ரெசிப்பிஸ்
Published:Updated:

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

இந்தியாவெங்கும் பரவலாகக் கொண்டாடப்படும் மகா கொண்டாட்டம் தீபாவளி. ஒவ்வொரு மாநிலத்திலும் உடை முதல் உணவு வரை பலவித பாணிகள் பின்பற்றப்படுகின்றன.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

கொண்டாடப்படும் வழிமுறைகள் மாறினாலும்கூட, அவை அனைத்தும் அந்தந்த பாரம்பர்யத்துக்குச் சிறப்பு சேர்ப்பவையாக அமைகின்றன.

குறிப்பாக குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் தீபாவளியின் போது செய்யப்படும் ஸ்நாக்ஸ் வகைகள் மிகவும் சுவையானவை; தனித்துவம் மிக்கவை. அத்தகைய ஸ்நாக்ஸ் வகைகளை ஃபுட் ஸ்டைலிங் செய்து அழகிய படங்களுடன்கூடிய ரெசிப்பிகளாக அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையற்கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். கூடவே அவர் வழங்கியிருக்கும் செய்முறை வீடியோக்கள் நம் தயாரிப்பு முறைகளை எளிதாக்கும்.

நம் நாவுக்கு புதிய சுவை தரும் இந்த ஸ்நாக்ஸ் வகைகளைச் செய்வோம். நம் தீபாவளியை தேசிய தீபாவளி ஆக்குவோம்!

- லட்சுமி வெங்கடேஷ்

பாகர்வடி - குஜராத்

தேவையானவை:

மேல் மாவுக்கு:

கடலை மாவு – முக்கால் கப்

கோதுமை மாவு – அரை கப்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

ஸ்டஃபிங்குக்கு (மசாலா கலவை):

கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்

எள் – 2 டேபிள்ஸ்பூன்

கொப்பரைத் துருவல் – அரை கப்

மல்லித்தூள் (தனியாத்தூள்)

– அரை டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

சர்க்கரை – கால் கப்

மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்  

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

சர்க்கரைத் தண்ணீருக்கு:

சர்க்கரை – கால் கப்

தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன்

பொரிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவைப் போட்டு உப்பு, எண்ணெய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் தெளித்து நன்கு இறுக்கமாகப் பிசைந்து சிறிது எண்ணெய் தடவி ஈரத்துணியால் மூடி ஊறவைக்கவும்.

கசகசா, எள், கொப்பரைத் துருவலைத் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, சர்க்கரை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பவுலில் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, அரைத்த கொப்பரைக் கலவை மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். ஸ்டஃபிங் தயார்.

சர்க்கரைத் தண்ணீர் செய்வதற்கு, சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து சற்று பிசுக்குப் பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

மாவை ஐந்து சம பாகங்களாகப் பிரித்து சற்று கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். மேல் புறத்தில் சர்க்கரைத் தண்ணீர் தடவி ஸ்டஃபிங்கில் சிறிது எடுத்து, ஓரங்களில் அரை அங்குலம் இடைவெளிவிட்டு, சரிசமமாகப் பரப்பவும். பிறகு மாவை நன்கு இறுக்கமான ரோல் போல உருட்டி ஓரங்களை நன்கு ஒட்டவும். ரோல்களை அரை அங்குலத் துண்டுகளாக வெட்டி சிறிது அழுத்தவும். இதுதான் பாகர்வடி.

எண்ணெயைக் காயவைத்து பாகர்வடிகளைக் கவனமாகச் சேர்த்து, பிரிந்து வராமல் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்துவைக்கவும். பாகர்வடிகள் இரண்டு வாரங்கள் வரைக்கும் நன்றாக இருக்கும்.

குறிப்பு:

மசாலா கலவையில் ருசிக்கேற்ப துருவிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.

மினி பாகர்வடி - மகாராஷ்டிரா

தேவையானவை:

மேல் மாவுக்கு:

கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்

மைதா மாவு – ஒரு கப்

ஓமம் - 1/8 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

ஸ்டஃபிங்குக்கு (மசாலா கலவை):

எள் – ஒரு டேபிள்ஸ்பூன்

கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சித்தூள் - கால் டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

சர்க்கரைத் தண்ணீருக்கு:

சர்க்கரை – கால் கப்

தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

பொரிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவைப் போட்டு உப்பு, எண்ணெய் மற்றும் ஓமம் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் தெளித்து நன்கு இறுக்கமாகப் பிசைந்து சிறிது எண்ணெய் தடவி ஈரத்துணியால் மூடி ஊறவைக்கவும்.

ஸ்டஃபிங்குக்குக் கொடுத்துள்ள அனைத்தை

யும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

சர்க்கரைத் தண்ணீர் செய்வதற்கு, சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து சற்று பிசுக்குப் பதம் வந்தவுடன் இறக்கி, ஆறிய பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.

ஒரு சிறிய உருண்டை மாவை சற்று மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்து பாதியாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாதியில் மேல்புறத்தில் சர்க்கரைத் தண்ணீர் தடவி ஸ்டஃபிங்கில் சிறிது எடுத்து, ஓரங்களில் அரை அங்குலம் இடைவெளிவிட்டு, சரிசமமாகப் பரப்பவும். பிறகு மாவை நன்கு இறுக்கமான ரோல் போல உருட்டி ஓரங்களை நன்கு ஒட்டவும். ரோல்களை அரை அங்குலத் துண்டுகளாக வெட்டி சிறிது அழுத்தவும். மற்றொரு பாதியிலும் இதே போல் செய்யவும். இதுதான் பாகர்வடி.

எண்ணெயைக் காயவைத்துப் பாகர்வடி களைக் கவனமாகச் சேர்த்து, பிரிந்து வராமல் சற்று குறைவான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும். மினி பாகர்வடிகள் ஒரு மாதம் வரைக்கு நன்றாக இருக்கும்.

ஷக்கர்பாரா - மகாராஷ்டிரா

தேவையானவை:

மைதா மாவு / கோதுமை மாவு - 2 கப்

பொடித்த சர்க்கரை - அரை கப்

நெய் - கால் கப்

தண்ணீர் - கால் கப்

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து, சற்று சூடு ஏற்றவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடு ஏற்றவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் சூடான நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சர்க்கரைத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு கால் அங்குலம் தடிமனான சப்பாத்தியாக இடவும். ஒரு கத்தியால் சப்பாத்தியைச் சிறு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெயைக் காயவைத்து அதில் மெதுவாக இந்த சதுரத் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

மேத்தி மத்ரி - பஞ்சாப்

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்

கோதுமை மாவு - கால் கப்

கடலை மாவு - கால் கப்

கஸூரி மேத்தி - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

ஓமம் - அரை டீஸ்பூன்

எள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் -

பொரிக்கத் தேவையான அளவு + 1/3 கப்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். 1/3 கப் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வரும் வரை பிசிறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு உள்ளங்கையில் வைத்து அழுத்தம் கொடுத்து சற்று கனமான பூரி போல் செய்துகொள்ளவும். இதுதான் மத்ரி.

நடுத்தர சூட்டில் எண்ணெயைக் காயவைத்து, மத்ரிகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறவைத்துப் பரிமாறவும். அல்லது ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

கோத்மீர்வடா - மகாராஷ்டிரா

தேவையானவை:

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒன்றரை கப்

வறுத்து பொடித்த வேர்க்கடலை - கால் கப்

கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்

எள் – ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு + ஒரு டேபிள்ஸ்பூன்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொடுத்துள்ள மற்ற அனைத்துப் பொருள்கள், அரைத்த விழுது மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாக முக்கால் முதல் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.  

எண்ணெய் தடவிய ஒரு தட்டில் அரை அங்குலம் உயரம் வரும் வரை மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவிடவும்.

ஆறிய பிறகு ஓர் அங்குல சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதுதான் கோத்மீர்வடா. எண்ணெயைச் சூடேற்றி இந்த வடைகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துச் சட்னியுடன் பரிமாறவும்.

ஃபாஃப்டா - குஜராத்

தேவையானவை:

கடலை மாவு – ஒரு கப்

ஓமம் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

சமையல் சோடா - கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு + 2 டேபிள்ஸ்பூன்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்த மாவை மீண்டும் பிசையவும். மிகவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வோர் உருண்டையையும் சப்பாத்தி கட்டையின் மீது வைத்து கட்டைவிரலால் அழுத்தம் கொடுத்து மெல்லியதாக நீளமாக இழுக்கவும். இதே போல் மாவு அனைத்தையும் செய்துகொள்ளவும். இதுதான் ஃபாஃப்டா.

எண்ணெயைச் சூடேற்றி ஃபாஃப்டாக்களைப் பொரித்தெடுக்கவும். ஆறவைத்துப் பரிமாறவும். அல்லது ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

துக்கடா - இந்தியா

தேவையானவை

மைதா - ஒரு கப்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்தியாக இடவும். ஒரு பீட்சா கட்டர் அல்லது கத்தியால் சப்பாத்தியை சிறு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாக எடுத்துவைக்கவும்.

நடுத்தர சூட்டில் எண்ணெயைக் காயவைத்து அதில் மெதுவாக இந்தச் சதுரத் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

இனிப்பு வகை

தேவையானவை:

மைதா - ஒரு கப்

வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - 2 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

சர்க்கரைப் பாகுக்கு:

சர்க்கரை - ஒரு கப்

தண்ணீர் - கால் கப்

செய்முறை: மேற்கூறியவாறு மாவைப் பிசைந்து துக்கடாக்களைச் செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஒரு கம்பி பதத்தில் பாகு செய்து அடுப்பில் இருந்து இறக்கிவைக்கவும். உடனடியாக செய்து வைத்திருக்கும் துக்கடாக்களைச் சேர்த்து, அனைத்து துக்கடாக்களிலும் சர்க்கரைப்பாகு படும்மாறு கலந்துகொள்ளவும். பிறகு அவற்றை எடுத்து தட்டில் வைத்து காயவிடவும். ஒரு மணி நேரம் கழித்து காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

ஃப்ஹூல்வடி - குஜராத்

தேவையானவை:

கொரகொரப்பாக அரைத்த

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்

ரவை - ஒரு டேபிள்ஸ்பூன் 

எள் – ஒரு டீஸ்பூன்

மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்

கஸூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) -

ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

தயிர் - 4 டேபிள்ஸ்பூன்

சமையல் சோடா - கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத் தேவையான

அளவு + 3 டேபிள்ஸ்பூன்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

சோம்பு மற்றும் மல்லியை வெறும் வாணலியில் வறுத்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர கொடுத்துள்ள அனைத்து பொருள்கள் மற்றும் அரைத்த சோம்புக் கலவை சேர்த்துக் கலந்துகொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடு ஏற்றி சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்த மாவை மீண்டும் பிசையவும்.

பிறகு காராசேவ் வார்க்கும் அச்சில் சிறிதளவு மாவை வைத்து, ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது பட்டர் ஷீட்டின் மீது நீளமாகப் பிழிந்து, சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அல்லது சிறிதளவு மாவை நீள டியூப் போல் உருட்டி சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும். இதுதான் ஃப்ஹூல்வடி.

எண்ணெயைச் சூடேற்றி ஃப்ஹூல்வடிகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறவைத்துப் பரிமாறவும். அல்லது ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்துவைக்கவும்.

க்ஹாஜ்லி - குஜராத் பாவ்நகர்

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

நெய் - 1/8 கப்

தண்ணீர் - அரை கப் + மாவு பிசைவதற்கு

உப்பு - தேவையான அளவு

மேலே தூவுவதற்கு (மசாலா கலவை):

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன்

பிளாக் சால்ட் (black salt) - கால் டீஸ்பூன்

சர்க்கரைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

பொரிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை: மைதா மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக வெதுவெதுப்பான நீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். மாவை மூன்று சமபங்கு உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய், தண்ணீர் கலந்து அதில் ஒரு பங்கு மாவு உருண்டையை நன்கு கரைத்துக்கொள்ளவும். கரைத்த இந்த மாவை அடுப்பில் வைத்து கைவிடாமல் கெட்டியான மாவு ஆகும் வரை கிளறவும். ஆறிய பிறகு இந்த மாவில் மீதம் இருக்கும் பிசைந்த மாவைச் சேர்த்து மீண்டும் பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு கையால் அழுத்தம் குடுத்து சற்று கனமான பூரி போல் செய்துகொள்ளவும். இந்தப் பூரிகளில் விரல்களால் துளைகள் செய்யவும். இதுதான் க்ஹாஜ்லி.

நடுத்தர சூட்டில் எண்ணெயைக் காயவைத்து க்ஹாஜ்லிகளைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மசாலா கலவைக்குக் கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்து சூடான க்ஹாஜ்லிகள் மேல் தூவவும். ஆறவைத்துப் பரிமாறவும். அல்லது ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

சக்கலி - மகாராஷ்டிரா

தேவையானவை:

அரிசி மாவு - ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன் 

எள் – அரை டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

ஓமம் - கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு + 2 டேபிள்ஸ்பூன்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளவும். ஒரு கப் கொதிக்கும் நீர் ஊற்றி ஒரு மரக்கரண்டியால் கிளறி, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு இந்தக் கலவையை நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு ஸ்டார் முறுக்கு வார்க்கும் அச்சில் சிறிது மாவை வைத்து, ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது பட்டர் ஷீட்டின் மீது முறுக்குகளாகப் பிழிந்துகொள்ளவும். இதுதான் சக்கலி.

எண்ணெயைச் சூடேற்றி சக்கலிகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறவைத்துப் பரிமாறவும். அல்லது ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.