை பேரிக்காய்த் துண்டுகள் மீது ஊற்றி தனியாக வைக்கவும்.

கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடரை ஒரு பாத்திரத்தில் சலித்துக்கொள்ளவும். அதில் உப்பு, சர்க்கரை, தயிர், நெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி, கலவையாகக் கலக்கவும். இந்தக் கலவையைப் பேரிக்காய்த் துண்டுகளின் மேல் ஊற்றி, அவனில் வைத்து 30 - 35 நிமிடங்கள் பேக் செய்யவும். முடிந்ததும், அதை 30 நிமிடங்கள் முழுமையாக ஆறவிடவும். சுவையான பியர் அப்சைடு டவுன் கேக் தயார்.

கேக் துண்டுகளின் மேல் ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப் வைத்துப் பரிமாறலாம்.

சீனாவின் பிளாஸ்டிக் மோல்டு கொண்டு புத்தர் போன்ற தோற்றமுள்ள ‘புத்தர் பேரிக்காய்களை’ விளைவிக் கிறார்கள். ஒரு பழத்தின் விலை 9 டாலர்.

வீட் ஸ்பாஞ்ச் கேக்

தேவையானவை:

 • கோதுமை மாவு - ஒன்றரை கப்

 • சர்க்கரை - ஒரு கப்

 • பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

 • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

 • தயிர் - ஒரு கப்

 • எண்ணெய் - கால் கப்

 • பால் - கால் கப்

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

பேக்கிங் அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி சிறிதளவு கோதுமை மாவைத் தூவிவிடவும். ஒரு பவுலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரையும் வரை ஒன்றாகக் கலக்கவும். அதில் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் கோதுமை மாவைச் சலித்து சேர்க்கவும். ஒன்றாகக் கலக்கி சிறிது சிறிதாக பால் ஊற்றிக் கலவையாக கலந்து வைக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் டின்னில் ஊற்றவும். அவனில் வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பின்னர் ஆறியதும் மென்மையான, பஞ்சுபோன்ற வெனிலா கேக் தயார்.

ஆர்க்கிட் மலர் குடும்பத்தைச் சேர்ந்த காய்க்கக்கூடிய ஒரே செடி வெனிலாதான்.

ஓரியோ கேக் இன் குக்கர்

தேவையானவை:

 • ஓரியோ குக்கீகள் - 20

 • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

 • சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

 • பால் - 1/3 கப்

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

பிரஷர் குக்கரை எடுத்து, அதன் அடிப்பகுதியில் உப்பு அல்லது மணலைச் சேர்த்து சமமாகப் பரப்பவும். இது சுமார் அரை அங்குலத்துக்கு அடித்தளத்தை மறைக்க வேண்டும்.

மணலின் மேல் ஒரு ஸ்டாண்டு வைக்கவும். குக்கரின் கேஸ்கெட்டையும் விசிலையும் அகற்றி மூடியை மூடி, 10 நிமிடங்கள் குக்கரை முன்கூட்டியே சூடாக்கவும்.

மிக்ஸி ஜாடியில் ஓரியோ குக்கீகளை எடுத்துக்கொள்ளவும். இதை நன்கு தூளாக அரைத்துக் கிண்ணத்துக்கு மாற்றவும். அதில் பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகப் பால் சேர்த்துக் கலக்கவும்.

பேக்கிங் பானில் (Baking pan) வெண்ணெய் தடவி, தயாரித்த கலவையை ஊற்றவும்.

இப்போது குக்கரின் மூடியைத் திறந்து, பக்கங்களைத் தொடாமல் ஸ்டாண்டின் மேல் பேக்கிங் பானை வைக்கவும். விசில் மற்றும் கேஸ்கெட் இல்லாமல் மீண்டும் குக்கரை மூடி. நடுத்தர தீயில் 25 - 30 நிமிடங்கள் பேக் செய்யவும். முடிந்ததும், கேக்கை முழுமையாகக் குளிர்விக்கவும். சுவையான ஓரியோ கேக் தயார்.

ஆசியாவின் முதல் சர்க்கரை ஆலை 1824-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள அஸ்கா என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. அந்த ஊரின் பெயர், அங்கு தயாரான சர்க்கரைக்கு வந்தது.

ஆரஞ்சு கேக் வித் ஆரஞ்சு கிளேஸ்

தேவையானவை:

 • மைதா மாவு - 2 கப்

 • பால் பவுடர் - அரை கப்

 • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - கால் டீஸ்பூன்

 • தூள் சர்க்கரை - ஒரு கப்

 • ஆரஞ்சு சாறு - 2 கப்

 • ஆரஞ்சு எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய் - கால் கப்

 • தயிர் - 1/3 கப்

 • துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

 • ஆரஞ்சு ஜாம் - 3 டேபிள்ஸ்பூன்

 • சர்க்கரை - அரை டீஸ்பூன்

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

பேக்கிங் அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி சிறிதளவு கோதுமை மாவைத் தூவிவிடவும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பால் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் தூள் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் ஆரஞ்சு சாறு, ஆரஞ்சு எசென்ஸ், எண்ணெய் மற்றும் தயிர் சேர்க்கவும். இவை நன்கு இணையும் வரை ஒன்றிரண்டு நிமிடங்கள் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் பானில்

(Baking pan) ஊற்றி அவனில் வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும். இதற்கிடையில் ஆரஞ்சு ஜாம் மற்றும் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து குறைந்த தீயில் உருகவிடவும். இந்த ஜாம் கலவையை கேக் மீது ஊற்றிப் பரப்பவும். இதன் மேல் துருவிய தேங்காயைத் தூவி அலங்கரிக்கவும். சுவையான ஆரஞ்சு ஜாம் கேக் தயார்.

தமிழ்ச்சொல்லான நாற்றங்காய் (வாசனை மிகுந்த காய்) சம்ஸ்கிருத நாரங், ஆரஞ்சு என்று ஆங்கிலச் சொல்லானது.

தேங்காய் பாத் கேக்

தேவையானவை:

 • ரவை - ஒரு கப்

 • துருவிய தேங்காய் - ஒரு கப்

 • ஐசிங் சர்க்கரை - ஒரு கப்

 • பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • பால் - 2 டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - அரை கப்

 • தயிர் - கால் கப்

 • முட்டை - ஒன்று

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

பேக்கிங் அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்யவும். பேக்கிங் டின்னில் எண்ணெய் தடவி வைத்துக்கொள்ளவும். ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பேக்கிங் பவுடர், பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் பால், எண்ணெய், முட்டை மற்றும் தயிர் சேர்க்கவும். எலெக்ட்ரிக் பீட்டரைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் சுமார் 10 நிமிடங்கள் அடித்துக்கொள்ளவும்.இந்தக் கலவையை பேக்கிங் டின்னில் ஊற்றி, அவனில் வைத்து 30 - 35 நிமிடங்கள் பேக் செய்யவும். தேங்காய் பாத் கேக் ரெடி.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பயன்படுத்திய ‘தேங்காய்க் குண்டுகள்’ அதிகம் பேசப்பட்டன. தேங்காய்க்குள் வெடிமருந்தை அடைத்து பயன்படுத்தப்பட்டது.

சத்துமாவு குக்கீஸ்

தேவையானவை:

 • சத்துமாவு - ஒரு கப்

 • பொடித்த சர்க்கரை - முக்கால் கப்

 • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • பாதாம் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

 • பால் - கால் கப்

 • பாதாம் - 10 (நறுக்கவும்)

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை:

பேக்கிங் அவனை டிகிரி சென்டிகிரேடுக்கு 10 நிமிடங்கள் சூடுபடுத்தவும். இதற்கிடையில் ஒரு கிண்ணத்தில் சத்துமாவை சலித்து எடுத்துக்கொள்ளவும். இதில் பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, வெண்ணெய் மற்றும் பாதாம் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி, மென்மையான மாவாகப் பிசைய வேண்டும். மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கைகளுக்கு இடையில் தட்டவும். நறுக்கிய பாதாம்பருப்பை ஒரு தட்டில் வைத்து, அதில் தட்டிய குக்கீகளை அழுத்தி வைக்கவும். இவற்றை எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் அடுக்கி, 15 - 18 நிமிடங்கள் பேக் செய்யவும். சுவையான சத்து மாவு குக்கீகள் தயார். இது ஒரு மாதத்துக்கு நன்றாக இருக்கும்.

உச்சிவேளையில் உண்ணப்படும் பாதாம், ரத்தத்தில் சர்க்கரை அளவை நாள் முழுக்க கட்டுக்குள் வைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பனானா டோனட்ஸ்

தேவையானவை:

 • வாழைப்பழம் - 2

 • கோதுமை மாவு - 2 கப்

 • பொடித்த சர்க்கரை - முக்கால் கப்

 • பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

 • உப்பு - 1/8 டீஸ்பூன்

 • பால் - கால் கப்

 • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 • ஐசிங் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் பேக்கிங் சோடா, வாழைப்பழம், உப்பு, பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்க்கவும். வாழைப்பழத்தைப் பிசைந்து ஒன்றாகக் கலக்கவும். வாழைப்பழத்துடன் அனைத்தும் ஒன்றிணையும் வரை கலக்கவும். எண்ணெய் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். இதில் சிறிய பகுதியை எடுத்து கனமான சப்பாத்தி போல் தேய்த்துக்கொள்ளவும். குக்கீ கட்டர் பயன்படுத்தி வட்டமாக வெட்டவும். ஒவ்வொரு வட்டத்தின் மையத்திலும் ஒரு துளையை வெட்டவும்.

எண்ணெயைச் சூடாக்கி, தயாரிக்கப்பட்ட டோனட்டுகளை அதில் போட்டு நடுத்தர தீயில் பொரிக்கவும். எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக மாறியதும் எண்ணெயிலிருந்து எடுக்கவும். டோனட்ஸை ஐசிங் சர்க்கரையில் நன்றாகப் புரட்டவும். பனானா டோனட்ஸ் ரெடி.

செரடோனின் என்ற கனிமப்பொருளை நம் உடல் தயாரிக்க உதவும் அமினோ அமிலம், டிரிப்டோஃபான், வைட்டமின் பி6 போன்றவை வாழைப்பழத்தில் உள்ளன. இந்த செரடோனின் மனித மனத்தை உற்சாகப்படுத்தக்கூடியது.

சாக்லேட் பிஸ்கட் கேக்

தேவையானவை:

 • மேரி பிஸ்கட் - 20

 • கோகோ பவுடர் - அரை கப்

 • சர்க்கரை - முக்கால் கப்

 • பால் - ஒரு கப்

 • வெனிலா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பிஸ்தா - 10

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

முதலில் சாக்லேட் சிரப் தயாரிக்கத் தொடங்குங்கள். இதைத் தயாரிக்க, சர்க்கரை மற்றும் கோகோ பவுடரை ஒரு கடாயில் சேர்த்துக்கொள்ளவும். அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். இதை மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கிளறி நடுத்தர தீயில் சமைக்கவும். இதை அடுப்பிலிருந்து இறக்கி வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். நன்கு கலந்து குளிர்விக்கவும். பிஸ்கட்டை சிறிய துண்டுகளாகப் பொடித்து, சாக்லேட் சிரப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். தயாரிக்கப்பட்ட சாக்லேட் பிஸ்கட் கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் பேனில் போட்டு கரண்டியால் சமமாக அழுத்தவும். நறுக்கிய பிஸ்தாவைத் தூவி அலங்கரித்து நான்கு - ஐந்து மணி நேரம் குளிரூட்டவும். சுவையான சாக்லேட் பிஸ்கட் கேக் தயார்.

1848-ம் ஆண்டுதான் கோகோ பயன்படுத்தி உலகின் முதல் சாக்லேட் பார் தயாரிக்கப்பட்டது.

சீஸ் பிஸ்கட்ஸ் இன் தவா

தேவையானவை:

 • கோதுமை மாவு - ஒன்றரை கப்

 • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • ஏலக்காய் - 2

 • குளிர்ந்த வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • துருவிய சீஸ் - கால் கப்

 • பால் - 1/3 கப்

 • எண்ணெய் - வறுப்பதற்குத் தேவையான அளவு

எளிதாகச் செய்யலாம் டேஸ்ட்டி கேக்!

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, பொடித்த சீரகம், சர்க்கரை, பொடித்த ஏலக்காய் மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இவற்றுடன் குளிர்ந்த வெண்ணெய், துருவிய சீஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து, மென்மையாகப் பிசைந்துகொள்ளவும். மாவை மூடி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு சிறிதளவு மாவை எடுத்து தட்டையாகத் தேய்க்கவும்.

குக்கீ கட்டர் மூலம் சிறிய வட்டங்களாக வெட்டவும். சிறிதளவு எண்ணெயுடன் ஒரு தவாவைச் சூடாக்கி, பிஸ்கட்களை வைத்து குறைந்த தீயில் வறுக்கவும். மறுபுறம் புரட்டி, எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுக்கவும்.

சுவையான சீஸ் பிஸ்கட்ஸ் தயார். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

வெண்ணெயில் 400 விதமான வெவ்வேறு கொழுப்பு அமிலங்கள் உள்ளன.