கட்டுரைகள்
Published:Updated:

மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடை...!

முள்முருங்கை வடை
பிரீமியம் ஸ்டோரி
News
முள்முருங்கை வடை

மருந்துப்பொருளான முள்முருங்கையைத் தனியாகக் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதையே இப்படி வடையாகச் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மதுரையில் வடைக் கடைகளுக்குப் பஞ்சமில்லை. அதில் வகை வகையாக ஆமை வடை, தவளை வடை, பருப்பு வடை, உளுந்து வடை, வெங்காய வடை, கீரைவடை, வாழைப்பூ வடை, இனிப்பு போண்டா, அப்பம் என்று காலை முதல் இரவு வரை விதவிதமாகச் சுட்டுத் தள்ளிக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவுக்குப் பலகாரப் பிரியர்கள் அதிகம். எந்த வடையை வாங்கிச் சாப்பிட்டாலும் சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால், அத்தனை வடைகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் ஒரு வடை இங்கே படுபிரபலம்...

முள்முருங்கை வடை..!

கல்யாண முருங்கை என்று சொல்லப்படும் முள்முருங்கை இலை, சளி, இருமல் பிரச்னைகளுக்கு ஒரு இயற்கை மருந்தாகப் பயன்பட்டுவருகிறது. இதன் இலைகளை அரைத்துக் கலந்து செய்யும் முள்முருங்கை வடைக்கு சரணடையாத மதுரை நாக்கே இல்லை எனலாம்.

ஒருபக்கம் உடலுக்கு மருந்தாகவும் மற்றொரு பக்கம் சிறார்கள் விரும்பும் மொறுமொறுத் தன்மையுடன் சுவையான பலகாரமாகவும் பெருவாரியானவர்களின் சுவை அரும்புகளில் இடம்பிடித்திருக்கிறது இந்த முள்முருங்கை வடை. மதுரையில் மாலை நான்கு மணி ஆகிவிட்டால் போதும்... இந்த வடைகளை சுடச்சுட விற்பதற்கென்று ஏராளமான தள்ளுவண்டிக் கடைகள் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றிவரத் தொடங்கும். வேர்க்கடலை வறுத்து விற்கும் வண்டி மாதிரி தெருவுக்குத் தெரு இந்த மு.மு.வடை தள்ளுவண்டிக் கடைதான்! வீட்டு வாசலுக்கே வந்து சுடச்சுட வடை சுட்டுக் கொடுக்கிறார்கள். இவ்வளவுக்கும் இதன் விலை 5 ரூபாய்தான்.

மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடை...!

மதுரை உணவுப் பாரம்பரியத்தில் ஒரு அங்கமாக உள்ள சௌராஷ்டிர இன மக்களின் ஸ்பெஷல் இந்த முள்முருங்கை வடை. தெற்குமாசி வீதியிலிருந்து மஞ்சனக்கார வீதிக்குள் நுழையும் இடத்தில் ஜோதிகுமார் என்பவர் வைத்திருக்கும் கடைக்குச் சென்றோம். சூடாக முள்முருங்கை வடை ஆர்டர் செய்து வாங்கி, அதில் பருப்புப்பொடி போட்டுச் சாப்பிட்டபடி ஜோதிகுமாரிடம் பேசினோம்.

‘‘நான் இங்க பத்து வருடங்களாகக் கடை வைத்திருக்கிறேன். இதுபோல் பல வருடங்களா கடை நடத்துபவர்கள் மதுரையெங்கும் இருக்கிறார்கள். மதுரையில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் - உடம்புக்கு நன்மை செய்யும் - ஒரு பலகாரம் முள்முருங்கை வடை. எங்க சமூக மக்கள் மதுரை முழுக்க இந்தக் கடைகளை நடத்திவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனியாக கஸ்டமர்கள் உள்ளனர். தரமான பொருள்கள் மூலம் தயாரிக்கிறோம். முள்முருங்கை இலைகளைக் கீரை வியாபாரிகள் ரெகுலராகத் தருகிறார்கள். அதை சுத்தம் செய்து சரியான அளவில் அரிசி மாவுடன் சீரகம், மிளகு, உப்பு சேர்த்துப் பக்குவமாக அரைக்க வேண்டும். அதைச் சின்னச் சின்னதாக பூரிபோல் தேய்த்து எண்ணெயில் போட வேண்டும். ஒரு நிமிடத்தில் புஸ்ஸென்று பூரிபோல வந்துவிடும். எண்ணெயிலிருந்து எடுத்து சுடச்சுட அதன் மேல் பருப்புப்பொடியைத் தூவி சாப்பிட்டால் உள்ளே போய்க்கொண்டே இருக்கும். சளி, இருமல், உடல் வலியெல்லாம் போய்விடும்.

மருந்துப்பொருளான முள்முருங்கையைத் தனியாகக் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதையே இப்படி வடையாகச் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சிலர் இதை வீட்டில் செய்து சாப்பிட்டாலும், நாங்கள் செய்வதுபோல் இல்லை என்று சொல்கிறார்கள். மழைக் காலங்களில் அதிகமாக பார்சல் போகும்’’ என்றார்.

மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடை...!

செய்முறை

முள்முருங்கை வடை செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை பற்றி விசாரித்தோம், ‘‘இட்லி அரிசி, அந்த அளவைவிடக் குறைவாகப் பச்சரிசி, அதில் சிறிது உளுந்து சேர்த்து ஊற வைக்க வேண்டும். முள்முருங்கை இலையைச் சுத்தம் செய்து அதனுடன் சீரகம், மிளகு, தேவையான அளவு உப்பைச் சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அரைத்த எல்லா மாவையும் சப்பாத்திமாவுப் பதத்துக்குக் கொண்டு வர, அதன்மீது பச்சரிசி மாவைக் கொஞ்சம் கலந்து பிசைய வேண்டும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி, துணிமீது வைத்து பூரி போல் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். அதற்கு மேல் தூவும் பருப்புப்பொடிக்கு உளுத்தம்பருப்பு, பொரிகடலை, மிளகாய் வற்றல், மிளகு, உப்பு கலந்து சட்டியில் வறுக்க வேண்டும். பின்பு அவற்றை அரைத்துப் பொடியாக்க வேண்டும்.’’