Published:Updated:

விரால் மீன் ரோஸ்ட் | இறால் மசால் | நாட்டுக்கோழி சாப்ஸ் | நண்டு மசால் - கார சார வீக் எண்ட் ரெசிப்பீஸ்

வீக் எண்ட் ரெசிப்பீஸ்
வீக் எண்ட் ரெசிப்பீஸ்

கொரோனா வந்தாலும் வந்தது... பலரும் வெளியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள். அசைவ ஹோட்டல் ருசியில் வீட்டிலேயே இந்த வார வீக் எண்டுக்கு விதம் விதமாக விருந்து சமைத்துச் சாப்பிடுங்களேன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வந்தாலும் வந்தது... பலரும் வெளியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள். கல்யாணங்கள், விசேஷங்களில் விருந்து சாப்பிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், நாக்கு செத்துப் போயிருக்கிறது பலருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் காரசாரமான இந்த ரெசிப்பீஸ்... அசைவ ஹோட்டல் ருசியில் வீட்டிலேயே இந்த வார வீக் எண்டுக்கு விதம் விதமாக விருந்து சமைத்துச் சாப்பிடுங்களேன்...

விரால் மீன் ரோஸ்ட்

தேவையானவை:

விரால் மீன் - ஒரு கிலோ
பூண்டு - 30 கிராம்
இஞ்சி - 10 கிராம்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 15 கிராம்
கொத்தமல்லித்தழை - 5 கிராம்
மஞ்சள்தூள் - 5 கிராம்
சோம்பு - 3
சீரகம் - 2
மிளகு - 15 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 20 கிராம்
எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

விரால் மீன் ரோஸ்ட்
விரால் மீன் ரோஸ்ட்

செய்முறை:

மீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை, மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்தெடுத்துப் பரிமாறவும்.

இறால் மசால்

தேவையானவை:

இறால் - ஒரு கிலோ
கடலை எண்ணெய் - 100 மில்லி
சோம்பு - 2 கிராம்
பட்டை - ஒரு கிராம்
கிராம்பு - ஒரு கிராம்
அன்னாசிப்பூ - ஒரு கிராம்
ஏலக்காய் - ஒரு கிராம்
பிரிஞ்சி இலை - ஒரு கிராம்
வெந்தயம் - ஒரு கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிராம்
பச்சைமிளகாய் - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
பூண்டு விழுது - 40 கிராம்
இஞ்சி விழுது - 20 கிராம்
மஞ்சள்தூள் - 3 கிராம்
தக்காளி - 80 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
மிளகாய்த்தூள் - 30 கிராம்
எலுமிச்சைப்பழம் - ஒரு பழம் (சாறு எடுத்துக்கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

இறால் மசாலாவுக்கு:

சோம்பு - 4 சிட்டிகை
சீரகம் - சிட்டிகை
மிளகு - 15 கிராம்
ஏலக்காய் - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2 (இவற்றை வெறும் சட்டியில் வறுத்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவும்.)

இறால் மசால்
இறால் மசால்

செய்முறை:

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், இறால் மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நன்கு சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து வதக்கவும். இறால் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாட்டுக்கோழி சாப்ஸ்

தேவையானவை:

நாட்டுக்கோழிக் கறி - 500 - 600 கிராம்
நல்லெண்ணெய் - 100 மில்லி
சோம்பு - ஒரு கிராம்
பட்டை - ஒரு கிராம்
கிராம்பு - ஒரு கிராம்
அன்னாசிப்பூ - ஒரு கிராம்
ஏலக்காய் - ஒரு கிராம்
பிரிஞ்சி இலை - ஒரு கிராம்
வெந்தயம் - ஒரு கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு விழுது - 30 கிராம்
இஞ்சி விழுது - 20 கிராம்
மஞ்சள்தூள் - 2 கிராம்
தக்காளி - 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
மிளகாய்த்தூள் - 30 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் மசாலா - 50 கிராம்
(துருவிய அரை மூடி தேங்காய், முந்திரி-20 கிராம், கசகசா-10 கிராம் இவற்றை எல்லாம் மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும்)

நாட்டுக்கோழி மசாலா:
சோம்பு - 4 சிட்டிகை
சீரகம் - 3 சிட்டிகை
மிளகு - 15 கிராம்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று (இவற்றை வெறும் சட்டியில் வறுத்து அம்மியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.)

நாட்டுக்கோழி சாப்ஸ்
நாட்டுக்கோழி சாப்ஸ்

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். சிவந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நாட்டுக்கோழி மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நாட்டுக்கோழியைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்க்கவும். இத்துடன் தேங்காய் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கோழியை வேகவைத்து, சரியான பதத்தில் அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

நண்டு மசால்

தேவையானவை:

நண்டு - ஒரு கிலோ
கடலை எண்ணெய் - 100 மில்லி
சோம்பு - 2 கிராம்
பட்டை - 2 கிராம்
கிராம்பு - ஒரு கிராம்
அன்னாசிப்பூ - 2 கிராம்
ஏலக்காய் - ஒரு கிராம்
பிரிஞ்சி இலை - ஒரு கிராம்
வெந்தயம் - 3 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 50 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
பூண்டு விழுது - 40 கிராம்
இஞ்சி விழுது - 20 கிராம்
மஞ்சள்தூள் - 3 கிராம்
தக்காளி - 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 60 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்
மிளகு மற்றும் சீரகத்தூள் - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய் மசாலா - 100 கிராம்

தேங்காய் மசாலா செய்ய:

தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
முந்திரி - 20 கிராம்
கசகசா - 10 கிராம்
(இதனை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும். இதுதான் தேங்காய் மசாலா.)

நண்டு மசாலா தயாரிக்க:
சோம்பு - 4
ஏலக்காய் - ஒன்று
சீரகம் - 3 சிட்டிகை
மிளகு - 5 கிராம்
பட்டை - ஒரு துண்டு

மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.

நண்டு மசால்
நண்டு மசால்

செய்முறை:

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நண்டு மசாலா சேர்த்து நன்கு வதக்கிய பின், தேங்காய் மசாலா சேர்க்கவும். கலவை சற்று வதங்கியவுடன் நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகு மற்றும் சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு