Published:Updated:

டிரை ஃப்ரூட் சிக்கி | டிரை ஃப்ரூட் குக்கீஸ் | டிரை ஃப்ரூட் பிக்கிள் - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸுக்கு பதில் டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கம் கடந்த வருடங்களில் அதிகரித்திருக்கிறது. அப்படிச் சேர்ந்துபோன டிரை ஃப்ரூட்ஸையும் நட்ஸையும் வைத்து இந்த வார வீக் எண்டுக்கு ஸ்பெஷல் மெனு ரெடி பண்ணுங்களேன்...

தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸுக்கு பதில் டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கம் கடந்த வருடங்களில் அதிகரித்திருக்கிறது. அப்படிச் சேர்ந்துபோன டிரை ஃப்ரூட்ஸையும் நட்ஸையும் வைத்து இந்த வார வீக் எண்டுக்கு ஸ்பெஷல் மெனு ரெடி பண்ணுங்களேன்...

டிரை ஃப்ரூட் சிக்கி

தேவையானவை:

பாதாம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை – கால் கப்
வறுத்த வெள்ளை எள் – கால் கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

டிரை ஃப்ரூட் சிக்கி
டிரை ஃப்ரூட் சிக்கி

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாகத் தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கிக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

டிரை ஃப்ரூட் குக்கீஸ்

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்
பொடித்த ஓட்ஸ் – அரை கப்
வெண்ணெய் – அரை கப்
துருவிய வெல்லம் – அரை கப்
பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு

டிரை ஃப்ரூட் குக்கீஸ்
டிரை ஃப்ரூட் குக்கீஸ்

செய்முறை:

கோதுமை மாவுடன் ஓட்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். வெண்ணெயுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உலர்திராட்சை, நறுக்கிய பாதாம், முந்திரி, மாவு கலவை சேர்த்துக் கலக்கவும். சுத்தமான சமையல் மேடையில் நெய் தடவி, இந்தக் கலவையைக் கொட்டி, கனமான சப்பாத்தியாகத் தேய்க்கவும். பிறகு, குக்கி கட்டர் கொண்டு துண்டுகளாக்கவும் (கத்தி கொண்டும் செய்யலாம்). 180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து ஓரங்கள் லேசாக பழுப்பு நிறமானதும் எடுக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு மீண்டும் 2 - 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறிய பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிரை ஃப்ரூட் பிக்கிள்

தேவையானவை:

நறுக்கிய பாதாம் – அரை கப்
உலர்திராட்சை – அரை கப்
தர்பூசணி விதைகள் – கால் கப்
நறுக்கிய பேரீச்சம்பழம் – கால் கப்
நறுக்கிய முந்திரி – கால் கப்
வெல்லம் – 2 கப்
தண்ணீர் – முக்கால் கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

டிரை ஃப்ரூட் பிக்கிள்
டிரை ஃப்ரூட் பிக்கிள்

செய்முறை:

வாணலியில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் நட்ஸ் வகைகள் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் கெட்டியாகும்போது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.

டிரை ஃப்ரூட் - பைனாப்பிள் ரோல்

தேவையானவை:

சதுரமாக நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகள் – 2 கப்
தர்பூசணி விதை – ஒரு கப்
(வறுத்துப் பொடிக்கவும்)
சர்க்கரை – ஒரு கப்
குங்குமப்பூ – சிறிதளவு
வெதுவெதுப்பான பால் – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பாதாம் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்

டிரை ஃப்ரூட் - பைனாப்பிள் ரோல்
டிரை ஃப்ரூட் - பைனாப்பிள் ரோல்

செய்முறை:

பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியைக் கலந்துகொள்ளவும். வாணலியில் அன்னாசிப்பழத் துண்டுகளுடன் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கிளறி ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு அன்னாசிப்பழ விழுது, சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, 5 - 7 நிமிடங்கள் கிளறவும். இதனுடன் தர்பூசணி விதைப்பொடி சேர்த்து நன்கு கிளறவும் (20 - 25 நிமிடங்கள் வரை). பிறகு, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை 10 சம பாகங்களாகப் பிரித்து சிலிண்டர் வடிவில் உருட்டவும். ஒவ்வொரு உருண்டையையும் நட்ஸ் கலவையில் புரட்டி எடுத்துப் பரிமாறவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தும் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு